கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் தொடர்ந்து தள்ளிப்போவதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான கார்த்தி கடைசியாக மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் கங்குவா படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அடுத்த மாதம் 5ஆம் தேதி இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் வா வாத்தியார் திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இதன் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகத்திலும் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இவருடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஏறத்தாழ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த படம் எப்போது திரைக்கு வரும்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
அதன்படி இப்படம் 2026 மார்ச் அல்லது ஏப்ரலில் திரைக்கு வர வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில் தற்போது இப்படத்தை 2026 மே மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


