spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?

-

- Advertisement -

பிரகாசு

“ஒருவர் புறப்பட்டு, ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும் எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றிபெற்ற வரலாறு. இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை. அந்த வரலாறு துவக்கப்பட்டபோது, நான் சிறுவன். அந்த வரலாற்றிலே புகழேடுகள் புதிது புதிதாக இணைக்கப்பட்ட நாட்களிலே, ஒரு பகுதியில் நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். அந்த நாட்கள்தான் என் வசந்தம்” என்று தந்தை பெரியாரின் நெடும் பயணத்தில், தான் இணைந்திருந்த நாட்களைக் குறிப்பிட்டுள்ளார் பேரறிஞர் அண்ணா. (பெரியார் 89-வது பிறந்தநாள் மலர், 1967)

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?

we-r-hiring

தி.முகழகம் தொடங்கப்பட்டதில் இருந்து ஆட்சிக்கு வரும் வரையிலான 18 ஆண்டுகள் பிரிவுக்குப் பின்னர், அண்ணாவின் மனதில் மலர்ந்த சொற்கள் இவை. ஆனால், மற்றவர்களுக்குத்தான் பிரிவு, அந்த 18 ஆண்டுகளும் தி.மு.கழகத்தை பெரியார் பேசினார், ஏசினார், கண்டித்தார். தி.மு.க. என்று உச்சரிக்கவே மறுத்தார். ஆனாலும் புதிய பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்த பின்னரும்கூட பெரியாரைத்தான். அவருடைய லட்சியத்தையே பின்தொடர்ந்தார், அண்ணா.

பாதைதான் புதியதே தவிர, அது பிளவல்ல என்பதை ‘திராவிட நாடு’ இதழின் மூலமாகவும், பொதுக்கூட்ட உரைகளின் மூலமாகவும் தொடர்ந்து உணர்த்திக்கொண்டேயிருந்தார், அண்ணா.

“திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. திராவிடர் கழகத்திற்குப் போட்டியாக அல்ல – அதே கொள்கைப் பாதையில்தான்; திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான். நான் மிக மிகத் தெளிவாகவே கூறிவிடுகிறேன். கிராவிட முன்னேற்றக் கழகம் எந்த விதத்திலும் திராவிடர் கழகத்திற்கு எதிரானதல்ல. எதிர்நோக்கம் கொண்டதும் அல்ல” என ராபின்சன் பூங்காவில் விளக்கம் தந்தார், அண்ணா.

ஆனாலும் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் மனக்கசப்பு வேருன்றி இருந்தது. 2011.1949 அன்று, வேலூரில் பெரியார் பேசிய பொதுக்கூட்டத்தில் இரு தரப்புக்கான மனக்கசப்பின் வடிவம் மாறியது. ‘தி.க.வும் தி.மு.கவும் மோதிக்கொள்வது, கழகத்தின் குறிக்கோள் வெற்றிபெற உரிய வழியாகாது. மாறாக, மாற்றாருக்கும் அரசுக்கும் இலாபம் தரும் தரும். ஆர்வத்திற்கும் ஆத்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள், பொது வாழ்வுத்துறையின் அபாயக் குறிகள். திமு.க.வில் அத்தகையவர்களுக்குச் சிறிதும் இடம் இல்லை கொள்கைக்காக நாம் இருக்கிறோம். குரோதத்திற்காக அல்ல” என அறிக்கை வெளியிட்ட அண்ணா, வேலூரைச் சேர்ந்த இரத்தினவேலை ஓராண்டுக்காலம் தி.மு.கவில் இருந்து நீக்கிவைத்தார்.

அதேபோல, திருச்சியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, “திராவிடர் கழகமாகட்டும் திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான், கோட்பாடு ஒன்றுதான் திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படை வரிசை இரண்டுபட்டுவிட்டது என்ற வைதீகபுரிக்கும் வடநாட்டு ஏகாதிபத்தியத்திற்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும்” என்றார். 19512 மயிலாடுதுறையில் நடைபெற்ற தி.மு.க தஞ்சை மாவட்ட முதல் மாநாட்டில் பேசும்போது “தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம். பட்டினக்கரைகளில் எல்லாம்,மூலைமுடுக்குகளிலெல்லாம், தெருத்தெருவாகக் கருப்பு சிவப்பு இரு வண்ணக்கொடி பறக்க வேண்டும். அது, திராவிட முன்னேற்றக் கழகக் கொடியாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல! திராவிடர் கழகக் கொடியாகவும் இருக்கலாம். ஆனால், இந்த இரண்டிய ஏதாவது ஒரு கொடி – கருப்பு சிவப்புக் கொடி கட்டாயம் பறந்தாக வேண்டும்” என்றார்.

