spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - திராவிடநாடு கோரிக்கை: கூட்டாட்சித் தத்துவத்தின் தொடக்கம்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிடநாடு கோரிக்கை: கூட்டாட்சித் தத்துவத்தின் தொடக்கம்!

-

- Advertisement -

அருண் பிரகாஷ்

இந்திய அரசியலில், மாநில உரிமைகளுக்காவும் வலுவான கூட்டாட்சி முறையை அமல்படுத்துவதற்காகவும் தொடர்ச்சியாகக் குரலெழுப்பும் கட்சியாகவே திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசிடம் பெரும்பாலான அதிகாரங்கள் குவிக்கப்படுவதைக் கண்டித்து, மாநிலங்களுக்கு அதிகப்படியான அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்ய வேண்டும் என்கிற முழக்கம் தி.மு.க.வின் அடிப்படை சித்தாந்தமாகத் தோன்றுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் போதாமைகளையும் நேருவின் தலைமையில் இயங்கிய அன்றைய ஒன்றிய காங்கிரஸ் அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் பிரதான காரணங்களாக ஆய்வாளர்கள் கூறுவதுண்டு.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - திராவிடநாடு கோரிக்கை: கூட்டாட்சித் தத்துவத்தின் தொடக்கம்!

இக்கட்டுரையானது, மாநில உரிமைகள் குறித்து தி.மு.க.விடம் திட்டவட்டமான கொள்கை உருவாவதற்கு, சுதந்திர இந்தியாவின் அரசியல் சூழ்நிலைகளுக்கு இணையாக, திராவிட இயக்கப் பாரம்பரியத்திலேயே இருந்த கூட்டாட்சி பற்றிய சிந்தனையையும் முக்கிய காரணியாக அடையாளம் காண்கிறது.

we-r-hiring

நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட ஓரிரு வருடங்களிலேயே, அக்கட்சியைத் தொடங்கிய முப்பெரும் தலைவர்களில் ஒருவரான டி.எம்.நாயர், மெட்ராஸ் மாகாணமானது பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களின் நேரடி அதிகாரத்திற்கு உட்பட்ட தனியொரு நாடாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று Justice இதழில் எழுதினார். எனினும், இது டி.எம்.நாயரின் தனிப்பட்ட பார்வையாக இருந்ததே தவிர, நீதிக்கட்சியின் அதிகாரபூர்வமான கொள்கையாகவோ, நோக்கமாகவோ இருந்ததற்குச் சான்றுகள் ஏதுமில்லை.

பிற்பாடு, 1930-களில்… பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிய ராஜாஜியின் நடவடிக்கையைக் கண்டித்து எழுந்த முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்தான் மீண்டும் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து தென்னகம் பிரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை திராவிட இயக்கம் எழுப்பியது. சுயமரியாதை இயக்கத்தின் தலைவரும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதன்மை ஆளுமையுமான தந்தை பெரியாரே 1938ல், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ எனத் தனி நாட்டிற்கான முழக்கத்தை எழுப்பினார். விரைவில், இம்முழக்கம் திராவிட நாடு கோரிக்கையாகப் பரிணமித்தது. 1939ல் பெரியார் நீதிக்கட்சியின் தலைவரானதைத் தொடர்ந்து, திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாகாண மாநாட்டில் (1940), திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீதிக்கட்சியானது, திராவிடர் கழகமாக மாற்றமடைந்த வரலாற்று முக்கியத்துவமுடைய சேலம் மாநாட்டில், திராவிடர் கழகத்தின் மூலாதாரக் கொள்கையாகத் திராவிட நாடு கோரிக்கை அறிவிக்கப்பட்டது. பிறகு 1949ல், தி.மு.க தோன்றியபோது, அதன் முதன்மை லட்சியமாகத் திராவிட நாடு கோரிக்கையே இருந்தது.

பெரியாரைப் போல சுதந்தர தினத்தை ‘துக்க’ நாளாக அண்ணா கருதவில்லை என்றாலும், தனி நாடு கோரிக்கை விவகாரத்தில், அண்ணாவும் தி.மு.க.வின் மற்ற ஆரம்பகால தலைவர்களும் உறுதியாக இருந்தனர். திராவிட நாடு, நம் நாடு, Home Land, திராவிடஸ்தான், திராவிட அரசு, தென்னகம், தென்னரசு, தென்னாடு முதலான தி.மு.க.வின் தலைவர்களும் தொண்டர்களும் நடத்திய பத்திரிகைகளின் பெயர்களே எவ்வாறு திராவிட நாடு கோரிக்கையானது, அக்கட்சியின் தொடக்ககால குறிக்கோளாக இருந்தது என்பதற்குச் சான்றுகளாக இருக்கின்றன.

