Homeசெய்திகள்அரசியல்காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - அறிவகம் முதல் அறிவாலயம் வரை!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அறிவகம் முதல் அறிவாலயம் வரை!

-

- Advertisement -

பாரத் ஸ்ரீமன் அழகேசன்

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து வெவ்வேறு இடங்களில் அதன் தலைமையகங்கள் செயல்பட்டிருக்கின்றன. இவை வேறு எந்தவொரு அரசியல் இயக்கத்திற்குமில்லாத பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கின்றன. அக்காலகட்டத்தில் கட்சியின் தலைமை நிலையத்திற்கு அறிவகம், அன்பகம், அண்ணா அறிவாலயம் என்று பெயரிடுவதில் தொடங்கி, தி.மு.கழத்தை அறிவு நிறை இயக்கமாக வளர்த்தெடுக்க பேரறிஞர் அண்ணாவும் அவரைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - அறிவகம் முதல் அறிவாலயம் வரை!

அறிவகம்

திமுக தொடங்கப்பெற்ற நேரத்தில், கழகத்திற்கென தனி அலுவலகம் எதுவுமில்லாமல், சென்னைப் பவழக்காரத் தெரு, சண்முகம் அவர்களின் இல்லமே தொடக்ககால தலைமை நிலையமாகச் செயல்பட்டது. ஓராண்டுக்குள் 12 மாவட்டக் கழகங்களையும் 505 கிளைக் கழகங்களையும் 35000 உறுப்பினர்களையும் பெற்று, கழகம் வளர்ந்தது. நாளுக்கு நாள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வருகைதரும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், தனி அலுவலகம் அத்தியாவசியமானது.

we-r-hiring

எனவே, சென்னை தங்கசாலைத் தெருவில், 202, எண்ணிலிருந்த பேரறிஞர் அண்ணாவின் நண்பர் எட்டியப்பனுக்குச் சொந்தமான கட்டிடம் வாடகைக்கு எடுக்கப்பெற்று. தி.மு.கழகத்தின் அதிகாரபூர்வ தலைமை நிலையமாக 1950 ஆகஸ்ட்மாதத்திலிருந்து செயல்படத் தொடங்கியது. (திராவிடநாடு, 27.08.1950) அன்றைய சூழலில், பல வேளைகளில் பேரறிஞர் அண்ணா, காஞ்சிபுரம் 96, திருக்கச்சி நம்பித் தெருவில் இருந்த திராவிடநாடு இதழின் அலுவலகத்தில் இருந்தபடியே கட்சிப் பணிகளைக் கவனித்தும் இடையிடையே சென்னைத் தலைமை நிலையத்திற்கு வந்துபோய்க் கொண்டும் இருந்தார்.

தற்காலிகமாகத் தலைமைக் கழகம் மேற்கூறிய இடத்தில் செயல்பட்டு வந்தாலும், கழகத்திற்கென சொந்தமாக ஓர் இடம் வேண்டுமென்று பேரறிஞர் அண்ணா விரும்பினார். இதற்காக, நகரின் பல்வேறு பகுதிகளில் இடங்கள் பார்க்கப்பட்டு, இறுதியாகப் பேரறிஞர் அண்ணாவின் நண்பர் பி.என்.சம்பந்தம் அவர்கள், சென்னை இராயபுரம் சூரியநாராயண செட்டித் தெருவில் 24ஆம் எண்ணில் இருந்த கட்டிடத்தைத் தேடிக்கொடுத்தார். நவம்பர் 05, 1951ல், 30,000 ரூபாய்க்கு கட்டிடம் தி.மு. கழகத்திற்காக வாங்கப்பட்டது. இரண்டு மாடிகள் கொண்ட இக்கட்டிடத்தில் மிக விசாலமான தாழ்வாரங்கள், அறைகள், கூடங்கள், மிகப் பெரிய தோட்டம், கிணறு, குழாய், மின்சார வசதிகள் என அனைத்தும் அமைந்திருந்தது என்றும் இனி தலைமைக் கழகத்தின் காரியாலயம் இக்கட்டிடத்திலேயே பணியாற்றும் என்றும் நவம்பர் 18, 1951 தேதியிட்ட ‘திராவிடநாடு’ இதழில், கட்டிடத்தின் படத்தோடு பேரறிஞர் அண்ணா வெளியிட்டார்.

