பன்னீர் பெருமாள்
இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியையும்விட, பாசிச எதிர்ப்பில் பறிக்கப்படும் உரிமைகளை மீட்க மக்கள் போராட்டம், அரசியல் போராட்டம், சட்டப் போராட்டம் என்று அனைத்து வகையிலும் இன்றும் முன்னணியில் நிற்கும் கட்சியாக, தி.மு.க. திகழ்கிறது. இந்த துணைக் கண்டத்தின் அரசியல் கட்சிகளுக்கே உரிமைகளுக்கான போராட்டத்திற்கு வழிகாட்டும் கட்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த உரிமைப் போராட்டத்தின் வரலாறு 75 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியது.


அண்ணாவும் அவரது தம்பிகளும் புது இயக்கமா, திராவிடர் கழகத்தில் உட்கட்சிப் போராட்டமா என்று முடிவெடுக்க விவாதிக்கக் கூடினர். பேரறிஞர் அண்ணாவின் அறிக்கை மூலமாகத்தான் அந்த விவாதம் துவங்குகிறது. பெரியார் குறித்தும் திராவிடர் கழகத்தைக் கைப்பற்றுவது குறித்தும் அண்ணா பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தபோது, அண்ணா எதிர்கால வேலைத் திட்டம் குறித்து பேசினார். அந்த அறிக்கையிலேயே அண்ணா, ‘அரசியலில் பாசிசம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
அறிவுத் துறையிலோ, பழைமைவாதம் தான் இழந்த இடத்தினை மீண்டும் அடையத் தலைதூக்கும் காலத்தில் நாம் அதனை எதிர்த்துப் போராடவேண்டிய லட்சியத்தில் இருக்கிறோம்’ என்கிறார். அது மட்டும் இல்லாமல், அன்றைய காலத்தின் அரசியல் சமூகச் சூழலைத் தெள்ளத் தெளிவாக அவர் புரிந்துவைத்திருந்தார். அதனைத் தனது தோழர்களுக்கும் எடுத்துரைத்தார்.
‘வட நாடு, தென்னாடு என்னும் பேத உணர்ச்சி, டில்லியில் பேசப்பட வேண்டிய அளவுக்கு வளர்ந்துவிட்டது. மொழி ஏகாதிபத்தியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாகாண ஆட்சி மன்றங்கள், டில்லியில் சூத்திரக் கயிற்றிலாடும் பதுமைகளாக்கப்பட்டுவிட்டன. தொழிலாளரின் பிரச்சினை, யாரும் ஒதுக்கிவிடமுடியாத வகையிலும் அளவிலும் வளர்ந்துவிட்டது. பொருளாதார நிலையோ, பஞ்சமும் பட்டினியும், வேலையில்லாக் கொடுமையும் நாட்டிலே கிளம்பி, கேடு விளைவிக்கும் விதத்திலே கெட்டுவருகிறது. பழைமையோ புதிய பட்டாபிஷேகத்துக்கான நாள் குறித்துக்கொண்டிருக்கிறது’ என்று கூறுவதின் வழியாகத் தி.மு.க.வின் நோக்கம் எதனை முதன்மையானதாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அண்ணா தெளிவாக எடுத்துரைக்கிறார்.
பாசிசம், பழைமை வாதம் என்று மீண்டும் மீண்டும் அந்த அறிக்கையில் பேசும் பேரறிஞர் அண்ணா, ‘திராவிட சமுதாயமே ஜாதிகளை நீக்கி, மதப் பிடிப்புகளை அகற்றி, பொருளாதாரத் துறையில் சமதர்ம நாடாகவும், அரசியல் துறையில் எந்த அந்நிய நாட்டிற்கும் அடிமைப்படாமலும் தனியுரிமையுடன் விளங்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள்’ என்றும் கூறினார்.
இந்த அறிக்கையின்மீது நீண்ட விவாதங்கள் நடந்து முடிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகி இருந்தாலும், கடந்த 75 ஆண்டுகளாக சமூக, அரசியல் எதேச்சதிகாரங்களுக்கு எதிரான ஒரு எதிர்ப்பியக்கமாகவே தி.மு.க செயல்பட்டுக்கொண்டே, தமிழ்ச் சமூகத்தை முன்னேற்றிக் கொண்டு வந்திருப்பதற்கான காரணம், அண்ணாவின் இந்த அறிக்கையில் இருந்தே துவங்குகிறது.