இப்படி திமுகழகத்தின் தொடக்ககால அண்ணாவின் உரைகள் அனைத்திலும் திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் வேறு வேறல்ல என்பதை உணர்த்திக்கொண்டேயிருந்தார்.

தி.மு.க உருவான ஓராண்டுக்குள்ளேயே, பெரியாரையும் அண்ணாவையும் இணைக்கும் வாய்ப்பை, அதாவது சிறையில் இணைக்கும் வாய்ப்பை அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கினார்கள் பெரியாரின் ‘பொன்மொழிகள் நூலையும் அண்ணாவின் ‘ஆரியமாயை’ நூலையும் அன்றைய காங்கிரஸ் அரசு தடை செய்தது. 11.03.1950 அன்று, நீதிமன்றத்தில் பெரியாருக்கு அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்தார் அண்ணா. இருவருக்கும் 500 ருபாய் அபராதம், அபராதம் கட்டும் வழக்கம் இருவரின் அகராதியிலும் இல்லாதது. திருச்சி மத்திய சிறைக்கு ஒரே வேனிலேயே இருவரும் அழைத்துச்செல்லப்பட்டனர் பக்கத்து பக்கத்து அறை.

அந்த அனுபவம் குறித்து திராவிட நாடு இதழில் எழுதிய அண்ணா, பெரியார் கொண்டுவந்திருந்த சாமான்களைக் கணக்குப்பார்த்து, சரியாக இருக்கிறதா என்று கூறும் பொறுப்பை சிறை அதிகாரி என்னிடம் ஒப்படைத்தார். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத சம்பவம், எனக்கு உள்ளூர பயம். கேள்விக் கணையுடன் நிறுத்திக்கொள்ளாமல் அன்புக் கணையையும் ஏவினால், என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? என்றெல்லாம் அச்சப்பட்டேன். பகலெல்லாம் அறை திறந்துதான் இருக்கும்; பலர் வருவார்கள். இங்கு சிறிது நேரம்; அங்கு சிறிது நேரம். இன்னும் சிலரோ, நாங்கள் இருவரும் பேசிக்கொள்கிறோமோ என்று கூர்ந்து கவனித்தபடி இருப்பார்கள்.

அறைக்கு உள்ளே அவர் இருக்கும்போது, தான் வெளியே மரத்தடியில்! அவர் வெளியே வர முயல்கிறார் என்று தெரிந்ததும் நான் அறைக்கு உள்ளே சென்றுவிடுவேன். இப்படிப் பத்து நாட்கள் விடுதலைக்கு முதல் நாள் பெரியாருக்கு வேலைகள் செய்து வந்த ‘கைதி’ என் அறைக்குள் நுழைத்து, “அய்யா தரச் சொன்னார்“என்று சொல்லி, என்னிடம் ஆறு பிஸ்கட்டுகள் கொடுத்தான். கையில வாங்கியதும் என் நினைவு பல ஆண்டுகள் அவருடன் இருந்தபோது கண்ட காட்சிகளின்மீது சென்றது” என சிலாகித்து எழுதினார், அண்ணா.

பெரியாரை விடுதலை செய்’ அண்ணாவை விடுதலை செய் என தமிழ்நாடே போர்க்களமானது. 11-வது நாளில் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். பெரியாருக்கு வாகனம் வந்துவிட்டது, அண்ணாவுக்கு வரவில்லை. கண்களாலேயே அழைத்தார் பெரியார்,கண்ணசைவுக்கு இணங்கினார் அண்ணா,ஒரே வாகனத்தில் இருவரும் திரும்பிச் சென்றனர். தி.பொ வேதாசலம் இல்லத்தில் பெரியார் இறங்கிக்கொள்ள அதே வாகனத்தில் அண்ணாவை அனுப்பிவைத்தார். பெரியார், பயணம் ஒன்றுதான், பாதைதான் மாறிவிட்டோம் என்பதை அடுத்தடுத்த ஆண்டுகளில் தன் செயலால் உணர்த்திக்கொண்டேயிருந்தார், அண்ணா

பெரியாரைப் பின்தொடர்ந்தார்!

வணிக நிறுவனங்களின் முகப்புப் பலகை விளம்பரங்களில் ஜாகி மத அடையாளங்களை நீக்க வேண்டும் என்றும், 16ஆம் தேதி முதல் வடநாட்டார் கடைகள் முன் மறியல் தொடங்கும் என்றும் 08.10.1983 அன்று சென்னை மாவட்ட திராவிடர் கழக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுத்து அறிவித்தனர். வடநாட்டு ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சி தமிழ்நாடெங்கும் காட்டுத்தீ போல பரவியது “பிராமணாள் கபே“ பெயர்கள் அழிக்கப்பட்டன இந்தி எழுத்துகள் தார் பூசி அழிக்கப்பட்டன.