இந்த முப்பாதாயிரம் ரூபாயைத் திரட்ட கழகத்தின் சார்பில் அண்ணா எழுதிய ‘சந்திரமோகன்’ நாடகத்தை நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி தனது குழுவினருடன் மாநிலத்தின் பல பகுதிகளில் நடத்தினார். 1951 டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய நாட்களில் கழகத்தின் முதல் மாநில மாநாடு சென்னையில் நடைபெற இருந்த சமயத்தில், டிசம்பர் 02ஆம் நாள் மாலை 06 மணிக்கு நாகர்கோவில் வி.எம். ஜான் திறந்துவைத்தார்.வி.எம்.ஜான், பிற்காலத்தில் நாஞ்சில் மாவட்டக் கழகச்செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர்.

அவர் தலைமைக் கழகத்திற்காக அதிக நிதி பெற்றுக்கொடுத்ததைத் தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா அவரைத் திறந்துவைக்கச் செய்து, கட்டிடத்திற்கு ‘அறிவகம்’ என்று பெயர் சூட்டினார். ஏப்ரல் 25, 1952ல் இருந்து அறிவகத்தில் தி.மு. கழகத்தின் தலைமை நிலையம் செயல்படத் தொடங்கியது என்பதை செப்டம்பர் 28, 1952ல் வெளியான திராவிடநாடு – தி.மு.க. மூன்றாம் ஆண்டு மலரின்வழி அறிகிறோம்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - அறிவகம் முதல் அறிவாலயம் வரை!

1953 ஜூலையில் தி.மு.கழகத்தின் அதிகாரபூர்வ நாளிதழாக ‘நம்நாடு’ தொடங்கப்பட்டது. இதை அச்சடிக்க, அறிவகத்தில் அழகிரி அச்சகம் என ஓர் அச்சகம் உருவாக்கப்பட்டது. 1972ல் ‘நம்நாடு’ நின்றுபோன பிறகு 1976ல் சி.சிட்டிபாபு அவர்களை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பெற்ற ‘கழக்குரல்’ வார இதழும் அழகிரி அச்சகத்திலேயே அச்சடிக்கப்பட்டது. சி.சிட்டிபாபு அவர்களின் மரணத்திற்குப் பிறகு கழக்குரல் நின்றுபோகவே, கலைஞரை ஆசிரியராகக் கொண்டு நம்நாடு வார இதழாக வெளிவரத் தொடங்கியபொழுது, அதுவும் அழகிரி அச்சகத்திலேயே அச்சிடப்பட்டது. இப்பொழுதும் அறிவகத்தில் கழகக்கூட்டங்கள், திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அன்பகம்

1956 திருச்சி திருப்புமுனை மாநாட்டைத் தொடர்ந்து, தி.மு.கழகம் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடத் தொடங்கியது. 1957 தேர்தலில் 15 சட்டமன்ற உறுப்பினர்களையும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெற்ற தி.மு.கழகம், 1962 தேர்தலில் 50 சட்டமன்ற உறுப்பினர்களையும் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றது. இதனால் அறிவகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் இயல்பாகவே அதிகரிக்கத் தொடங்கியது. வடசென்னையில் அறிவகத்தைப் போலவே தென்சென்னையிலும் ஒரு கட்டிடத்தைக் கழகத்திற்கெனச் சொந்தமாக வாங்கவேண்டுமென முடிவெடுக்கப்பட்டு, அன்றைய கழகப் பொருளாளர் முத்தமிழறிஞர் கலைஞரிடம் பேரறிஞர் அண்ணா பொறுப்பை ஒப்படைத்தார்.