மேலும், திராவிட இயக்கத்தவர்கள் எழுதிய நாடகங்களிலும் திரைப்படங்களிலும்கூட, ஆங்காங்கே ‘திராவிட நாடு’ பற்றிய குறியீடுகள் இடம்பெறத் தவறுவதில்லை. உதாரணமாக, ‘பராசக்தி’ படம் ‘வாழ்க வாழ்கவே, வளமார் எமது திராவிடநாடு’ என்று பாரதிதாசன் எழுதிய பாடலில் இருந்துதான் தொடங்குகிறது.

இவ்வாறு திராவிட நாடு கோரிக்கையை வெகுமக்களிடம் பரவலாக்கம் செய்வதற்கு, இதழ்களையும் திரைப்பட நாடகக் கலைகளையும் பயன்படுத்துவதோடு, திராவிட நாடு குறித்து நேரடியாக மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்காகவே, தி.மு.க. சார்பாக வருடமொரு முறை ‘திராவிட நாடு வாரம்’ கொண்டாடப்பட்டது. தவிர, 1952ல் சுதந்திர இந்தியாவில் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில், தி.மு.க. நேரடியாகப் போட்டியிடவில்லை என்றாலும், திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தனது ஆதரவை வழங்கியது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - திராவிடநாடு கோரிக்கை: கூட்டாட்சித் தத்துவத்தின் தொடக்கம்!

பிற்பாடு, 1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், முதன் முறையாக தி.மு.க. போட்டியிட்டபோதும், அண்ணாவும் கழகத்தினரும் திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தத் தவறவில்லை. தனி நாடு பெறுவதற்கு வன்முறை பாதையைத் தேர்வுசெய்யாத தி.மு.க, மக்களிடையே போதுமான ஆதரவைப் பெற்று, ஜனநாயகரீதியாகத் திராவிட நாட்டினைப் பெற வேண்டும் என நினைத்திருந்தது. தேர்தல் அரசியலில் ஈடுபடுவதென்பதைத் திராவிட நாடு கோரிக்கைக்காக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பிரச்சாரம் செய்வதற்கான உத்தியென்றே கூறினார். அண்ணா.

1956ல், இந்தியாவின் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட போது, அன்றைய மெட்ராஸ் மாநிலத்தில் இருந்து கர்நாடகமும் கேரளமும் உதயமானது. அதற்கு மூன்றாண்டுகள் முன்னதாகவே, ஆந்திரம் தனியே பிரிந்து சென்றுவிட்டது. இவ்வாறு மொழிவாரியாக மெட்ராஸ் மாநிலம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திராவிட நாடு கோரிக்கையைத் தோற்றுவித்த தந்தை பெரியார், தனித் தமிழ்நாடு கோரிக்கையைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். எனினும், அடுத்த ஏழாண்டுகளுக்கு, தி.மு.க.வின் அதிகார பூர்வமான கொள்கையாகவே திராவிட நாடு கோரிக்கை இருந்துவந்தது.

1963ஆம் ஆண்டு, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் நடந்துகொண்டிருந்த சூழலில், பதினாறாவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீதும், பேசுவோர் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கான அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டது. இச்சட்டத் திருத்தத்திற்குப் பிறகும் தனி நாடு கோரிக்கையை எழுப்பினால், தி.மு.க. செயல்படுவதற்குப் பல்வேறு தடைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதினால், அதிகாரபூர்வமாகத் திராவிட நாடு கோரிக்கையை தி.மு.க. கைவிடுவதாக அறிவித்தார் அண்ணா.

