ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதைத் தொடர்ந்து இவர் சூர்யா, விக்ரம், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் தற்போது ரிவால்வர் ரீட்டா எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், தி ரூட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இதில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், கேங்ஸ்டர்களிடம் மாட்டிக்கொண்ட தன்னுடைய குடும்பத்தை புத்திசாலித்தனமாக எப்படி காப்பாற்றுகிறார்? என்பதுதான் இந்த படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப்போன இந்த படம் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (நவம்பர் 13) மாலை 6.30 மணி அளவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் அதனை விஜய் சேதுபதி வெளியிட உள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