அரசு, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்தது. அந்தச் சூழலில்தான், 22.10.1950 திராவிட நாடு இதழில்,வடநாட்டு ஆதிபத்தியத்துக்கு எச்சரிக்கை’ என டால்மியா நிறுவனத்துக்கு எதிராக முரசறைந்தார் அண்ணா.

சென்னையில் கிராவிடர் கழக கமிட்டியின் தீர்மானத்துக்கு அடுத்த நாள் டால்மியா சிமென்ட் தொழிலாளர் சங்கம் போராட்டத்தைத் தொடங்கியது. சிமன்ட் தொழிலாளரகள் 1200 பேர், ஆனால் அவர்களை அடக்கி ஆள வடநாட்டில் இருந்து வந்திருப்பதோ 15 பேர்.  உழைப்பவர் இந்நாட்டு மக்கள். சிமென்ட் தரும் பூமி இன்பத் திராவிடத்தின் பூமி இருந்தும் நாட்டுக்குரியோர் வாடுகிறார்கள். வந்தவன் வடநாட்டு முதலாளி, வாழ்வு செழிக்கிறான்’ என வட ஆதிக்கத்திற்கு எதிராக குரல் எழுப்பினார், அண்ணா.

அந்தச் சமயத்தில் ஒன்றிய அமைச்சராக இருந்த ராஜாஜி, 24.10.1950 அன்று சென்னை வந்தார். அவருக்கு கருப்புக்கொடி காட்ட அழைப்பு விடுத்தார் அண்ணா, அதில் மூன்று முழக்கங்கள் முக்கியமானவை. “பெரியாரை பெல்லாரி சிறையில் அடைத்தவர், திராவிடத்தை வடநாட்டுக்கு அடகுவைப்பவர், இந்தி ஆதிபத்தியத்தின் காவலர் ராஜாஜிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் ”என்பது அண்ணாவின் முழக்கம் . 01.04.1951 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய செயற்குழுவில் காங்கிரஸ் அமைச்சர்களுக்குக் கருப்புக்கொடி காட்டி ராஜினாமா செய்ய வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. காஞ்சியில் பக்தவத்சலம், நாகை, மயிலாடுதுறையில் அமைச்சர் கோபால் ரெட்டிக்கு கருப்புக்கொடி காட்டினர். அதற்கடுத்த மாதத்தில், 17.05.1951 ல் ஒன்றிய அமைச்சர் ஜெகஜீவன் ராமுக்கு கருப்புக்கொடி காட்டியது திராவிட முன்னேற்றக் கழகம்.

22.07.1951ல் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிட நாட்டுப் பிரிவினையை வலியுறுத்திப் பேசிய பெரியார், “வெள்ளைக்காரன் இன்னும் 300 கோடி ரூபாய்க்கு மேல் முதலை இங்கேயே விட்டுவைத்துச் சுரண்டுகிறான். வடநாட்டான் கொள்ளையனாகவே மாறிச் சுரண்டுகிறான். இங்கே இருந்துகொண்டே பார்ப்பான் சுரண்டுகிறான். நாம் தனி நாடு கேட்டால், சிறிய நாடு: வாழ முடியுமா என்கிறார்கள். பாக்கிஸ்தான் கேட்டபோதும் இப்படித்தான் சொன்னார்கள். நீயாகத் தருகிறாயா அல்லது ரஷ்யாவை உதவிக்கழைத்து வாங்கிக்கொள்ளட்டுமா என ஜின்னா கேட்டதும் பணிந்தார்கள். நமக்கு அத்தகைய மான உணர்ச்சி வேண்டும்” என்றார்.

1952ல் முதல் பொதுத்தேர்தலுக்கான களம் அப்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மதுரையில் பொதுக்குழுவைக் கூட்டிய தி.முக. ‘திராவிட நாடு பிரிவினை கோரிக்கைக்காக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் வாதாட கையெழுத்துப் போட்டுத் தருவோருக்கு ஆதரவு’ என தீர்மானித்தது. அந்தத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்கள் 152 இடங்களையும், காங்கிரஸ் அல்லாத வேட்பாளர்கள் 223 இடங்களிலும் வென்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டியிட்ட முதல்வர் குமாரசாமி தோல்வியுற்றார். அந்த சமயத்தில், நேருவுக்கு நெருக்கமான காங்கிரஸ்காரர் ஸ்ரீ பிரகாசா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இது ஒழுங்கற்ற நியமனம் எனக் கண்டித்த பெரியார். ‘ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டப்படும்’ என அறிவித்தார் திமுகவும் கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்த நிலையில், ‘திராவிடர் கழகம் தனித்தன்மையோடு இந்தக் கிளர்ச்சியை நடத்த வழிவிடுகிறோம்’ என்றார். அண்ணா. அதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டிருக்காத ராஜாஜியை மேல்சபை உறுப்பினராக்கி, முதல்வராக்கியது காங்கிரஸ். அதனபிறகு. தி.கவும் தி.மு.கவும் ஒரே களத்தில் பணியாற்றுவதற்கான பல சூழல்களை உருவாக்கினார். ராஜாஜி.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?

