spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!

-

- Advertisement -

கொளத்தூர் மணி

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!

அனைவருக்கும் சமமாக நிரப்பப்பட வேண்டும் என்று உயரிய சிந்தனையில் முளைத்த சமூக நீதி, அதனுடைய விளைவான இடஒதுக்கீடு என்பது அவ்வளவு எளிதாக தமிழர்களுக்கோ அல்லது இந்திய துணைக்கண்டத்தில் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்களுக்கோ கிடைத்திடவில்லை.

we-r-hiring

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா தனது ஆட்சிக்காலத்தில் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் தமிழ்நாடு பொருளாதாரத்தில், தொழிலில், கல்வியில் உயர்வது மட்டுமல்ல சமூக நீதியிலும் அனைத்துப் பிரிவு மக்களும் சமமாக வாழ எண்ணம் கொண்டு உழைத்தார். அதனால்தான், “இந்தியாவின் தலைநகரமாக டெல்லி இருக்கலாம் ஆனால், சமூக நீதியின் தலைநகரம் தமிழ்நாடாகும்” என்று மண்டல் நாயகர் வி.பி.சிங் அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றிலே உரையாற்றியபோது குறிப்பிட்டார்.

எந்தவொரு சமூக நீதித் திட்டத்தையும் கலைஞர் நடைமுறைப்படுத்தும் போது, மிக எளிதில் நிறைவேற எதிரிகள் விடவில்லை. பல சட்டப் போராட்டங்களை நடத்தியே அதில் அவர் வெற்றிகண்டார். அவற்றுள் ஒரு சில திட்டங்களை இங்கு வெளிக்கொணர்கிறேன்.

பொருளாதார வரம்பு முறியடிப்பு!

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்த 41சதவிகித இடஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டுமென்று, அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் பெரியார் வலியுறுத்தினார். ஆனால், அண்ணா அதன்பிறகு குறைவான காலம்தான் உயிரோடு இருந்தார் என்பதால் அப்போது சாத்தியப்படவில்லை எனினும் அடுத்துவந்த கலைஞர், இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டுமென்பதில் அறிவுரையைப் பெற்றுத்தான் சட்டநாதன் ஆணையம், 49சதவிகித உறுதியோடு இருந்து சட்டநாதன் ஆணையம் அமைத்தார். பெரியாரின் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. அதன்படி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31சதவிகிதஆகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 18 சதவிகிதஆகவும் கலைஞர் உயர்த்தினார்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!

ஆனால், 1979-ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர், அரசாணை எண் 1156 மூலம் அப்போது நடைமுறையில் இருந்த 31சதவிகித பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு குடும்ப வருமான வரம்பு ரூ.9000 என நிர்ணயம் செய்தார். கடும் எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. பல போராட்டங்கள் நடத்தியது. அந்த ஆணையை எரித்து அதன் சாம்பலை தலைமைச் செயலகத்திற்கு அனுப்பும் போராட்டம் முக்கியமானது. அப்போது கல்வி அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், ‘அந்த சாம்பலை கோட்டையில் குரோட்டன்ஸ் செடிகளுக்கு உரமாகப் போடுவேன்’ என்று அகங்கார அறிவிப்பு செய்தார்.

அப்போது தி.மு.க.வுடன் சேர்ந்து இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள், “நாங்கள் நாவலர் நெடுஞ்செழியன் அமைச்சர் பணி ஆற்றுகிறார் என்று நினைத்து இருந்தோம். ஆனால் அவரோ, கோட்டையில் தோட்டக்காரராகப் பணிபுரிகின்றார் என்பது இப்போதுதான் தெரிகிறது” என்று நகைச்சுவையுடன் விமர்சித்திருந்தார்.

இந்த அரசாணையை எதிர்த்து தி.மு.க. சட்டப் போராட்டம் நடத்தியதில் மூன்று நீதிபதிகளில் இருவர் அந்த ஆணைக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லியதால், ஆணை திரும்பப் பெறப்படவில்லை. நீதிமன்றத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும், தி.க., இந்திய பொதுவுடைமைக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சி, ரமணி பாயின் ஜனதா தளம் போன்ற பல்வேறு அமைப்புகளை இணைத்துக்கொண்டு, மக்கள் மன்றத்தில் இந்த வருமான வரம்பை எதிர்த்து கலைஞர் பாரிய பரப்புரை மேற்கொண்டார். அதன் விளைவாக மக்களவைத் தேர்தலில் மாபெரும் தோல்வியை எம்.ஜி.ஆர் சந்தித்தார். அதனால் இந்த ஆணையை உடனே திரும்பப் பெற்றதுடன் 31சதவிகித இருந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 50சதவிகித-ஆக எம்.ஜி.ஆர் உயர்த்தினார். இது கலைஞரின் சட்டப் போராட்டத்திற்கும், மக்கள் மன்றப் போராட்டத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.

நுழைவுத்தடை தகர்ந்தது!

1980-ஆம் ஆண்டு, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பொருளாதார பின்வாங்கிவிட்டாலும், 1984-ஆம் ஆண்டு மார்ச் மாதம், தமிழ்நாடு அளவுகோலைக் கொண்டுவந்து, கடும் எதிர்ப்புகளால் எம்.ஜி.ஆர். தொழில்கல்விக்கான நுழைவுத்தேர்வை அறிவித்தார். கல்வியில் இருந்து ஒடுக்கப்பட்டோரை வெளியேற்ற வேண்டும் என்ற வருணாசிரம சிந்தனைக்கு எம்.ஜி.ஆரின் இம்முயற்சிகள் துணைநின்றன. இதன்படி பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு மூலமே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற கட்டாயத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அப்போதே திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்த்தன.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!