இந்தியக் குடியரசும் திராவிட முன்னேற்றக் கழகமும்.
தி.மு.க. உருவாகி நான்கு மாதங்களில் இந்திய ஒன்றியம் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் குடியரசாக அறிவிக்கப்படுகிறது. பேரறிஞர் அண்ணா, இந்தக் குடியரசின் குறைகளை, ‘இது பல்வேறு எண்ணம், வாழ்க்கை முறை, மொழி, பண்பாடு, சமூகப் பழக்கவழக்கங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டம் என்றும், ஒரு தலைவரின்கீழ் ஆளும் சட்டம் உருவாக்கப்பட்டது. ஏகாதிபத்திய வாதிகளுக்குத்தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும்’ என்பதையும் சுட்டிக்காட்டி, திராவிட நாட்டில் கட்டுரை எழுதினர்.
இன்று ‘ஒரே நாடு’ என்ற பெயரில் ‘ஒரே தேர்வு’, ‘ஒரே தேர்தல்’, ‘ஒரே வரி’ எல்லாம் ஒற்றைமயமாக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தை பேரறிஞர் அண்ணா அன்றே தொடங்கிவைத்தார்.
கருத்துரிமை போர்
தி.மு.க. உருவாகி ஓர் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னரே, பேரறிஞர் அண்ணா, வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி உள்ளிட்டவர்கள் கட்டுரைகள் எழுதியதற்காகவும் வெளியிட்டதற்காகவும் கைதுசெய்யப்பட்டனர். தடைசெய்யப்பட்ட நாடகங்களை நிகழ்த்துவது, தடை செய்யப்பட்ட நூல்களுக்கான சட்டப் போராட்டம் உள்ளிட்டவற்றைத் தொடங்கி நடத்திவந்தது. ‘ஆரிய மாயை’ எழுதியதற்காகப் பேரறிஞர் அண்ணா கைதுசெய்யப்பட்டார். திராவிட நாடு இதழ், முன் ஜாமீன் கட்ட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. 144 போன்ற தடைச் சட்டங்களை முதல் ஆண்டிலேயே எதிர்கொண்டது.

தடியடியும் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இந்த அடக்கு முறைகளை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும் என்று முடிவுசெய்த கழகம், அதற்கென்று தனி செயற்குழுவைக் கூட்டியது. 23.10.1950 அன்று இரவு 9 மணிக்கு பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் கூடியது. அதில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்:
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டங்களுக்கோ அல்லது தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுத் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கோ இபிகோ 144-வது தடையுத்தரவு அல்லது சென்னையில் நகர போலீஸ் சட்டத்தின்கீழ் தடையுத்தரவு, பேச்சுரிமையைப் பறிக்கும் விதத்தில் அரசியலாரால் பிறப்பிக்கப்படுமானால், அந்தத் தடையுத்தரவுகளை மீறி, பேச்சுரிமையை நிலைநாட்டுதல் வேண்டும் என்று இக்கூட்டம் முடிவுசெய்கிறது?
இந்தத் தீர்மானத்தின்படி போராட்டங்களின் வழியாக மக்கள் ஆதரவு பெற்று அடக்குமுறையைத் தி.மு.க. முறியடித்தது. அதிகாரங்களுக்கு எதிரான எதிர்ப்பியக்கமாகவே தி.மு.க. உருப்பெற்றது.
முற்போக்கு சக்திகளுக்கான தோழமைக் குரல்
1948 முதல் 1952 வரை இந்தியாவின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த காலகட்டம், அரசு நேரடியாகக் சுமயூனிஸ்ட்டுகளை அடக்குமுறைக்கு உள்ளாக்கி, கைதுசெய்து சிறையில் அடைத்துக்கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியினர், தி.மு.க.வினைத் தீவிரமாக எதிர்த்துக்கொண்டிருந்த காலம். அதுமட்டும் இல்லாமல், தி.மு.க.வினரின் அரசியலைக் கம்யூனிஸ்ட்டுகள் கிண்டல் செய்துகொண்டிருந்தனர் என்று பேரறிஞர் அண்ணாவே குறிப்பிடுகிறார். ஆனால் அதே வேளையில், அடக்குமுறையை எதிர்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, கழகம் ஆதரவுக்கரம் நீட்டியது.