களத்தில் பெரியாரும் கலைஞரும்

1952ல் ரயில் நிலையங்கள், அஞ்சல் நிலையங்களில் இந்திப் பெயர்கள் தலைமையிடத்தில் இருக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டன. இந்தி எழுத்துகளைத் தார் பூசி அழிக்கும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். ஆகஸ்ட் 1ஆம் தேதி நாள் குறித்தார். இந்தி எழுத்துகளை அவர்களாக அழிக்கும் வரையில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 இந்தி எதிர்ப்பு நாள் என பிரகடனம் செய்தார். பெரியாரை அப்படியே பின்தொடர்ந்தார், அண்ணா, திருச்சி ரயில் நிலையத்திற்கு பெரியார் ஊர்வலமாகச் சென்று, இந்தி எழுத்துகளை அழித்தார். திருச்சியில் திமுக சார்பில் இந்தப் போராட்டக் களத்திற்கு தலைமைதாங்கினார் கலைஞர். ஊர்வலத்தில் எதிரெதிரே இருவரும் சந்தித்துக்கொண்டனர். இருவரும் தனித்தனியே தார் பூசி இந்தி எழுத்துகளை அழித்தனர். தமிழ்நாடெங்கும் தி.க., திமு.க.வின் போராட்டங்கள் போராட்டத்தில் கைது செய்யப்படாதது பெரியாரை ஏமாற்றமடையச் செய்தது. இந்தி ஆதிக்கத்தையும் வடநாட்டார் ஆதிக்கத்தையும் ஒன்றாக எதிர்க்கும் வகையில், அரசியல் சட்டத்தையே எரிக்க நேரிடும் என்று 07.08.1952, 10.08.1952 ‘விடுதலை’ தலையங்கங்கள் மூலம் எச்சரித்தார். பெரியார்.

இதனிடையே, ஜூன் 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டில் பேசியிருந்த ராஜாஜி, ‘அவரவர் ஜாதி தொழிலை அவரவர் செய்ய வேண்டும். வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்கவேண்டியது இல்லை. குலத்தொழிலைச் செய்தால் போதும். எல்லோரும் படித்தால், எல்லோருக்கும் வேலை எங்கிருந்து கிடைக்கும்? என்று கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, 20.03.1953 அன்று சட்டமன்றத்தில் கல்வி அமைச்சர் டாக்டர் எம்.வி.கிருஷ்ணாராவ் ‘தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் படிக்கும் கால அளவை நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைப்பது என்றும், அந்நேரத்தில் குழந்தைகளின் பெற்றோர் செய்யும் தொழில்களைக் கற்றுக்கொள்ள வசதி செய்து கொடுக்கவும் சர்க்கார் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.

பரம்பரைத் தொழில் செய்யாத குலத்தில் பிறந்த குழந்தைகள், வயல்களிலும் தொழிற்சாலைகளிலும் பிறர் செய்யும் தொழில்களைக் கவனிக்கச்செய்து, கற்கச் செய்யவும் ஆலோசிக்கப்படுகிறது. விவசாயத் தொழில்கள். கொட்டகை போடுதல், செங்கல் அறுப்பு வேலைகள், கிணறுகள் வெட்டுதல் போன்ற பல வேலைகளில் பள்ளிச் சிறுவர் சிறுமியரைப் பழக்கப்படுத்துவது என்பதும் யோசிக்கப்பட்டுவருகிறது’ என்று ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமைமீது வெடிகுண்டைத் தூக்கிவீசினார்.

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெகுண்டெழுந்தன. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, ஆந்திராவுடன் சேர்க்கப்பட்ட சித்தூரை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டுமென்று போராடியதற்காக, ம.பொ.சி.யை பிரதமர் நேரு ‘நான்சென்ஸ்’ என்று விமர்சித்தார். இது தமிழர்களை இழிவுபடுத்தும் பேச்சு என்று, இரண்டு இயக்கங்களும் அதையும் சேர்த்து எதிர்த்தன. டால்மியாபுரத்தை கல்லக்குடி எனப் பெயர் மாற்றக்கோரி, தி.மு.க. இதை மும்முனைப் போராட்டமாக முன்னெடுத்தது. இரண்டு இயக்கங்களின் கிளர்ச்சியில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காவல் துறையின் தடியடிக்கு ஆளாகினர். தூத்துக்குடியிலும், கல்லக்குடியிலும் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டன. துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கண்டித்து, 24.07.1953 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு அறிவித்தார், பெரியார்.

