விடாமுயற்சி பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மகிழ் திருமேனி தமிழ் சினிமாவில் ‘முன்தினம் பார்த்தேனே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர், அருண் விஜய் நடிப்பில் தடையறத் தாக்க, தடம் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும் அஜித்தை வைத்து ‘விடாமுயற்சி’ திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து மகிழ் திருமேனி என்ன படம் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
அதன்படி இவருடைய அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இயக்குனர் மகிழ் திருமேனி, விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாகவும், சஞ்சய் தத் வில்லனாகவும் நடிக்க உள்ளார்கள் எனவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இந்த படம் தொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட வெற்றிகரமாக முடிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் மும்பையைச் சேர்ந்த மிராக்கில் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. பேச்சுவார்த்தை முடிந்து எல்லாம் சரியாக நடந்தால் இந்த படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் ஒரே நேரத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.


