spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - செயல்வீரா்களும் தளகர்த்தர்களும் நிறைந்த பாசறை!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – செயல்வீரா்களும் தளகர்த்தர்களும் நிறைந்த பாசறை!

-

- Advertisement -

நீரை மகேந்திரன்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - செயல்வீரா்களும் தளகர்த்தர்களும் நிறைந்த பாசறை!

திராவிட முன்னேற்றக் கழகம் தகர்க்க முடியாத எஃகு கோட்டை. காரணம், தகர்க்க முடியாத அதன் அடித்தளம். திராவிடக் கொள்கைகள் மீது நிற்கும் அதன் வேர். அதனால்தான் ஓர் அரசியல் கட்சி 75 ஆண்டுகளைக் கடந்தும் அதே வீரியத்துடன் தனது பாதையில் இருந்து விலகாமல் சமூக நீதி, சமத்துவ இலக்குகளுக்குக் குரல்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

we-r-hiring

தி.மு.கழகத்தின் அடித்தளம் கொள்கை என்றால், அதன் தாங்கு தூண்களாக, படைவீரர்களாக, செயல்வீரர்களாக இருப்பவர்கள் கழகத்தின் உயிர்த்துடிப்பு மிக்க தொண்டர்கள். ‘தி.மு.க. படையணி என்றால், அதன் ஒவ்வொரு தொண்டரும் போர் வீரர்கள்’ என்றார் பேரறிஞர் அண்ணா.

இந்த உறுதிமிக்க கருத்து, அமைப்புச் செயல்பாடுகளில் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம். கட்சியில் அரசியல் பயிற்சி அளிக்க ‘பாசறை முகாம்’ என்று பெயர் சூட்டினார். கிட்டத்தட்ட போர் முனைக்குத் தயார்படுத்தும் தளபதி போல கட்சியினரை வழிநடத்தினார் அண்ணா. கழகத்தின் இந்தக் கட்டமைப்பை, கழகம் தொடங்கப்பட்ட காலத்துடன் ஒப்பு நோக்க வேண்டும்.

தி.மு.கழகம் 1949ல் தொடங்கப்பட்டிருந்தாலும், தன் தோற்றுவாயாக அண்ணா, திராவிடர் கழகத்தில் இருந்தபோதே, அந்த சிந்தனை கொண்டவராக இருந்ததை அறியலாம். அரசியல் அதிகாரத்தை நோக்கிய தெளிவு உடையவராக அண்ணா இருப்பதை ‘திராவிட நாடு’ குறிப்புகளில் இருந்து அவதானிக்க முடியும். அந்த வகையில், அந்தக் கருத்துக்குவலுசேர்க்க, திராவிடர் கழகத்தில் இருந்த காலகட்டத்தில் இருந்து தன்னோடு பயணித்த தோழர்களையும் அந்தக் கருத்தியலுக்குக் கண்ட அணிச் சேர்க்கைதான் 1949ல் தி.மு.கழகமாக வடிவம் கொள்கிறது. திராவிடர் கழகத்தின் நிர்வாக கமிட்டியினர் கிட்டத்தட்ட சரிபாதிக்கு மேல் தி.முகழகத்தினராக மாறினர்.

திமுகழகத்தின் முதல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அத்தளை பேரும் திராவிடர் கழகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள். அண்ணா அவர்களை ஒருங்கிணைத்தார். அனைவருமே தி.மு. கழகத்துக்கு காரணமாக இருந்தவர்கள்தான். பெத்தாம்பாளையம் பழனிசாமி, ஜி.பி. சோமசுந்தரம், குளித்தலை சோழகர், கே.கே.நீலமேகம் என “திராவிட நாடு’ வெளியிட்ட நீண்ட பட்டியலில் அவற்றைக் காணலாம்.

அண்ணாவின் தம்பிகளாக…

அண்ணா ஒருவர் மட்டுமே கழகத்தைக் கண்டார் என அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், அண்ணா அவர்களிடம் இருந்த வழிகாட்டும் பண்பு, அதை சாத்தியமாக்கியது. அவர் தலைமைப் பொறுப்பை விரும்பியவர் அல்ல; கட்சியின் பொறுப்பு. அதிகாரம் ஆகியவை ஓரிடத்தில் குவியக் கூடாது, பரவலாக்கப்பட வேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தவர். அதுதான் தன்னைவிட இளைய வயதினர். இளைஞர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிற தொலைநோக்கினை உருவாக்கியது.

கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை இளைஞர்களுக்கு விட்டுக்கொடுத்தார் அல்லது தனது வழிகாட்டலில் இளைஞர்களைத் தலைமையேற்க வைப்பது என்கிற நடைமுறையை உருவாக்கினார். அந்த வகையில், தி.மு.கழகத்தில் தொடக்ககாலத்தில் அனைவரும் தொண்டர்கள் என்பது மாத்திரமல்ல; அனைவருமே தலைமைத்துவம் கொண்டவர்கள்.