இரவு பகல் பாராது அதற்காக உழைத்த கலைஞர் இறுதியாக, தேனாம்பேட்டை மவுண்ட் ரோடில் (தற்பொழுது அண்ணா சாலை) கட்டிடமொன்றை வாங்கினார். இதனை நாவலர் இரா.நெடுஞ்செழியன் தலைமையில் பேரறிஞர் அண்ணா, ஜூலை 14, 1964ல் திறந்துவைத்தார். திறப்பு விழாவில் பேசிய பேரறிஞர் அண்ணா, “இந்த அழகிய கட்டிடம், நமது கழக வளர்ச்சியின் ஓர் அத்தியாயமாகும். முதலில் வடசென்னையில் நாம் வாங்கிய கட்டிடத்துக்கு ‘அறிவகம்’ என்று பெயர் கழக சூட்டினோம். அந்த ‘அறிவகம்’ அரசியல் உலகில் நன்கு அறிமுகம் ஆகி. எல்லா மக்களாலும் மதிக்கத்தக்க வளர்ச்சியைத் தி.மு.கழத்திற்குப் பெற்றுத்தந்திருக்கிறது. நம்முடைய வளர்ச்சியின் பலனாக அலுவலகம் சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் இருந்தால் போதாது என்று கருதி – ‘நன்கு வளர்ச்சிபெற்றுள்ள தென்சென்னைப் பகுதியிலும் ஒரு கட்டிடம் தேவை’ என்று நினைத்ததால், இதை வாங்கியிருக்கிறோம்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - அறிவகம் முதல் அறிவாலயம் வரை!

தம்பி கருணாநிதியைப் பொருளாளராகப் பெற்ற அன்றே, இதைப்போன்ற சொத்துகளையெல்லாம் கழகத்துக்கு அவர் சேர்ப்பார் என்று நம்பியது வீண்போகவில்லை. நான் மருத்துவமனையில் இருந்தபோது இந்தக் கட்டிடம் வாங்கப்பட்டது. பரோலில் விடுதலை பெற்று வந்து மீண்டும் சிறைக்குப் போவதற்கு முன், இந்தக் கட்டிடத்தைப் பார்த்துவிட்டுத்தான் சென்றேன். சிறையிலிருந்து விடுதலைபெற்று வரும்போது, இந்தத் திறப்புவிழா நடைபெறுகிறது. இதற்குப் பெயர் சூட்டுமாறு நண்பர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். முதலில் நாம் வாங்கிய கட்டிடத்திற்கு, ‘அறிவகம்’ என்று பெயர் சூட்டினோம். இந்தக் கட்டிடத்திற்கு ‘அன்பகம்’ என்று பெயர் சூட்டுகிறேன்.

அறிவிலிருந்து பிறப்பது அன்பு. ‘அறிவிலிருந்து அன்பு மட்டுமா பிறக்கும்? அதிகாரம் பிறக்காதா? அகம்பாவம் பிறக்காதா? என்று கேட்கலாம். வேறு எது பிறந்தாலும் அன்பு பிறப்பதுதான் இயல்பு. பெரும்பாலான மிருகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். ‘பெரும்பாலான மிருகங்களுக்கு’ என்று ஏன் குறிப்பிட்டேன் என்றால், சில மிருகங்களுக்கு அன்பு பிறப்பு இயல்பு” என்று கட்டிடத்திற்கு ‘அன்பகம்’ எனப் பெயர் சூட்டியதற்கான காரணத்தையும் சுவைபட விளக்கினார்.

1987ஆம் ஆண்டிலிருந்து அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கழகத்தின் தலைமையகம் செயல்படத் தொடங்கிய பிறகு, அன்பகத்தைத் தங்களின் பயன்பாட்டிற்குக் கொடுக்க வேண்டுமென்று கழக இளைஞர் அணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை, சென்னை மாவட்டக் கழகம் ஆகிய மூன்றும் தலைவர் கலைஞரிடம் கோரிக்கை வைத்தன. ‘முதலில் பத்து லட்சம் ரூபாய் திரட்டிக் கொடுப்பவர்களுக்கே அன்பகம் ஒதுக்கப்படும்’ என்று கலைஞர் அறிவிக்க, அன்றைய இளைஞரணிச் செயலாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இளைஞர் அணி நிகழ்ச்சிகளை நடத்தி, நிதி திரட்டி தலைமையிடம் அளித்து, அன்பகத்தைத் தி.மு.க. இளைஞரணியின் தலைமையகமாக மாற்றினார். அதனை ஜூலை 03, 1988ல் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் இனமானப் பேராசிரியர் தலைமையில் திறந்து வைத்தார். புதுப்பிக்கப்பட்ட அன்பகத்தை மார்ச் 01, 2009ல் பேராசிரியர் தலைமையில் கலைஞர் திறந்துவைத்தார்.

