தமிழகத்திற்கு மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக போராடதவர்கள், எந்த இடத்தில் விளக்கு ஏற்றுவது என்பதற்காக கலவரம் செய்கிறார்கள் என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.


சென்னை கோடம்பாக்கத்தில் திராவிட மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- எது மக்களுக்கு நல்லது என்று எல்லோரும் சிந்தியுங்கள். நடைமுறையோடு சிந்தியுங்கள். கடவுளை வணங்குபவர்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். தோப்பூர் என்ற இடத்தில் 2019ஆம் தேதி ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அந்த மருத்துவமனை ஏன் இன்னும் வரவில்லை என்று யாராவது போராட்டம் செய்தார்களா? ஆனால் திருப்பரங்குன்றம் மலையில் எந்த தூணில் விளக்கு ஏற்றுவது என்பது முக்கியமா?

கொரோனா காலத்தில் அனைத்து மருத்துவமனைகளும் திறந்திருந்தன, அனைத்து கோயில்களும் மூடி இருந்தன. உண்மையில் இஸ்லாமிய பெரியவர்களுடன் அமர்ந்து அங்கு விளக்கேற்றுவது தொடர்பாக பேசினால் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்று தான் நினைக்கிறேன். அந்த தூணில் விளக்கேற்றுவதால் இஸ்லாமியர்களுக்கும் எதுவும் குறைந்து போவதில்லை. இந்த கோவிலை சார்ந்தவர்களுக்கு எதுவும் கிடைத்துவிடப் போவதுமில்லை. இஸ்லாமிய பெரியவர்கள் அங்கு விளக்கேற்ற ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் ஒப்புக்கொண்டால், இவர்கள் விளக்கேற்ற போவது கூட இல்லை. கலவரம் வராது என்றால் விளக்கேற்ற மாட்டார்கள்.

மக்களை காப்பாற்ற வேண்டும் என்று காவல்துறை ஆணையர் செயல்பட்டார். அவர் ஏன் இப்படி செயல்படுகிறார் என்று பேசிய அதே நபர் தான் உயர்நீதிமன்றமாவது மயிராவது என்று கூறினார். நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன் செய்தியாளர் சந்திப்பில் ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் போல் பேசினார். நீதிமன்றத்தில் அடிமைப் பெண் எம்ஜிஆர் போல் பேசினார். இதற்காக எம்ஜிஆர் என்னை மன்னிக்க வேண்டும். மதுரை காவல் ஆணையர் உங்கள் செருப்புக்கு சமம் என்றால், நீங்கள் செருப்பில் ஒட்டியிருக்கும் தூசிக்கு கூட சமமில்லை. தமிழகத்திற்கு வர வேண்டிய மெட்ரோ மறுக்கப்படுகிறது, மருத்துவமனை தொடங்கப்படாமல் உள்ளது, நமக்கான நன்மைகள் மறுக்கப்படுகின்றன. எந்த இடத்தில் விளக்கு ஏற்றுவது என்பதற்காக கலவரம் வருகிறது என்றால், அவர்கள் உங்களுக்கு எதிரானவர்கள் இந்துக்களே கவனமாக இருங்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