இந்தப் போக்கு கட்சியின் தொடக்ககாலத்தில் இருந்தே கட்டமைக்கப்பட்டது. தி.மு.கழகத்தின் வரலாற்றில் அண்ணா ஒருவர் மட்டுமே தலைவர் என்றோ, முக்கிய மூன்று பெரும் தலைவர்கள், ஐந்து பேரும் தலைவர்கள் என்றோ எந்தக் கணக்கும் கிடையாது. போராட்டக் களத்தில் யார் தலைமை ஏற்கிறார்களோ அவர்தான் தளகர்த்தர். கட்சிக் கட்டமைப்பில் இன்று வரையிலும் அந்தப் போக்கு இருக்கிறது. செயல்படுபவரே தலைவர் என்பதுதான் தி.மு.கழகம் உருவாக்கி இருக்கிற அந்த அடித்தளம். 75 ஆண்டுக்கால செயல்பாடுகளில் இருந்தே அவற்றைப் பார்க்கலாம்.

கிளைக் கழகத்தில் இருந்து படிப்படியாக

தி.மு.கழகத்தின் தலைவர்கள் என்று உருவானவர்கள் அனைவருமே செயல்வீரர்களாக இருந்து வளர்ந்தவர்கள். கட்சித் தலைமை தேர்வு செய்து, தலைவர்களாக உருவானவர்கள் இல்லை. ஒரு கிளைக் கழகத்திலிருந்து செயல்பட்டு, படிப்படியாக மேலே ஏறி வந்தவர்கள். தி.மு.கழகத்தின் கட்சிக் கட்டமைப்பு பிரமிடு போன்ற வடிவம். கீழிருந்து எழுப்பப்பட்டுள்ளது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - செயல்வீரா்களும் தளகர்த்தர்களும் நிறைந்த பாசறை!

கிளைக் கழகங்கள் அன்று வட்டக் கழகம். இன்று, ஒன்றிய நகர பேரூர் கழகங்கள் மாவட்டக் கழகம் என்று பிரிக்கப்பட்டு இயங்குகிறது. ஒரு கிளை நிர்வாகியாக இருப்பவர், தலைமைக் கழக நிர்வாகம் வரை படிப்படியாகப் பொறுப்புக்கு வரலாம். கட்சியின் முதல் பொதுச்செயலாளர் பேரறிஞர் அண்ணா, காஞ்சிபுரம் கிளைக் கழகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துகொண்டவர். 50 ஆண்டுக்காலம் கட்சியின் தலைவராக இருந்த கலைஞர், திருவாரூர் கழகக் கிளையில் இருந்துவந்தவர். தொடக்க காலத்தில் பிரச்சாரக் குழுவில் இருந்து உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டதும், அவர் இயங்கியதும் திருவாரூர் கிளையில் இருந்துதான். இன்றுவரை கட்சி கட்டமைப்பும் அப்படித்தான் உள்ளது.

கிளை தொடங்கி மேல்மட்டம் வரை, அந்தந்த பொறுப்புக்கு வாக்களிக்கும் உரிமை கொண்ட வார்டு, கிளை, வட்ட, மாவட்டப் பிரதிநிதிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என கட்சியின் ஜனநாயக நரம்பு மண்டலம் இயங்குகிறது. இந்தக் கட்டமைப்பிலிருந்து கவனம் பெறுபவர்கள்தான் பின்னாட்களில் கட்சியை வழிநடத்தியிருக்கின்றனர்.

கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இப்படியான பட்டியல் நீளமானது. முன்னணி செயல்வீரர்கள் நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வெ. கி.சம்பத், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன், கலைஞர் மு.கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, கே.கே.நீலமேகம், ப.உ.சண்முகம், ஏ.வி.பி.ஆசைத்தம்பி என எண்ணற்றோர் பட்டியலில் உள்ளனர்.

பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்து பயணித்த அனைவருமே இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களாக இருந்தனர். தொடக்க காலத்துக்குப் பின்னர் படிப்படியாக வளர்ந்து, தலைமை பொறுப்புகளுக்கு வந்தவர்கள் என எழுதலாம். அதே நேரத்தில், இவர்களை இரண்டாம் கட்ட தலைவர்கள் என்று குறுக்கிவிடவும் முடியாது. கொள்கை வகுப்பாளர்களாக இருந்தவர்கள். தீர்மானகரமாகக் கட்சியை உருவாக்கியவர்களாகவும் இருந்தனர்.

களமும் நிலமும்

1953ஆம் ஆண்டு மும்முனைப் போராட்டம், தி.மு.கழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய திருப்புமுனைப் போராட்டம். உரிமை மீட்புப் போராட்டங்களில் தி.மு.க.வின் களச் செயல்பாடுகள் எந்த அளவுக்கு வீரியமாக இருக்கும் என்பதை உலகம் அறியும். அண்ணாவுடன் கைது செய்யப்பட்டவர் ஈ.வெ.கி சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என். வி.நடராஜன் ஆகியோர். வழக்கினை ஐவர் வழக்கு என அடையாளப்படுத்தினர். அதற்குப் பொருள் அப்போது கலைஞர் மு.கருணாநிதி முக்கிய தலைவராக இல்லை என உலவவிடுவதுதான். ஆனால், அப்படிக் குறிப்பிடுவது பிழையானது என்பதை திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு உட்பட பலர் குறிப்பிடுகின்றனர்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - செயல்வீரா்களும் தளகர்த்தர்களும் நிறைந்த பாசறை!

ஒரு முனையில் அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் கைது என்றால், மற்றொரு போராட்ட முனையான கல்லக்குடியில் தண்டவாளத்தில் ரயிலை மறித்து நின்று கலைஞர், கண்ணதாசன், இராம.சுப்பையா உள்ளிட்ட போராட்டக் குழுவினர் கைதாகிறார்கள். தி.மு.க.வினரின் போராட்ட முறை குறித்து இணையங்களில் காணக்கிடைக்கும் கருத்துகளில் ஒன்று இது. கல்லக்குடி போராட்டம் தொடர்பானது.

ஒருமுறை கல்லக்குடி போராட்டத்தைப் பற்றி, “ஒருவேளை இரயில் உங்கள்மீது பாய்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று கலைஞரிடம் கேட்கின்றனர். அதற்குக் கலைஞர்,

“என் கழுத்தில் வழிந்திருந்த இரத்தத்தை எடுத்து, ‘கல்லக்குடி’ என்று அண்ணா பெயர்ப்பலகையில் எழுதியிருப்பார்” என்று பதிலளித்திருந்தார்.

தி.மு.கழகத்தின் கட்டமைப்பு, இரண்டாம் கட்ட தளபதிகளைச் சார்ந்து இருக்கிறது என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. தலைமைக் கழகம் அறிவிக்கும் போராட்டத்தைக் களத்தில் வெற்றிகரமாக நிறைவேற்ற தங்கள் உயிரையும் இழக்கத் தயாராக இருந்தனர். 1957ல் நேருவுக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு, காவல்துறை தாக்குதலில் சென்னை மருத்துவமனைகள் நிரம்பியதை அறிகிறோம்.

1963 இறுதியில், இந்தியைக் கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டபோது, அந்த சட்ட நகலை எரித்து, எதிர்ப்பைக் காட்டுவதற்காக அடுத்த ஓராண்டுக்கான போராட்டத் திட்டத்தை, மாதம் வாரியாக மாவட்ட வாரியாக அறிவிக்கிறது தலைமைக் கழகம். சட்ட நகலை எரிப்பவர்கள். சிறைக்குச் செல்ல தயாராக இருப்பவர்கள், போராட்டத்தில் மட்டும் கலந்துகொள்பவர்கள் எனப் பட்டியலை இறுதிசெய்து அறிவித்துள்ளனர். கோவை. மு.ராமநாதன், மதுரை முத்து, எஸ்.எஸ்.தென்னரசு, ஆரணி செல்வராசு எனப் பெருந்திரளானவர்கள் சிறை நிரப்பியுள்ளனர். பலர் உயிர்த் தியாகம் செய்து, அப்போராட்டத்தை வலுவாக்கியிருக்கின்றனர்.

1962 விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில், அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மன்னை நாராயணசாமி, கோ.சி. மணி, தஞ்சாவூர் உபயதுல்லா எனப் பெரும்படை நள்ளிரவில் உணவுப்பொருள் பதுக்கல்காரர்களுக்கு எதிராகக் களத்துக்குச் சென்றுள்ளது. இப்படிப் பகுதிகள்தோறும் வலுவாக இயங்கியவர்கள் கழகத்தின் முகமாக அறியப்பட்டனர்.

தஞ்சையில் போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம், கோவை, மதுரையில் பஞ்சாலை தொழிற்சங்கப் போராட்டம், திருச்சியில் பீடித் தொழிலாளர் போராட்டம், தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர் வேலை நிறுத்தம் என ஏராளமான தொழிற்சங்க நடவடிக்கைகளில் முன்நின்றுள்ளனர்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - செயல்வீரா்களும் தளகர்த்தர்களும் நிறைந்த பாசறை!

வாக்காளர் திரட்டல்

தேர்தல் களத்தில், தி.மு.கழகத்தினரின் கட்சிப் பணி அளப்பரியது. தொடக்ககாலத்திலேயே உயிர்ப்பலி கண்டிருக்கிறது. 1952 தேர்தலில் கழக ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு ஆதரவாகப் பணியாற்றிய கடலூர் தோழர் மஜீத் படுகொலை செய்யப்பட்டார். 1957ல் கோவையில் ஆரோக்கியசாமி கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படி, தொடர்ச்சியாக பல உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன.

தொடக்ககாலத்தில் முன்னணியில் இருந்தவர்கள் தவிர, காலந்தோறும் இரண்டாம் கட்ட தளகர்த்தர்களையும் வலுவாக உருவாக்கியுள்ளது.

தி.மு.க. 1970-களில் வீச்சாக வளர்ந்தவர்களில் வீரபாண்டி ஆறுமுகம், கீரை.தமிழ்ச்செல்வன், ஜி.எம்.ஷா, பெ.சு.திருவேங்கடம், கா.மு.கதிரவன், து.ப.அழகமுத்து, கா.ரா.சுப்பையன், மு.கண்ணப்பன், துரைமுருகன். பொன்.முத்துராமலிங்கம், ஆற்காடு வீராசாமி, சி.டி.தண்டபாணி என தமிழ்நாடு முழுவதும் பட்டியல் நீளமானது. இதன் தொடர்ச்சியை இன்றுவரை பார்க்கலாம். கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ஆ.ராசா போன்றவர்கள் மண்டல, மாவட்ட அளவில் கழகத்தினைக் கட்டுக்கோப்பாக வழிநடத்துவதை அறியலாம்.

இந்தப் பட்டியல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு இடையிலும், தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லை என்றாலும் பெரும் பயிற்சிக் களமாகக்கொண்டு இயங்கிக்கொண்டேயிருக்கிறது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - செயல்வீரா்களும் தளகர்த்தர்களும் நிறைந்த பாசறை!

கழகத்தின் குரல்கள்

தி.மு.கழகத்தை ஊர்கள்தோறும் கொண்டுசென்றவர்களில் பேச்சாளர்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. கழகக் கூட்டங்கள், மாநாடுகளில் கருத்தரங்க உரைகளுக்கு முன்னர் அல்லது முதன்மை நிகழ்ச்சியாகவோ, இன்னிசை நிகழ்ச்சி, வழக்காடுமன்றம், பட்டிமன்றம், கவியரங்கம் நிச்சயம் இடம்பெறும். திராவிடக் கொள்கைகளை எளிய மக்களிடத்தில் கொண்டுசேர்த்த இந்த வடிவங்களில் ஆழங்கால்பட்டவர்கள் தி.மு.கழகத்தினர். நாகூர் ஹனிபா கழகத்தின் இசைக்குரலாக முழங்கியவர்.

கழகத்தின் பேச்சாளர்கள், கவிஞர்கள் வரிசையும் நீளமானது. இரா.வெற்றிகொண்டான், புலவர் பொன்னிவளவன், தஞ்சை கூத்தரசன், பாவலர் முடியரசன், நன்னிலம் நடராசன், புலவர் ஆடலரசு, தீப்பொறி ஆறுமுகம் என தமிழ்நாடு முழுவதும் அலைந்தோர் பலர். இன்றும் தி.மு.க.வின் பெரும் படையாக, சிறப்புக்குரிய இடங்களில் பேச்சாளர்கள் உள்ளனர்.

தி.மு.கழகத்தின் மாணவர் அணி, இளைஞர் அணி மற்றும் பல்வேறு அணிகள் உருவாக்கம் செயல்வீரா்களுக்கான பயிற்சிப் பட்டறையாக உருவானது. இந்தக் கட்டமைப்பும் கழகத்தின் உயிரோட்டத்துக்கு அடித்தளமாக உள்ளது.

கழகத்தின் முன்னணி செயல்வீரர்களாக வருவது என்கிற கணிதம் வெளிப்படையானது. அந்தச் சுடர், எப்பொழுது யாரிடம் வந்து சேரும் என்று சுணிக்க முடியாதது அல்ல. சோர்வற்ற உழைப்பு, கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்புகளைக் கொண்டுவந்து சேர்க்கிறது. அதைத்தான் அங்கீகாரம் என தி.மு.கழகத்தின் தொண்டர்கள் உணர்கின்றனர்.

தி.மு.கழகம் என்பது பெரும் ஆலமரம். விழுதுகள் தரையில் ஊன்றி தாங்கி நிற்பதைப்போல தமிழ்நாடு முழுவதும் அதைத் தாங்கி நிற்பவர்கள், வேராக நிற்பவர்கள், கழக மூச்சினையே உயிர்த்துடிப்பாகக் கொண்டுள்ளனர். தி.மு.கழகத்தின் கட்டமைப்பை உயிர்ப்போடு வைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தத் தொண்டர்களின் உணர்வுகள்தான் 75 ஆண்டுக்காலப் பயணத்தின் அடித்தளம்.

 

MUST READ