இப்போது, தமிழ்நாடு துணை முதலமைச்சரும் கழக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இளைஞர் அணி அன்பகத்தில் திறம்பட செயல்படுகிறது. இளைஞரணியின் சார்பாகத் தொகுதிதோறும் அமைக்கப்பட்டுவரும் கலைஞர் நூலகங்களுக்கு முன்மாதிரியாக அன்பகம் வளாகத்திற்குள் கலைஞர் பெயரில் நூலகம் ஒன்றும் அமைந்திருக்கிறது. மேலும், நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்வதற்காக ‘அண்ணா மன்றம்’ என்று ஓர் அரங்கமும் அமைந்திருக்கிறது.

அண்ணா அறிவாலயம்

அறிவகம், அன்பகம் இரண்டும் இயங்கிக்கொண்டிருந்த சமயத்திலேயே தேனாம்பேட்டையில் அன்பகத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு பெரிய இடம், தி.மு.கழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக 1972ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. அதில், திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளையின் கீழ் இலவசக் கண்ணொளி வழங்கும் நிலையம், மணவிழாக்கூடம், நூல் நிலையம், படிப்பகம், இலக்கிய வரலாறு – அறிவியல் ஆய்வுகளுக்கான நிறுவனம் முதலிய பலவற்றையும் உள்ளடக்கிய அண்ணா அறிவாலயம் அமைக்க வேண்டுமென்று கலைஞர் விரும்பினார். ஆனால், நிதிப்பற்றாக்குறையினால் பணிகள் மெதுவாகவே நடைபெற்றுவந்தன.

தமிழ்நாடு அரசினர் தோட்டத்தில் இருந்த தி.மு.கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் அறையைக் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, மே 30, 1985ல் காவல் துறையினரைக் கொண்டு அடாவடியாக அன்றைய அ.இ.அ.தி.மு.க அரசு காலிசெய்தது. இது குறித்து கலைஞர் ஜூன் 07, 1986 முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில், “அண்ணாவுக்குப் பிறகு யாரை கட்சித் தலைவனாக ஏற்றுக்கொண்டார்களோ – யாரை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருந்தார்களோ -அந்த கருணாநிதியின் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்றக் கட்சிக்கு இப்போதுள்ள இடம் பொருத்தமானதல்ல.

சிறியதோர் அறைக்குச் சென்றிடுக என்று அன்று அமைச்சர்களாக இருந்தவர்களும் கழகப் பொறுப்புகளில் இருந்தவர்களும் இன்றைக்கு ஏறியிருக்கும் கோபுரம் நிரந்தரமானது என எண்ணிக்கொண்டு, நம்மைப் பார்த்து, போ வெளியே! என்று கூறியது மட்டுமல்ல – போலீசாரை விட்டு என்னையும் பேராசிரியரையும் வெளியே இழுத்துவிட்டு – தங்களது நன்றி உணர்வையும் அரசியல் நாகரிகத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - அறிவகம் முதல் அறிவாலயம் வரை!

எங்களையெல்லாம் கைதுசெய்து, போலீஸ் வேனிலே ஏற்றி கமிஷனர் அலுவலகத்திற்குக் கொண்டுசென்றதும், மேலிடத்திலிருந்து ஓர் உத்தரவு வந்ததாம்! தி.மு.க. சட்டமன்றக் கட்சி அலுவலகம் என்ற பெயர்ப்பலகையை உடைத்தெறியுங்கள் என்பதுதான் அந்த உத்தரவு! 1962ஆம் ஆண்டு, அண்ணா அவர்களால் அந்த அலுவலக முகப்பில் திறந்துவைக்கப்பட்ட அந்தப் பலகையை மேலிடத்து உத்தரவின்படி, அதிகாரிகள் சுக்கல் சுக்கலாக உடைத்து நொறுக்கி, அதன்மீது பூட்ஸ் காலுடன் ஏறி நின்று கெக்கலி கொட்டினார்களாம்! என்று தனது ஆதங்கத்தைப் பதிவுசெய்திருந்தார். கலைஞரை மிகவும் பாதித்த இச்சம்பவமே ஆமை வேகத்தில் இருந்த அண்ணா அறிவாலயம் பணிகளை வேகமெடுக்கச் செய்தது.