திராவிட நாடு கோரிக்கை எழுவதற்கான உடனடி காரணமாக, ராஜாஜியின் இந்தி திணிப்புக் கொள்கை இருந்தாலும், மொழி மற்றும் பண்பாடு ரீதியாக வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் உள்ள வேறுபாடு, பொருளாதாரரீதியாக வட இந்திய முதலாளிகளும் ஒன்றிய அரசும் தென்னிந்தியாவைச் சுரண்டுதல், காங்கிரசின் வெளிப்படையான இந்து மதம் மற்றும் உயர் சாதி சார்பு போன்ற விசயங்களுமே தனி நாடு கேட்பதற்கான வலுவான காரணங்களாக இருந்தன. எனவே, திராவிட நாடென்பதைத் தாங்கள் விரும்புகிற சீர்திருத்தக் கொள்கைகளை அமல்படுத்தி, சமத்துவமிக்க சமூகத்தைத் தென்னிந்தியாவில் உருவாக்கும் லட்சியத்தின் முதல் படியாகவே திராவிட இயக்கம் கருதியது.

எவ்வாறு, பார்ப்பனியத்தின் அதிகாரம் திராவிட நாட்டில் நிலைக்கக் கூடாது என தி.மு.க. கருதியதோ, அதுபோலவே யாதொரு தனிப்பட்ட மொழியினரின் அதிகாரமும் அங்கிருக்கக் கூடாது என்பதிலும் அக்கட்சி உறுதியாக இருந்தது. வெகு காலமாகவே, திராவிட நாடு கோரிக்கையைத் தமிழ் தேசியத்தின் ஓர் வடிவமாகப் பல்வேறு ஆய்வாளர்கள் கருதி வந்தனர். ஆனால், திராவிட நாடு கோரிக்கையை வலிமையான மத்திய அரசைக் கொண்டிருக்கும் தேசமாகக் கற்பனைசெய்யாத திமுக, தென்னிந்தியாவில் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகள் பேசப்படும் பிராந்தியங்களின் கூட்டரசாகவே கருதியது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை, திராவிட நாடு மொழிவழி மாநிலங்களைக் கொண்டிருப்பதோடு, மாநிலங்களுக்கே அதிகப்படியான அதிகாரங்களும், ஒன்றிய அரசிற்கு வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, போக்குவரத்து முதலான மிகச் சில அதிகாரங்களும் வழங்கப்படும் என்கிற யோசனையைக் கொண்டிருந்தது. இதனால்தான், சமீபத்தில் வெளியான Rule of the Commoner எனும் நூலின் ஆசிரியர்கள், திராவிட நாட்டை Dravidian Nation என்றழைக்காது, Dravidian Republic என மொழிபெயர்த்துள்ளனர்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - திராவிடநாடு கோரிக்கை: கூட்டாட்சித் தத்துவத்தின் தொடக்கம்!

திராவிட நாட்டினை ஒரு கூட்டரசாக உருவாக்க வேண்டும் எனும் சிந்தனை தி.மு.க.விடம் மட்டுமே இருந்தது என்றும், தன்னிச்சையாகவே கூட்டாட்சித் தத்துவம் குறித்த பார்வை அகட்சிக்குத் தோன்றியது எனக் கூறுவதும் வரலாற்றுரீதியாகச் சரியான பார்வை அல்ல. மாறாக, திராவிட இயக்கத்தினர் எப்போது தென்னிந்தியா தனியாக பிரிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முதல் முறையாக வெளிப்படுத்தினரோ, அப்போதிருந்தே அத் தனி நாட்டினை அவர்கள் கூட்டாட்சித் தத்துவத்தை உள்ளடக்கிய பிராந்தியமாகவே யோசனை செய்யத் தொடங்கிவிட்டார்கள். எனவேதான், சென்னை மாகாணம் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட வேண்டும் என முதலில் பேசிய டி.எம். நாயர் அவர்கள், இவ்வாறு Justice ஆங்கில நாளேட்டில் 19ஆம் ஆண்டு எழுதுகிறார்:

கேரளம், கன்னடம், ஆந்திரம், தமிழ்ப் பிரதேசங்கள் அடங்கியது தென்னிந்தியா. இவை சேர்ந்தே இன்றைய சென்னை மாகாணம். இந்தத் தென்னிந்தியாவில் வாழும் மக்கள் ஒரே கூட்டத்தவர். இந்த நான்கு சகோதரர்கள் பேசும் பாஷைகள் ஒரே மூலத்திலிருந்து பிரிந்தவை. இந்த தென் இந்தியா, மத்திய அரசிலிருந்து விலகி, நான்கு பிரதேசங்களுக்குள்ளும் சேர்ந்த கூட்டரசு ஏற்பட வேண்டும்.