அதன்பிறகு, ராஜாஜி பதவி விலக, காமராசர் ஆட்சி அமைந்தது. காமராசருக்காகத் தனது காங்கிரஸ் எதிர்ப்பையே கைவிட்டார் பெரியார். 1957 சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலாக தி.மு.கழகம் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட்டது. காமராசரை தீவிரமாக ஆதரித்த பெரியார், அந்தத் தேர்தலில் காமராசர் வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததைக் கொண்டாடினார்.

சட்டமன்றத்தில் அண்ணாவின் வாதம்

இதனிடையே 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, இமானுவேல் சேகரனார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரியாரைக் கடுமையாகப் பாதித்தது. முதுகுளத்தூர் கலவரம் தமிழ்நாடு முழுதும் அரசியல் புயலைக் கிளப்பியது. கலவரத்தை அடக்காவிட்டால், தானே களமிறங்குவேன் என எச்சரித்தார் பெரியார். கலவரத்தைக் கட்டுப்படுத்துவது, கொலையாளிகளைக் கைதுசெய்வதற்கு அப்பாற்பட்டு, சாதி ஒழிப்புக்கான பெரும்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்ற எண்ணமும் பெரியாருக்கு உருவானது. 09.10.1957 அன்று ஆத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பெரியார், ஜாதி ஒழிப்புப் போரில் ஈடுபட விரும்புவோர், இரத்தத்தில் கையெழுத்திட்டு தமக்கு அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார்.

பெரும் கிளர்ச்சிக்கு பெரியார் தயாராகப்போகிறார் என்பதை இச்சம்பவம் உணர்த்தியது. அந்த வேளையில்தான், பெரியாரின் 79-வது பிறந்தநாளைக் கொண்டாடி, எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள் வழங்க தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தினர் திட்டமிட்டனர். அந்த நிகழ்ச்சியைச் சிறப்பு மாநாடாக மாற்றினார் பெரியார். 04.11.1957 அன்று தஞ்சையில் கூடிய ஜாதி ஒழிப்பு சிறப்பு மாநாட்டில், ‘ஜாதியைப் பாதுகாக்கும் 13 (2), 25 (1), 29 (1, 2), 368 ஆகிய அரசியல் சட்டப் பிரிவுகளை நீக்கிவோ, திருத்தவோ வேண்டும். இல்லாவிட்டால், நவம்பர் 26ஆம் தேதி, அப்பிரிவுகளைத் தீயிலிட்டுக் கொளுத்துவோம்’ என்று கெடு விதித்தார்.

இந்த இடத்திலே, ‘தாழ்த்தப்பட்டோரிடம் உயர் ஜாதி இந்துக்கள் தொடர்ந்து இப்படியே நடந்துவந்தால், நானே அரசியல் சட்டத்தைக் ‘கொளுத்துவேன்’ என்று 1953ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் நாள், மாநிலங்களவையில் புரட்சியாளர் அம்பேத்கர் கூறியிருந்ததையும் பொருத்திப்பார்க்கலாம். அம்பேத்கர் அதைச் செய்யவில்லை. எனினும், அம்பேத்கர் கூறிய அதே காரணத்திற்காக, அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து, அரசியல் சட்டத்தைக் கொளுத்தப் போவதாக பெரியார் அறிவித்தார்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?

‘இந்திய அரசியல் சட்டம் பிடிக்கவில்லை என்றால், நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள். அரசியல் சட்டம் பிடிக்கவில்லையென்றால் சிறையிலோ மனநோயாளிகள் மருத்துவமனையிலோ இருக்கத்தான் அவர்கள் லாயக்கானவர்கள்’ என்று கொந்தளித்தார் நேரு. அரசியல் சட்டத்தைக் கொளுத்தினால் 3 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிப்பதற்கான மசோதாவை அவசர அவசரமாக சட்டமன்றத்தில் முன்வைத்தது. காமராசர் அரசு.

‘கண்ணீர்த்துளிப் பஞ்ச பாண்டவர்களை முறியடிப்போம் புறப்படுங்கள்’ என்று, தேர்தலின்போது அண்ணா, கலைஞர், நாவலர், மதியழகன், ஈ.வி. கே.சம்பத் ஆகியோரைக் கடுமையாக விமாசித்திருந்தார் பெரியார். ஆனால், அந்த பஞ்ச பாண்டவர்களில் அண்ணனான அண்ணாதான் பெரியாருக்காகச் சட்டமன்றத்தில் குரல்கொடுத்தார்.

“சட்டத்தை அவமதித்தால் மனம் புண்படும் என்றால், பெரியாரைக் கைதுசெய்தாலும் இங்கு பல இலட்சம் பேரின் மனம் புண்படும். பெரியாரின் நோக்கம் சட்டத்தை இழிவுபடுத்துவது அல்ல, சாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை நீக்க வேண்டுமென்பதே. அதைச் செய்துவிட்டால், ஏன் கொளுத்தப்போகிறார்? 3 ஆண்டுகள் சிறை என்பதை 30 ஆண்டுகள் என மாற்றினாலும் உங்களுக்குப் பயன் ஏற்படாது, பெரியார் பின்வாங்க மாட்டார். காமராஜ் ஓங்கி அடித்தாலும், ‘காமராஜரின் கை வலிக்குமே’ என்றுதான் பெரியார் கவலைப்படுவார். ‘ஊருக்கு இளைத்தவன் ஆண்டி” என்பதைப் போல என்னைத்தான் தாக்குவாரே ஒழிய, காமராஜ் பக்கம் திரும்ப மாட்டார். அந்த அளவுக்கு உங்கள் மேல் பாசம் வைத்திருக்கும் பெரியாரை பாதி வழியில் சந்தித்து, உங்கள் தேசியக்கொடியின் கௌரவத்தைக் காப்பாற்றினால்தான் என்ன?” என்று சட்டமன்றத்தில் பெரியாருக்காகக் கேள்வி எழுப்பினார் அண்ணா. காமராசரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

நேருவுக்குக் கண்டனம்

‘சாதியைத்தான் காப்பாற்ற வேண்டுமென்று அரசு முடிவெடுத்துவிட்டது. சட்டத்தைக் கொளுத்துங்கள்’ என ஆணையிட்டார், பெரியார். அதற்கு அவர் குறித்த நாள், 26.11.1957. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள். ஆனால், 06.11.1957 அன்றே பெரியாரை திருச்சியில் கைதுசெய்து, பின்னர் விடுவித்து, மிரட்டிப்பார்த்தது காவல்துறை. ‘சட்டத்தைக் கொளுத்தி, சாம்பலை மந்திரிகளுக்கு அனுப்புவோம்’ என்று போர் முரசு கொட்டினார் பெரியார். மீண்டும் 25ஆம் தேதி, பெரியார் கைதுசெய்யப்பட்டார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசியல் சட்டத்தைக் கொளுத்தினர், மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறைபடுத்தப்பட்டனர். சிறைக்குள்ளேயும் சிறைக்கு வெளியேயும் 17 பேர் உயிர் நீத்தனர்.

பெரியாரைக் கடுமையாக விமர்சித்த நேருவுக்கு, 29.12.1957ல் நாகர்கோவிலில் கூடிய தி.மு.க. பொதுக்குழு, கண்டனம் தெரிவித்து, கருப்புக்கொடி காட்ட ஆயத்தமானது. டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட மாநாட்டில், ‘பெரியாரையும், ஆயிரக்கணக்கான தோழர்களையும் தோழியர்களையும் சிறையில் வைத்திருக்கிறது, இந்த சர்க்கார். பெரியாரை விடுதலை செய்து, ஜாதி ஒழிப்புக்கான வழிவகைகளைக் காண இந்த சர்க்கார் முன்வர வேண்டும். பெரியாரின் அறிவாற்றல், பொதுமக்களிடம் அவருக்குள்ள செல்வாக்கு ஆகியவற்றை யோசித்துப்பார்க்காமல் பேசிய நேருவை, இம்மாநாடு கண்டிக்கிறது’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

06.01.1958 அன்று மாலை சென்னை வந்த நேருவுக்கு, கருப்புக்கொடி காட்ட மீனம்பாக்கத்தில் இருந்து அண்ணாசாலை வரை தி.மு.க.வினர் திரண்டு நின்றனர். திட்டமிட்ட பாதையைத் தவிர்த்து, மாற்றுப்பாதையில் நேரு செல்ல நேர்ந்தது. 5ஆம் தேதியே பெரியாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். “பெரியாரை விடுதலை செய்யக்கோரி, நாங்கள் கிளர்ச்சி செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், பெரியாரே அதை விரும்ப மாட்டார் என அண்ணா கூறியது, ‘விடுதலை’யிலும் பிரசுரமானது. ஆம், சிறையில் இருக்கும்போது பிணை கோருவதோ, விடுதலை கேட்பதோ பெரியாருக்கு பழக்கமற்றது என்பதை அண்ணாவைவிட நன்கறிந்தவர் யார் இருப்பார்?

தி.க.வை என்னசெய்துவிட முடியும்?