பல இடங்களில் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமறைவுச் செயல்பாடுகளுக்கு கழகத் தோழர்கள் அடைக்கலம் கொடுத்தனர். 1950 பிப்ரவரி 11 ஆம் தேதி, சேலம் மத்திய சிறையில் கம்யூனிஸ்ட் கட்சிக் கைதிகள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 220 பேர் அடைக்கப்பட்ட இடத்தில் 22 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
அரசின் இந்த கொடூரச் செயலை ‘திராவிட நாடு’ இதழ் வன்மையாகக் கண்டித்தது. ‘வாழ்வு கிடைத்தது சாகவா?’ என்ற தலைப்பில் ‘குடியரசு உருவாகி, ஒரு மாதத்திற்குள்ளேயே பிணவாடை வீசுகிறது’ என்று காட்டமாகச் சாடியது அந்தக் கட்டுரை. கட்சி அமைப்பு எல்லைகளைத் தாண்டி மனித உரிமைகளுக்காக, அரசியல் செயல்பாட்டு உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் கட்சியாகவே தி.மு.க. உருவாகியது. திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து, தி.மு.க. செயல்பட்டுக்கொண்டிருக்கும் காலத்திலேயே கேரள விடுதலையை முன்னெடுத்த கேரளா சோசலிஸ்ட் கட்சி மாநாட்டுக்குத் தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்தது.
டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உரிமைப் போராட்டத்தில் செயல்படும் தோழமை அமைப்பாகவே கருதி, அந்த மாநாட்டில் கட்சியின் சார்பில் தில்லை வில்லாளன் பங்கெடுத்தார். ஒற்றை அதிகார மையத்திற்கு எதிரான போராட்டத்தில் இருக்கும் அனைத்து அரசியல் அமைப்புகளுக்கும் தோழமையாக, அன்றே தி.மு.க. செயல்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், ‘தி.மு.க, தமிழ்நாட்டின் கம்னியூஸ்ட் கட்சி’ என்று அண்ணா பேசினார்.
திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், வன்முறைப் பாதையை மாணவர்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றபோதே, சீனாவின் தங்க மகன் என்று மாவோவையும் மேற்கோள் காட்டினார். மாலை மணியிலும், திராவிட நாட்டிலும் ரஷியப் புரட்சியாளர் லெனின் குறித்தெல்லாம் எழுதியதும், எம்.என். ராயின் நவீன அரசியல் சிந்தனை குறித்தெல்லாம் அண்ணா பேசியதும் தி.மு.க.வின் அரசியல் பாதை என்பது அதிகாரத்திற்கும், முதலாளித்துவத்திற்கும், பாசிசத்திற்கும் ஜனநாயகத்தின் காலம்… எதிரானது என்பதைக் கட்டமைக்கத்தான்.
அதனால்தான், தி.மு.க, முதல் மாநில மாநாட்டில் பேரறிஞர் அண்ணா, ‘இது ஜனநாயகத்தின் காலம்… இங்கு கட்டளையிடும் தலைவன் உருவாகக் கூடாது; உருவாகவும் முடியாது’ என்றும் பேசினார். அதன் தொடர்ச்சிதான் 1957 கேரளாவில் முதல் முறையாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தபொழுது, அதை வாழ்த்தி வரவேற்றது தி.மு.க.