கூட்டாட்சி குறித்தான இத்தகைய யோசனையை 1930-களில், இந்தி எதிர்ப்பின்போது திராவிட இயக்கத்தின் குறிக்கோளாக உருவெடுத்த திராவிட நாடு கோரிக்கையின் உள்ளடக்கத்திலும் நம்மால் காண முடிகிறது.

1938ல், தனி நாடு கோரிக்கையை ‘தமிழ்நாடு தமிழருக்கே’ எனும் முழக்கத்தினூடாகப் பெரியார் முன்வைத்தபோது, அது சில விமர்சனங்களைச் சந்தித்தது. பெரியாரின் தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம், வெறும் தமிழ்மொழி பேசுபவர்களையும் தமிழ் நாட்டையும் மட்டுமே உள்ளடக்குவதாகவும், பிற தென்னிந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தினரையும், மெட்ராஸ் மாகாணத்தின் கன்னட, தெலுங்கு மற்றும் மலையாளப் பகுதிகளையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்கிற விமர்சனமும் அவற்றிலொன்று.

அதற்கு விளக்கமளித்த பெரியார், தமிழ் மொழியில் இருந்தே பிற திராவிட மொழிகள் தோன்றியதால், மெட்ராஸ் மாகாணம் முழுவதையும் தமிழ்நாடென்றும், அனைத்து தென்னிந்தியர்களையும் தமிழர்களென்றும் தான் குறிப்பிடுவதாக வாதிட்டார். எனவே, பெரியாரைப் பொறுத்தவரை தமிழ்நாடு தமிழருக்கே’ எனும் முழக்கம் தமிழ் பேசும் பகுதியை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் விடுதலையையும் குறிப்பதாகவே இருந்தது. எனினும், அம்முழக்கதிலுள்ள போதாமைகளைப் புரிந்துகொண்டு, விரைவில் ‘திராவிட நாடு’ எனும் பதத்தையே பயன்படுத்தத் தொடங்கினார்.

‘தமிழ்நாடு தமிழருக்கே’ எனும் முழக்கத்தின் மீதான விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில், 1939ல் விடுதலை நாளேட்டில் ஐந்து தலையங்கங்கள் எழுதப்பட்டன. அவை மிகத் தெளிவாக, தமிழ்நாடும் திராவிட நாடும் ஒன்றுதான் எனும் வாதத்தை முன்வைக்கின்றன. பிற்பாடு, அத்தலையங்கங்கள் தொகுக்கப்பட்டு, குடிஅரசு பதிப்பகத்தின் சார்பாக ஒரு சிறு நூலாக வெளியானது. அத்தலையங்கங்களைச் சிலர் பெரியார் எழுதினார் என்றும், வேறு சிலர் அண்ணா எழுதினார் எனவும் கூறுவதுண்டு. அவ்விவாதத்திற்குள் நுழையாது, அத்தலையங்கங்களின் உள்ளடக்கத்தை வாசித்தால், அவற்றிலும் அமையவிருக்கும் திராவிட நாட்டில், கூட்டாட்சி முறையைச் செயல்படுத்துதல் குறித்தான யோசனை இடம்பெறுவதைக் கவனிக்க முடியும்.

“திராவிடம் திராவிடருக்கே என்பதின் கருத்து, ‘இந்தியா’வின் பிணைப்பில் இருந்து திராவிடத்தைப் பிரித்து, அதை ஒரு தனிநாடாக ஆக்கி, வேண்டுமானால் திராவிட பாஷைப்படி உள்ள பாகங்களைத் திராவிட தேசத்திற்குள் உள் மாகாணங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனிப் பிரதிநிதித்துவமோ அல்லது சட்டசபையோ ஏற்பாடு செய்து, முக்கிய அதாவது, எல்லா மாகாணங்களையும் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பொதுப் பாதுகாப்பு, தபால், தந்தி,ரயில், மின்சாரம், பொதுத் தேவை, தொழிற்சாலை ஆகிய விஷயங்களில் தலை அரசாங்கத்திற்கு சம்பந்தமும் அதிகாரமும் கொடுத்துவிட்டு, மற்றவைகளை அந்தந்த மாகாணமே முழுவதும் பார்த்துக்கொள்ளும்படியாகவும், கூடுமானவரை அந்தந்த மாகாண உத்தியோகம் பொருளாதாரம் முதலாகியவை பற்றிய நிர்வாக அதிகாரம், அந்தந்த மாகாணத்திற்கே அவரவர் எண்ணிக்கைப்படி அளிக்கக்கூடியதாகவும் செய்துகொள்வது என்ற கருத்திலும்” என்பது தலையங்கத்தில் உள்ள வரிகள்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - திராவிடநாடு கோரிக்கை: கூட்டாட்சித் தத்துவத்தின் தொடக்கம்!