வெறும் இடம் மட்டுமே இருந்த அன்றைய சூழலில், கட்டிடம் கட்டி முடிக்க ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்டது. அதற்கு, தி.மு.கழகத்தின் ஒவ்வொரு தொண்டரும் பத்து ரூபாய்க்குக் குறையாமல் வழங்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். நாள்தோறும் நிதி வழங்கியவர்களின் பட்டியல் முரசொலியில் வெளியிடப்பட்டது. கட்டிடம் எழத்தொடங்கியதுமே அ.இ.அ.தி.மு.க அரசு பல்வேறு முறைகளில் தொல்லைகளைக் கொடுக்கத் தொடங்கியது.

‘கட்டிடம் கட்டி முடிக்க அனுமதி கேட்ட காலம் கடந்துவிட்டது’ என்று சொல்லி, பணிகளை நிறுத்தவேண்டுமென்று மாநகராட்சி சொன்னது. எனவே, கழகத்தின் சார்பாகக் காலநீட்டிப்பு கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதன்மீது எந்தப் பதிலும் சொல்லாமல், மாநகராட்சி நிர்வாகம் காலந்தாழ்த்தியது. எனவே, இந்தப் பிரச்சினையைச் சட்டமன்றத்திற்குக் கொண்டுசென்று தீர்வு கண்டார் கலைஞர். இறுதியாக, மொத்த இடத்தில் பத்து சதவிகித இடத்தை மாநகராட்சியின் பெயரில் பதியவேண்டுமென்று மாநகராட்சி உத்தரவிட, அதையும் செய்து, கலைஞர் பணிகளைத் துரிதப்படுத்தினார். இறுதியாக, செப்டம்பர் 16, 1987ல் அண்ணா அறிவாலயம் திறப்பு விழா கண்டது.

அதற்கு முன்பு, “நாம் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி சேமித்து அளித்த நிதியல்லவோ; சிறுதுளி பெருவெள்ளமென மாறி -இதோ சென்னை அண்ணா சாலையில் அறிவாலயம் எனச் செம்மாந்து நிற்கிறது என்ற பெருமிதத்துடன் குடும்பம் குடும்பமாக செப்டம்பர் 16ஆம் நாளன்று கூடுகின்ற காட்சி கண்டு; உடன்பிறப்பே! உன் மனம் துள்ளும்! உடன்பிறப்பே; இந்த அறக்கட்டளை இன்று மட்டுமல்ல; எதிர்காலத்திலேகூட உன் போன்றோரால் தலைமைக் கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் என்ற பொறுப்புகளுக்கு யார் வருகிறார்களோ; அவர்களையும் தேர்ந்தெடுக்க கழகச் செயற்குழு உறுப்பினர்களில் இருந்து நியமிக்கப்படும் இரு அறங்காவலர்களையும் கொண்டு இயங்கக்கூடிய வகையில் ஜனநாயக அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள காரணத்தால், இது உனக்கு உரிமையுடைய அறக்கட்டளை உன் உழைப்பால் தழைக்கக்கூடிய அறக்கட்டளை இந்த அறக்கட்டளை எழுப்பிடும் அண்ணா அறிவாலயம், முழுக்க முழுக்க உன் வியர்வையின் விளைவு! அந்த விளைவின் வெற்றி அறுவடை” என்று அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவிற்கு அழைத்ததோடு, திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளை குறித்தும் முத்தமிழறிஞர் கலைஞர் தொண்டர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

பேராசிரியர் தலைமையில், முத்தமிழறிஞர் கலைஞர், அண்ணா அறிவாலயத்தைத் திறந்துவைத்தார். பேரறிஞர் அண்ணாவின் துணைவியார்-இராணி, விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். விழாவில் முப்பெரும் விழாவில் வழங்கப்படும் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள்முறையே நீலநாராயணன், நாஞ்சில் கி.மனோகரன், பொற்செல்வி இளமுருகு ஆகியோருக்கு வழங்கப்பட்டன. மேலும், அண்ணா அறிவாலயத்திற்கு அதிக நிதி திரட்டிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்களுக்குக் கணையாழியும் கேடயமும் வழங்கப்பட்டன.

இந்தியாவில் வேறு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இல்லாத சிறப்பாக, அண்ணா அறிவாலயத்தினுள் ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட பேராசிரியர் ஆய்வக நூலகம் செயல்படுகின்றது. இந்நூலகத்தோடு. கழகத்தின் முன்னோடி, குளித்தலை இளமுருகு பொற்செல்வி நடத்திவந்த பல்கலைப் புலவர் கா.சு.பிள்ளை நூலகமும் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் அனைத்து நாளேடுகளும் சேகரிக்கப்பட்டுவருகின்றன. அத்தோடு, திராவிட இயக்க நூல்களோடு பல திராவிட இயக்க இதழ்களும் பாதுகாக்கப்படுகின்றன.

