துல்கர் சல்மானின் காந்தா படத்தை வெளியிட தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் காந்தா. செல்வமணி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பாக்கியஸ்ரீ போர்ஸ், ராணா டகுபதி, சமுத்திரக்கனி ஆகியோர் துல்கர் சல்மான் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை துல்கர் சல்மானின் வேப்பரர் ஃபிலிம்ஸ் நிறுவனமும், ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. ஜானு சந்தர் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படமானது எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
மேலும் இந்த படமானது வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி எம்.கே. தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரன் தியாகராஜன், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதாவது இந்த படத்தை எடுப்பதற்கு முன்பாக தியாகராஜ பாகவதரின் சட்டபூர்வ வாரிசுகளின் அனுமதி பெற்று இருக்க வேண்டும். தியாகராஜ பாகவதரை பற்றி அவதூறான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவரைப் பற்றி அவதூறாக சித்தரித்து எடுக்கப்பட்டிருக்கும் ‘காந்தா’ படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சென்னை உரிமையியல் நீதிமன்றம் ‘காந்தா’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது தொடர்பாக பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு இந்த வழக்கை வருகின்ற நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதன் மூலம் இந்த படம் சொன்னபடி திரைக்கு வருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- Advertisement -


