வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் இரண்டையும் போக்க சிறந்த மருந்து என்றால் இந்த கீரையை கூறலாம்.
இன்றையக் கால கட்டத்தில், ஒரு சிறிய வாய்ப்புண் வந்தால் கூட மாத்திரைகளை எடுத்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. எந்த நோயாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்துவிட்டால், நம் உணவுப் பழக்கங்கள் மூலமாகவே அதனை குணப்படுத்திவிட முடியும். சீக்கிரமாகவே வலி சரியாக வேண்டுமென்று, மாத்திரை மருந்துகளை நாம் எடுக்கிறோம். அதனால் தான் இயற்கை வைத்தியங்களின் மகிமை யாருக்குமே தெரிவதில்லை. ஆனால் இயற்கை வைத்தியங்களும் விரைவில் ஒருவரை குணப்படுத்தும் என்பதே உண்மை.
கீரைகளில் அவ்வளவு சத்துகள் அடங்கி இருக்கிறது. தினசரி அடிப்படையில் ஒரு வகை கீரையை கிண்ணம் அளவு சாப்பிட்டாலே பல்வேறு நோய்களை விரட்டி விடலாம் என்று மருத்துவா்கள் கூறுகின்றனா். ஒவ்வொரு கீரை வகைக்கும் ஒவ்வொரு நோயை குணப்படுத்தும் தன்மை உள்ளது. அதில் இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது மணத்தக்காளி கீரை வகை பற்றி தான்.
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் இரண்டையும் போக்க சிறந்த மருந்து என்றே கூறலாம். இந்த மணத்தக்காளி கீரையை அப்படியே மென்றும் சாப்பிடலாம், சாறு எடுத்தும் அருந்தலாம். அதுமட்டுமின்றி துவையல் செய்தும் சாப்பிடலாம்.இதன் பசுமையான இலைகளை ஒரு நாளைக்கு 5 இலைகள் வீதம் அப்படியே மென்று சாப்பிடுவது மிகவும் உடல் நலத்திற்கு சிறந்தது. ஒரு வேலை அவ்வாறு எடுத்துக் கொள்ள உங்களுக்கு பிடிக்கவில்லையெனில், மணத்தக்காளி இலைகளை பறித்து அதனுடன் நெய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அரைத்துத் துவையல் போன்று செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
இதன் இலைகளை இடித்து சிறிது சாறு எடுத்து அதனையும் அருந்தலாம். இந்த கீரையை தேங்காய் பாலுடன் சோ்த்து, சூப்பாகவும் பருகலாம். மிகுந்த சுவையுடன் இருக்கும். வயிற்று புண்ணால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி உணவில் மணத்தக்காளி கீரையை சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும்.