இதிலிருந்து, திராவிட நாடு கோரிக்கை பெரியாரால் எழுப்பப்பட்டபோதே, கூட்டரசுக் கொள்கை அதன் முக்கிய அம்சமாக விளங்கியது என்பது தெளிவாகிறது. இவ்வாறு, திராவிட நாட்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட வேண்டும் என்றும், அவ்வாறு பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் திராவிட இயக்கத்தினரிடையே யோசனை எழுந்ததற்கு, ஏற்கெனவே தென்னிந்திய மக்களிடையே மொழியினடிப்படையில் தங்களுக்கான மாநிலங்கள் அமைய வேண்டும் என்கிற உணர்வும், கோரிக்கையும் பரவலான செல்வாக்கு கொண்டிருந்ததை முதன்மை காரணமாகக் கூறலாம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, தனி ஆந்திரம் வேண்டும் என்கிற இயக்கம் தெலுங்கு பேசும் மக்களிடையே தோன்றிவிட்டது. 1920-களில், மலையாளிகளிடையே ஐக்கிய கேரள இயக்கமும், கன்னடர்களிடையே சம்யுக்த கர்நாடக இயக்கமும் மொழியினடிப்படையில் தங்களுக்கான மாநிலங்கள் அமைய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தின.

இவ்வாறு, மொழிவாரி மாநிலங்களுக்கான உணர்வுகளும் இயக்கங்களும் மெட்ராஸ் மாகாணத்து மக்களிடையே உருவாகியிருப்பதைக் கவனத்தில் கொண்டுதான், மாநில உரிமைகள் பற்றிய சிந்தனைகளும் கூட்டாட்சிக் கொள்கையும் திராவிட நாட்டு கோரிக்கையின் உள்ளீடாக அமைக்கப்பட்டன. எனவேதான், பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதப் போராட்டத்தில் மொழிவாரியாக மெட்ராஸ் மாநிலத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, இருந்து, ஆந்திரமும் (1953), பிற்பாடு கேரளமும் கர்நாடகமும் (1956) பிரிக்கப்பட்டபோது, தி.மு.சு. அதனை வரவேற்றது.

அதே சமயம், பிற்காலத்தில் திராவிட நாடு கோரிக்கையின் தேவையை உணர்ந்து, மற்ற தென்னிந்திய மாநிலங்களும் தங்களோடு இணைந்து, திராவிட குடியரசிற்கான போராட்டத்தை நடத்தும் என்கிற நம்பிக்கையையும் தி.மு.க. கொண்டிருந்தது.

ஆனால், காலவோட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகமே திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட நேர்ந்தது. எனினும், திராவிட நாடு கோரிக்கையின் முதன்மையான அம்சங்களான கூட்டாட்சிக் கொள்கையையும், மாநிலங்களுக்கு அதிகபட்ச உரிமைகள் வழங்க வேண்டும் என்கிற முழக்கத்தையும் இன்றுவரை இறுக்கமாக பற்றிக்கொண்டிருக்கிறது தி.மு.க.

தனது தொடக்ககாலத்து லட்சியமான திராவிட நாட்டினைப் பெறவில்லை என்றாலும், அதில் செயல்படுத்த விரும்பிய கூட்டரசு கொள்கையின் பரிணாம வளர்ச்சிதான், இந்திய தேசத்தில், மத்தியில் கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியும் வேண்டும் என்கிற தி.மு.க.வின் பிற்காலத்து முழக்கம். எனவே, தி.மு.க.வினுடைய கூட்டாட்சித் தத்துவத்தின் தோற்றுவாயாகத் திராவிட நாடு கோரிக்கையைத் துணிந்து கூறலாம்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பாசிச எதிர்ப்பின் பாரம்பரியம்!

MUST READ