உரிமைப் போராட்டங்களின் உற்ற தோழன்
இந்த உலகத்தில் எங்கெல்லாம் விடுதலை வேண்டியும், உரிமைகள் வேண்டியும், அடக்கு முறையை எதிர்த்தும் போராட்டம் நடக்கிறதோ அதை எல்லாம் ஆதரித்து எழுதியும், பேசியும், பரப்புரை செய்தும் வந்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். 1952 ஆம் ஆண்டு, ஈரோட்டில் நடந்த பொதுக்குழுவில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து எகிப்தை மீட்க நடத்தப்படும் விடுதலைக் கிளர்ச்சியை ஆதரித்தும், டுனீஷியாவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகள் மக்களின் விடுதலைக் கிளர்ச்சியை நசுக்கி, மக்கள் சர்க்காரின் தலைவர்களைக் கைதுசெய்து, அடக்குமுறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதைக் கண்டித்தும் தீர்மானங்களை திறைவேற்றியது.
22.5.1955 அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத்தில், சீக்கியர்களுக்கு பஞ்சாபி மொழி பேசும் மக்களுக்குத் தனி பிராந்தியம் கேட்டுப் போராடும் மாஸ்டர் தாராசிங் கைது குறித்து கண்டித்துப் பேசுகிறார். அவரது கோரிக்கையின் நியாயத்தை, அதை ஒன்றிய அரசு ஒடுக்கும் முறையை எதிர்த்துப் பேசியதோடு, அந்தப் போராட்டத்தை ஆதரித்தும் எழுதினார். காமென்வெல்த் கூட்டமைப்பில் உள்ள வெள்ளை நிறவெறி நாடுகளின் செயல்பாடுகளைக் கண்டிக்க முடியாமல் இந்தியா இருப்பது குறித்து 1956ல் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது தி.மு.க. காஷ்மீர் சிக்கலுக்கு ஏழு ஆண்டுகளாகத் தீர்வு காணமுடியாத ஒன்றிய அரசைக் கண்டித்த ஒரே மாநில கட்சியாக அன்றே தி.மு.க. விளங்கியது.
13.11.55 தம்பிகளுக்கு அண்ணா எழுதிய கடிதத்தில், இந்தியாவின் உள்துறை அமைச்சரின் அதிகாரங்கள் அதன் வழியாக உரிமைகளுக்குப் போராடும் மக்களுக்கு நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளை விளக்கினார். அசாமோடு இணைக்கப்பட்டிருந்த நாகாலாந்தின் உரிமைப் போராட்டத்தினையும் அதன் நியாயங்களையும் விளக்கியதோடு மட்டுமல்லாமல், வெளிநாட்டு சதி, கிறிஸ்துவர்களின் போராட்டம் என்றெல்லாம் பரப்பப்பட்ட அவதூறுகளையும் கண்டித்தார், மணிப்பூர் மக்களின் உரிமைகளுக்காகவும் தி.மு.க. மாநாடு தீர்மானம் போட்டது. இன்றும் காஷ்மீரில் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காவும், மணிப்பூரில் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் குரல்கொடுக்கும் கட்சியாய்க் கழகம் இருப்பதற்கான விதை அன்றே ஊன்றப்பட்டது.
இந்திய ஒன்றிய அரசின் ஏதேச்சதிகாரத்திற்கு எதிராகத் திமு.க. அதே வேளையில் போர்ச்சுகலின் போராடிக்கொண்டிருந்த காலம். அதே வேளையில் போர்ச்சசுகலின் கட்டுப்பாட்டில் கோவா, டையூ- டாமன் உள்ளிட்ட பகுதிகள் இருந்தன. காலனி ஆதிக்கத்திற்கு எதிராக போர்ச்சுகலை வெளியேற்றி இந்தியாவுடன் தங்களை இணைத்துக்கொள்ள அந்த மக்கள் போராடினர். அந்தப் போராட்டத்தில், 30-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. அறிக்கை வெளியிட்டது. அதுமட்டுமல்லாமல், கோவா படுகொலைக்குக் கண்டன ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்தியது. தி.மு.க.
ஆளுநர் எதிர்ப்பின் அடித்தளம்
ஆளுநர் நியமனம் என்பதே ஒரு பாசிச போக்கின் வெளிப்பாடு. நீங்கள் எங்களை அடிமைதான் என்று பறைசாற்றவே வடநாட்டுத் தலைவர் ஒருவர் நியமிக்கப்படுகிறார். வட நாட்டு அடிமை கூடாது. ஆளுநர் நியமனம் கூடாது என்று 1952ல் தேர்தலில் பங்கெடுக்காத காலத்திலேயே ஆளுநர் நியமனத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் தி.மு.க. கண்டனக் கூட்டம் நடத்தியது. ஆளுநருக்கு செலவழிக்கப்படும் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தொடர்ச்சியாகத் தி.மு.க. கண்டித்துவந்தது.
