பிரதீப் ரங்கநாதன், தனது முதல் படத்திலிருந்து இணை இயக்குனராக பணியாற்றிய தனது நண்பனுக்கு பரிசு வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன், ரவி மோகன் நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய ‘லவ் டுடே’ திரைப்படம் இந்தியாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரதீப். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்திருந்த டிராகன், டியூட் ஆகிய இரண்டு படங்களுமே ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. அடுத்தது இவருடைய ‘எல்ஐகே’ திரைப்படம் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், தனது முதல் படத்திலிருந்து இணை இயக்குனராக பணியாற்றிய தனது நண்பன் ரமேஷ் நாராயணனுக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பிரதீப் ரங்கநாதன், தனது நண்பனிடம், “உன் விஸ்வாசத்திற்கு என்னுடைய இந்த பரிசு மிகவும் சின்னது. இது வெறும் ஆரம்பம் தான். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். லவ் யூ. மிகவும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -


