நடிகர் துல்கர் சல்மான் தனது புதிய படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பான் இந்திய நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் ‘காந்தா’ திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் வெற்றி நடைபோட்டு வருகிறது. அதே சமயம் இவர் தனது 41வது திரைப்படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் இவர், ஆர்டிஎக்ஸ் (RDX) படத்தின் இயக்குனர் நகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். இந்த படத்திற்கு ‘ஐம் கேம் – I’M GAME‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மிஸ்கின், கதிர், ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை துல்கர் சல்மானின் வேப்பரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இதற்கு இசையமைக்கிறார். ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படமானது மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் இப்படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “தற்போது நான் ‘ஐம் கேம்’ படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் ஒரு கமர்சியல் வைப் படம். இதன் திரைக்கதையில் ஒரு ஸ்பெஷல் குவாலிட்டி இருக்கிறது. அது எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். கமர்சியல் ரீதியாக இது ஒரு அழகான கதை. இதில் கமர்சியல் எலமெண்ட்ஸ், ஆக்சன் எல்லாமே கதைக்குள் இயல்பாகவே வரும். திணிக்கப்பட்டது மாதிரி இருக்காது” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.