மாநில உரிமைகளுக்கான குரல்
இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியைக் கேரளாவில் அமைத்தார், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட். அந்த அரசு 1959 ஆம் ஆண்டு 356 பிரிவைப் பயன்படுத்தி ஒன்றிய அரசால் கலைக்கப்பட்டபோது, அதனை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டித்தது. 31.8.1959 அன்று கேரளாவில் கலைக்கப்பட்ட ஆட்சிக்காக சென்னை மாகாண சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று குரல்கொடுத்தார், அண்ணா. அதனை அனுமதிக்காத அரசைக் கண்டித்து அண்ணா தலைமையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்பொழுது பேரறிஞர் அண்ணா பேசியது:

“மாநில மக்களுடைய உரிமையைப் பெற்ற ஒரு சர்க்கார் எந்தக் கட்சியால் நடத்தப்பட்டாலும், மக்களுடைய நம்பிக்கையை அதுபெற்றிருக்கிற வரையில் அதைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற நல்ல அரசியல் சம்பிரதாயத்தைப் பாழாக்குகிற முறையிலே நடந்துகொண்ட மத்திய சர்க்காருடைய போக்கைப் பற்றி இங்கே விவாதிப்பது அரசியல் சட்டத்தின்படி சரியல்ல என்பதை நிதியமைச்சர் அவர்கள் எடுத்துச் சொல்லி ‘வெளியேற வேண்டுமென்ற ஆசையிருந்தால் வெளியேறலாம்’ என்று குறிப்பிட்டார்கள்.
‘உள்ளே இருப்பதற்கு ஆசையுள்ளவர்கள் உள்ளே இருந்துகொண்டிருக்கலாம். ஆனால், பிரச்சினைகள் வருகிற நேரத்தில் வெளியேறி, தங்களுடைய கண்டனத்தைத் தெரிவிப்பது என்பது சில தடவைகளிலே வெளியேறிய அனுபவத்தைப் பெற்றிருக்கிற அமைச்சர் அவர்கள், உணருவார்கள் என்று கருதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இங்கே இந்தப் பிரச்சினையை விவாதிப்பதற்கு மறுக்கின்ற போக்கைக் கண்டிக்கின்ற தன்மையில் நானும் என்னுடைய கட்சியினரும் வெளியேறுகின்றோம்’ என்று கூறினார்.
தமிழ் மரபின் பெருமைகளை உணர்ச்சிபொங்க மக்களிடம் பேசி அணிதிரட்டினாலும், சங்க இலக்கிய வீரக் கதைகளை மீட்டுருவாக்கம் செய்தாலும் அது இனவாதமாக இனப்பெருமை மேட்டிமையாக மாறிவிடக் கூடாது என்பதிலும் தி.மு.க.வினரும் அண்ணாவும் தெளிவாக இருந்தனர்.