சட்டமன்றத்தில் அண்ணா ஆதரித்துப் பேசிய பிறகும்கூட, பெரியார் தி.மு.க.வைச் சாடுவது நின்றபாடில்லை. 1962 சட்டமன்றத் தேர்தலிலும் அதேநிலை எதிரொலித்தது. ஆனாலும் தி.மு.க. தனக்கு எதிரியல்ல என்பதை உணர்த்தினார், பெரியார். 11.01.1962 தேதியிட்ட விடுதலையில் ‘பார்ப்பனத் தோழர்களுக்கு’ என்ற தலைப்பிட்டு, உருக்கமான கட்டுரை ஒன்றை பெரியார் எழுதினார். அந்தக் கட்டுரையில், ‘தேர்தலுக்குப் பிறகு அரசியல் திட்டம் எதுவாக இருந்தாலும், சமுதாயத் திட்டம் என்பது பார்ப்பனர் வெறுப்புத் திட்டமாகத்தான் இருக்கும். இனி கண்ணீர்த்துளிகள் கட்சித் தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டில் உலவ வேண்டுமானால், பார்ப்பன வெறுப்புச் சாதனத்தைத்தான் கைத்தடியாகப் பிடித்துக்கொள்ளவேண்டியவர்கள் ஆவார்கள். இந்தக் காரியத்துக்கு என்னை அணுகலாம். நானும் ஆதரவளிக்கலாம். எனக்கு சமுதாயத் துறையில் பார்ப்பனர்களைத் தவிர, வேறு யாரும் எதிரிகளல்லர்’ என்று எழுதினார்.

தேர்தலில் மீண்டும் காங்கிரசே வென்று ஆட்சி தொடர்ந்திருந்தாலும், வெற்றி எண்ணிக்கை சுருங்கியது. திராவிட முன்னேற்றக் கழகம் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியானது. அந்தத் தேர்தலில் வெற்றிபெறாத அண்ணா, மாநிலங்களவை உறுப்பினரானார். அந்தக் காலகட்டத்தில்தான் இந்திய சீனப்போர் நடைபெற்றது. இந்திய அரசுடன் ஒத்துழைக்க ‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்த அண்ணா, 35,000 ரூபாய் நிதி திரட்டி, இந்திய அரசுக்கு வழங்கினார். தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்த பெரியாரும், திருச்சியில் உள்ள தனது கல்வி நிறுவனங்கள் சார்பில் 2,000 ரூபாயை காமராசரிடம் கொடுக்கச் செய்தார்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?

இந்நிலையில், 1963ல் பிரிவினை தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தது ஒன்றிய அரசு. 25.01.1963 அன்று, மாநிலங்களவையில் இந்த சட்டத்தை எதிர்த்துப் பேசிய அண்ணா, ‘உங்கள் பிரிவினைத் தடைச்சட்டம், தேர்தலில் ஈடுபடுவதால் எங்களைத் தடுக்கலாம். ஆனால், தேர்தலில் நிற்காத திராவிடர் கழகத்தை, உங்கள் பிரிவினை தடைச் சட்டம் என்ன செய்துவிடும்?’ என்று பெரியாரை உயர்த்திப்பிடித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார், அண்ணா. 21.02.1963 இதழில், அண்ணாவின் இந்தக் கருத்தை வெளியிட்டது, விடுதலை ஏடு.

கொள்கைகளை விட்டுவிடவில்லை!

ஆனால், ராஜாஜியின் சுதந்திரா கட்சி உடனான தி.மு.க.வின் நட்பும் தோழமையும் பெரியாரின் விமர்சனக் கணைகளை மேலும் கூர்மையாக்கியது. 21,10.1964ல் திருவள்ளூரில் பெரியாரின் எடைக்கு எடை காய்கறிகள் வழங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய பெரியார், ‘நண்பர் அண்ணாதுரையும் கருணாநிதியும் அடுத்தபடியாக நாங்கள்தான் ஆளப்போகிறோம் என்கிறார்களே – அப்படியே ஆட்சிக்கு வந்தாலும் ஆச்சாரியார் சொல்படிதானே ஆள்வார்கள்?” என்று விமர்சித்தார். பெரியார். இந்த விமர்சனக் கணைகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. “ராஜாஜி புராணக் கருத்துகளில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர். அதை விட்டுவிட்டு, அவர் எங்களுடன் சேரவில்லை. அதுபோலவே தாங்களும் எங்கள் கொள்கையை விட்டுவிட்டு, அவர் கருத்தை ஏற்றுக்கொண்டுவிடவில்லை’ என 11.07.1965ல் விளக்கமளித்தார் அண்ணா.