2003ல் துணைப் பொதுச்செயலாளராக இருந்த இன்றைய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சியால், ‘கலைஞர் கருவூலம்’ மேனாள் குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்களால் திறக்கப்பட்டது. இதில், திராவிட இயக்கத்தின் வரலாற்றைச் சொல்லும் பல புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில், பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. முன்பெல்லாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவந்த கழகத்தின் செயற்குழு, பொதுக்குழு. மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டங்கள், கலைஞர் அரங்கம் கட்டப்பட்ட பிறகு, இங்கேயே நடக்கின்றன. மேலும், ஏழை எளிய மக்களுக்கு இலவச கண் சிகிச்சை அளிக்கும் ‘வெற்றிச்செல்வி அன்பழகன் கண் மருத்துவமனை’யும் இங்கு செயல்படுகின்றது.

தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் அண்ணா அறிவாலயம் தொண்டர்களால் நிறைந்தே காணப்படும். கலைஞர் தனது இறுதிக்காலம் வரை நாள்தோறும் இங்கு வருகைதந்து தொண்டர்களைச் சந்திப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இன்றைய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கலைஞரைப் போலவே நாள்தோறும் வந்து கழகப்பணிகளை மேற்பார்வையிடுகிறார். கருப்பு சிவப்பு சீருடையில் இருக்கும் தொண்டர் படையினரால் பாதுகாக்கப்படும் உடன்பிறப்புகளின் வேடந்தாங்கலான அண்ணா அறிவாலய வளாகத்தில், செப்டம்பர் 15, 1992ல் கலைஞர் திறந்துவைத்த பேரறிஞர் அண்ணாவின் சிலையும் டிசம்பர் 16, 2018ல் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியால் திறக்கப்பட்ட கலைஞர் சிலையும் 114 அடி உயர கம்பத்தில் செம்மாந்து பறக்கும் கழக இரு வண்ணக் கொடியும் கம்பீரமாகக் காட்சிதருகின்றன.

அண்ணா – கலைஞர் அறிவாலயம்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - அறிவகம் முதல் அறிவாலயம் வரை!

தமிழ்நாட்டில் தொடங்கி இன்று இந்தியாவிற்கே வழிக்காட்டி வரும் தி.மு.கழகம், 22 மக்களைவை உறுப்பினர்களையும் 10 மாநிலங்களைவை உறுப்பினர்களையும் கொண்டு நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக விளங்குகிறது. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் டெல்லியில் கட்சி அலுவலகம் அமைத்துக்கொள்வதற்கு இடம் ஒதுக்கப்படும் என அறிவித்தது. அதன்படி தீனதயாள் உபாத்தியாயா மார்கில் பிரம்மாண்டமாக உருவான அண்ணா -கலைஞர் அறிவாலயத்தை ஏப்ரல் 02, 2022ல் கழகத்தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையை கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களும் திறந்துவைத்தனர். மேலும், இங்கு இனமானப் பேராசிரியர் பெயரில் நூலகமும் கலைஞரின் மனசாட்சியாகக் கழகத்தின் டெல்லி முகமாகவும் விளங்கிய முரசொலி மாறன் பெயரில் அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் நூலகத்தை இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்துவைத்தார்.

தி.மு.கழகம் தமிழ்நாட்டில் தோன்றிய அரசியல் இயக்கங்களில் தனித்தன்மை வாய்ந்தது. அது, தெளிவான கொள்கைப் பாதையைக் கொண்டு பெரும் பிளவுகள், அடக்குமுறைகள், வீண் பழிச்சுமைகளைக் கடந்தும் களத்தில் மக்களுக்காக நிற்பதோடு, போராடுவதற்கு உறுதியான கட்டமைப்பையும் கொண்டு விளங்குகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் சிந்தனைகளின் விளைநிலங்களாகத் தலைமை நிலையங்களான அறிவகமும் அன்பகமும், அண்ணா அறிவாலயமும் இருக்கின்றன.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிடநாடு கோரிக்கை: கூட்டாட்சித் தத்துவத்தின் தொடக்கம்!

MUST READ