திராவிட நாடு குறித்து தி.மு.க.வின் கருத்து
“ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிச் சுதந்திரம் வேண்டும் என்று வாதாடும் திராவிட முன்னேற்றக் கழகம், இந்த நான்கு மாநிலங்களையும் ஒரு மொழியின் கீழ், ஒரு ஆட்சியின்கீழ் இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. அது, கழகத்தின் கொள்கையுமல்ல; விடுதலை அடிப்படையில் எழுந்த தி.மு.கழகம் அதனை நிச்சயம் விரும்பவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் கூறுகிற திராவிடக் கூட்டாட்சி, ஒரே அரசின்கீழ் கட்டிப்போடும் அடிமைப் பிணைப்பு அல்ல, ‘தமிழ், ஆந்திரம், கன்னடம், கேரளம் – இந்த நான்கு நாடுகளும் மொழிவழி பிரிந்து, இனவழி ஒன்றுபட வேண்டும் என்ற அடிப்படையில், எழுந்ததுதான்
திராவிட நாடு, ஆந்திரம் தமிழகத்தைச் சுரண்டி வாழாது; கேரளம் கன்னடத்தை அடக்கியாளாது தமிழகம் கன்னடத்தில் ஆதிக்க பலத்தை நிலைநாட்டாது” என்று அண்ணா பேசினார். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட நாடு என்பது மொழிவழி பிரிந்த தேசிய அரசுகள், இனவழி இணைந்த கூட்டாட்சி என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
‘சிகாகோ டைம்ஸ்’ பத்திரிகைக்கு அண்ணா கொடுத்த நேர்காணலில், திராவிட நாட்டின் மொழிக்கொள்கை குறித்த கேள்விக்கு, ‘ஆங்கிலம் அலுவல் மொழியாகவும் தாய்மொழி அந்த மாநிலங்களுக்கும் பயன்படுத்தப்படும்’ என்று தெளிவாகக் கூறுவார். அதுபோல உங்கள் அரசியலமைப்பு எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்விக்கு, அரசியலமைப்பு ஜனநாயகமாகவும், சமுதாய அமைப்பு சாதி பேதங்கள் அற்ற சமதர்ம அமைப்பாகவும் இருக்கும்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் பதில் ஜனநாயகத்தின் குரல்.
இன்றைய பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் பாசிச செயல்பாடுகளை, 1958 காலகட்டத்திலேயே எச்சரித்தவர், பேரறிஞர் அண்ணா. மேலே குறிப்பிட்ட சிகாகோ டைம்ஸ் பத்திரிகை நேர்காணலில் எச்சரிக்கை செய்தார்.

நிருபர்: ஜனசங்கம், புராணத்தின் அடிப்படையில் அமைந்தது. புராண காலம் பொற்காலம் என்று கூறிவருகிறது மற்றும் இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கையை அது கைவிட்டுவிட்டது. மதத்தையும் அரசியலையும் ஒன்றாகத்தான் பார்க்கப்பட்டுவருகிறது. அப்படி இருக்க அதற்கு ஏன் ஆதரவு கிடைக்காது என்று கருதுகிறீர்கள்?
அண்ணா: மதத்தையும் அரசியலையும் ஒன்றாக்கிய பிறகு, இந்து தர்மம்தான் நாட்டை ஆளும். அப்போது, இஸ்லாமிய எதிர்ப்புணர்ச்சி ஏற்படாமலா போகும்?
நிருபர்: இந்து தர்மத்தின் வழியில் நாடு ஆளப்படுவதை நீங்கள் ஏற்கவில்லையா?
அண்ணா: இல்லை!
நிருபர்: அப்படியானால், நீங்கள் இந்துக்கள் அல்லவா?
அண்ணா: இல்லை.
தி.மு.க. உருவான நாள் முதல் போராட்டக் களங்களில் வளர்ந்த இயக்கம். வடநாட்டு ஒன்றிய மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி, ஆளுநர் அதிகாரத்திற்கு எதிரான கருப்புக்கொடி, ஒன்றிய அரசின் பிதாமகருக்கு கருப்புக்கொடி என்று தன் அதிகாரத்திற்கு எதிரான போராட்டங்கள். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள், ஐந்தாண்டுத் திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் பாரபட்சத்தைக் கண்டித்து போராட்டம், மொழி பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்று நெருப்பாற்றை நீந்திக் கடந்த இயக்கம். ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னும் மாநில உரிமைகளுக்காகப் போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தது.