எனினும், அப்போது தி.மு.க.வில் இருந்த எம்.ஜி.ஆர், பெரியாருடன் சில மேடைகளில் இணைந்து பங்கேற்றார். 1964. நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் திருச்செங்கோடு பரமசிவம் ஏற்பாட்டில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழாவில் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டு, பெரியாருக்கு கருப்புச் சால்வை போர்த்தி புகழ்ந்தார். தனுஷ்கோடி புயல் நிவாரண நிதியாக ஒரு லட்சம் வழங்க நினைத்துக்கொண்டிருப்பதாக எம்.ஜி.ஆர். அறிவித்தது, ‘விடுதலை’யில் முதல் பக்கச் செய்தியானது. 07.03.1966 அன்று ஜி.என்.வேலுமணியின் மகன் சரவணன் – சாந்தி திருமண விழாவில் பெரியார், காமராசர் கலந்துகொண்டனர். வரவேற்றுப் பேசிய எம்.ஜி.ஆரை ‘கலையுலக ரத்தினம்’ எனப் பாராட்டினார். பெரியார். பெரியாரைப் போல நமக்காகவே வாழ்பவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி, அவர்கள் சொல்வதுபோல் நடந்து காட்டுவதாகும் என எம்.ஜி.ஆர் அப்போது கூறினார்.

காமராசர் ஆட்சியில் இருந்து விலகி, பக்தவத்சலம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், பக்தவச்சலம் ஆட்சியின்மீது பெரியாருக்கு உளப்பூர்வமான நம்பிக்கை இருக்கவில்லை. காமராசரைத் தவிர காங்கிரசில் பெரியாரைக் கனிவோடு ஏற்றுக்கொண்டவர்களும் எவரும் இல்லை. ஆனாலும் சுதந்திரா கட்சி மீதான வெறுப்பும் காமராசர் மீதான கனிவும் 1967 தேர்தலிலும் பெரியார் காங்கிரசையே ஆதரிக்கச் செய்தது.

ஆனால், தி.மு.க மட்டும் 137 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. விருதுநகரில் காமராசரே தோல்வியுற்றார்.

“பொதுவாக, காமராசர் தோல்வியைத் தவிர மற்ற தோல்விகள் எனக்கு கவலை தரவில்லை. நம் உயிர் போன்ற கொள்கைகளுக்கு இந்த ஆட்சியில் கேடு நேராதவரை, ஆட்சியின் போக்கைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இனி, நமது வேலை நமது கொள்கைகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யவேண்டியதும், அதனால் ஏற்படும் பலாபலன்களுக்கு நாம் தயாராக இருக்கவேண்டியதுமே நமது கடமை’ என்று 27.02.1967ல் தேர்தல் முடிவுகள் பற்றி அறிக்கை எழுதினார் பெரியார். தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும் அனுபவமின்மை காரணமாக, 20 தொகுதிகளில் மட்டுமே வென்ற ராஜாஜியிடம் ஆட்சியை ஒப்படைக்கக்கூடும் என்ற கருத்துருவாக்கம் எழத் தொடங்கியது.

ராஜாஜியிடமே சிலர் இந்த யோசனையை முன்வைக்க, ‘அதை அவாள் அல்லவா சொல்ல வேண்டும்?’ எனத் தயங்கினார். அப்படியொரு வாய்ப்பை ராஜாஜிக்கு வழங்காமல், அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்தது.

இப்போது, பெரியாரின் நிலைப்பாடு என்ன என்பதில் எல்லோருக்கும் ஓர் ஐயம். ‘நான் வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன்’ என்றார். ஏனெனில், முன்பே குறிப்பிட்டது போல, காங்கிரசில் காமராசர் மட்டுமே பெரியாருக்கு வேண்டப்பட்டவர். ஆனால் தி.மு.க.விலோ, எல்லோருமே பெரியாருக்கு வேண்டப்பட்டவர்கள். பெரியார் எவ்வளவு கடுமையாகத் திட்டியும் தாங்கிக்கொண்டவர்கள். பெரியாரின் பகுத்தறிவு, வகுப்புரிமை, சாதி ஒழிப்புக் கொள்கைக்கு உடன்பாடானவர்கள். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாகக் கடவுளை மறுத்துவிட்டு, மனப்பூர்வமாக உறுதியேற்றுப் பதவியேற்றவர்கள். அதைவிட முக்கியமாக, பார்ப்பனரல்லாத அமைச்சரவையை அமைத்தவர்கள். அதனால் பக்தவத்சலத்தைவிட ஒருகாலும் மோசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்று திடமாக நம்பினார், பெரியார்.

அந்த நம்பிக்கைக்கு உரமாக அமைந்தது. அண்ணாவின் சந்திப்பு. அந்த நம்பிக்கையை உண்மையாக்கியது. அண்ணாவின் ஆட்சி.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – செயல்வீரா்களும் தளகர்த்தர்களும் நிறைந்த பாசறை!

MUST READ