இன்று, நிதி பகிர்வில் புறக்கணிக்கப்படும் தமிழ்நாட்டு உரிமையை மீட்க, கழக இளைஞர் அணி சட்டமன்றத் தொகுதிதோறும் நடத்திய கண்டனக் கூட்டம், மாநிலத்தின் ஆளும் கட்சியாக இருந்தாலும் ஆதிக்கத்திற்கு எதிரான அண்ணா வழியிலான போராட்ட மரபின் தொடர்ச்சி எனப் புரிந்துகொள்ள முடியும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அண்ணா வழியில் பாசிச எதிர்ப்பில் காட்டிய உறுதிக்கு நெருக்கடி நிலை ஒன்று போதும். இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் கலைக்கப்பட்டபோது, தி.மு.க அரசு கலைக்கப்படவில்லை. ஆட்சியும் அதிகாரமும் முக்கியம் என்று இல்லாமல், ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடினார் கலைஞர். இந்தியாவில் தலைமறைவாக இருந்த தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது தமிழ்நாடு. 1973 ஆம் ஆண்டு, இந்தியாவில் இந்திரா காந்தியின் எதேச்சதிகார போக்குகிற்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த ராஜ் நாராயணன் கூட்டிய சமூக நீதிக்கான கூட்டத்தில், உத்தரப்பிரதேசம் சென்று கலந்துகொண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் ஆதரவு தெரிவித்தார்.
இந்திரா காந்தி ஆட்சிக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டவர்களைத் தமிழக அரசியல் மேடைகளில் மேற்கோள் காட்டி, மாநில முதலைமைச்சராக இருந்த கலைஞரே பேசினார். அடக்குமுறைக்கு எதிராக இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போராடிக்கொண்டிருந்த இயக்கமாக தி.மு.க.வை அண்ணாவின் வழியில் உருவாக்கினார். இந்தியாவில் மீண்டும் ஜனநாயகத்தை மீட்க தி.மு.க. அகில இந்திய அளவில் கூட்டங்களை ஒருங்கிணைத்தது.

‘தி.மு.கழகத்தின் சார்பில் நான் விடுத்த அழைப்பை ஏற்று 1976 டிசம்பர் 15ஆம் நாளன்று, டெல்லியில் கழக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் இரா.செழியன் அவர்கள் இல்லத்தில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அசோக் மேத்தா, திருமதி மொகிந்தர் கவுர், எம்பி, பிஜு பட்நாயக், சமாகுகா எம்பி, சுரேந்திரா மோகன் எம்பி, திக்விஜய் நாராயண் சிங் எம்பி, பிலுமோடி எம்பி, எச்.எம்.படேல் வாஜ்பாய் பேராசிரியர் ஷெர்சிங் எம்பி ஆகிய எம்பி, கிருஷ்ணகாந்த் எம்பி, பே பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்’ என்று குறிப்பிட்ட கலைஞர்,
அந்தக் கூட்டத்தின் நோக்கம் குறித்து, நாட்டில் இயல்பான சூழ்நிலை அமைந்திட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தி.மு.க. எண்ணுகிறது’ என்றும் ‘அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் தங்களுக்கென அமைந்த தனித் தன்மைகளையோ, கொள்கைகளையோ விட்டுவிட்டு, அரசின் கொள்கைகள், நடைமுறைத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘ஆமாம்’ போடுபவையாக ஆக வேண்டுமென நினைத்துப்பார்க்கக்கூட இடமில்லை’ என்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பேசினார்.
இந்திய அளவில் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள நடந்த முக்கியமான ஒருங்கிணைவை முன்னெடுத்ததில், தி.மு.க.வின் பங்கு மகத்தானது. அடக்குமுறைகள் உருவாகின்றபோதெல்லாம், அதற்கு எதிரானதாகச் செயல்பட்டிருக்கிறது.
‘இந்தியாவில் பிரிவினைத் தடைச்சட்டம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டதே தி.மு.க.வினரை ஒடுக்குவதற்காகத்தான்’ என்று நாடாளுமன்றத்திலேயே விவாதம் நடந்திருக்கிறது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து இங்கு உருவாக்கப்பட்ட மிசா, தடா, பொடா என அனைத்து அடக்குமுறைச் சட்டங்களுக்கும் எதிரானதாகப் பெரும் போராட்டத்தை நிகழ்த்திய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
இன்றும் இந்திய ஒன்றிய அரசின் மொழித் திணிப்புக்கு எதிராக, ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிராகப் பறிக்கப்படும் மாநில உரிமைகளுக்கு எதிராகப் போராடுவதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு வழிகாட்டியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் தான் இருக்கிறது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா – கலைஞர் வழியில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்தல், ஒரே மதம்’ என்ற பாசிச முன்னெடுப்புகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருகிறது.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?