2005-ஆம் ஆண்டு ஆட்சியின் கடைசி காலகட்டத்தில், அதாவது ஜூன் 19 அரசாணை எண். 185/2005 மூலம் விதிகளை ஏதும் பின்பற்றாமல் அவசரமாகத் தொழிற்கல்விக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்தார் ஜெயலலிதா. இதை எதிர்த்து பிரியதர்ஷினி என்ற மாணவி தொடுத்த வழக்கில், நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜெயலலிதா இயற்றிய அவசரச் சட்டம் செல்லாது என்று அறிவித்தது. அதாவது 19.06.2005 வெளியான அரசாணை 27.06.2005 அன்று செல்லாது என்றானது.

நுழைவுத் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை தேர்தல் அறுவடையாக மாற்ற நினைத்த ஜெயலலிதா அம்மையார், மீண்டம் தமிழ்நாடு தொழிற்முறைப் படிப்புகளில் சேர்க்கை ஒழுங்குமுறை சட்டம் 2006 என்ற சட்டத்தினை 02.02.2006-ல் அறிவித்து, 03.02.2006-ல் அரசாணை வெளியிட்டு 18.02.2006-ல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு செய்தார். இதை எதிர்த்து நிஷாந்த் ரமேஷ் என்பவர் தொடுத்த வழக்கில் ஏ.பாஷா மற்றும் பிரபா ஸ்ரீதர் அடங்கிய அமர்வு நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று மீண்டும் தீர்ப்பளித்தது.

இத்தகைய நீதிமன்ற தீர்ப்புகளுக்கு இடையில் கலைஞர் நுழைவுத்தேர்வுகளை எப்படி நீக்கினார்?

2006-ஆம் ஆண்டு மே மாதம் கலைஞர் ஆட்சிப்பொறுப்பேற்றதும் 07.07.2006 அன்று அரசாணை எண் 206 மூலம் கல்வியாளர் எம்.அனந்த கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்வதை ஆராய குழு ஒன்றை அமைத்தார்.  அக்குழு, 13.11.2006-ல் நுழைவுத்தேர்வை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கலாம் என அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் 06.12.2006 சட்ட முன்வடிவை சட்ட மன்றத்தில் தாக்கல் செய்து, 05.03.2007 அன்று அரசிதழில் வெளியிட்டார். பின்னர் Act 3 of Tamilnadu Admission in Professional Education Institutes Act 2006 சட்டமாக ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று, 07.03.2007 அன்று நடைமுறைக்கு வந்தது.

இதை எதிர்த்து எஸ்.அஸ்வின்குமார் என்பவரும், தனியார் பயிற்சி நிறுவனங்களும் வழக்குத் தொடுத்தன. நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றும் ஜே.ஏ.கே.சம்பத்குமார் அடங்கிய அமர்வு, கலைஞர் கொண்டுவந்த சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தனர்.

2006-ஆம் ஆண்டு 12,000 ஆயிரம் மாணவர்களே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த நிலையில், நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், 2007- 20,000; 2008- 34,000: 2009- 35,000: 2010- 54,000 1 சேர்க்கை அதிகரித்து, 2025-26-ல் 1,90,624 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிறது அண்ணா பல்கலைக்கழகப் புள்ளிவிவரங்கள். கலைஞர் கல்வித் துறையில் உருவாக்கிய புரட்சியால்தான் தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம் கண்டது. இன்று இந்தியாவில் ஆண்டுதோறும் பொறியியல் பட்டம் படித்தவர்களில் 17 விழுக்காடு பேர் தமிழர்கள். இந்தப் பெருமை கலைஞரையே சாரும்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!

சமச்சீர் கல்விக்கும் சவால்!

2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ‘அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்விமுறையை தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம்’ என்று வாக்குறுதி அளித்தார் கலைஞர். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக கொண்டுவரப்பட்டதுதான், ‘சமச்சீர் கல்வி’ முறை (Uniform system of school education). தி.மு.க. ஆட்சியில் 2009-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டம், 2010-11 கல்வியாண்டில் முதல் வகுப்புக்கும் 6-ஆம் வகுப்புக்கும் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு, 2-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு முடிய. மற்றும் 7-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு முடிய ஆன வகுப்புகளுக்கு இந்த 2011-12 கல்வி ஆண்டில் நடை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையில் ஒன்றை அமைத்தார். அந்தக்  குழுவின் பரிந்துரைகளை  ஆய்வு செயது ஆலோசனைகள் வழங்க எம். பி.விஜயகுமாரைக் கொண்ட ஒருநபர் குழு அமைக்க 3.9.2007 அன்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. அந்தக் குழுவும் தனது ஆலோசனைகளை அரசுக்கு அளித்ததன் பிறகே, 2009-ல் சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் இடையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, 2011-ல் புதிதாகப் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சமச்சீர்கல்வியை சந்தியில் நிறுத்தியது. மே 13-ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மே 16-ல் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே மே 22-ல் கூட்டிய ஒரு மணி நேரம்கூட முழுமையாக நடைபெறாத தன் முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்கு, அடுத்த நாளே இந்த ஆண்டு சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். சமூக நீதி ஆர்வலர்கள் அரசின் அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றம் சென்றார்கள். ஆனால், அரசின் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த விரும்பாத ஜெயலலிதா, தன் இயல்பான பிடிவாத குணம் காரணமாக 07.06.2011 அன்று சட்ட மன்றத்தில் சமச்சீர்க் கல்விச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவந்து நிறைவேற்றினார்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!

சென்னை உயர்நீதி மன்றம் அச்சட்டத்திருத்தம் செல்லாது என அறிவிக்க ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 14.06.2011 அன்று வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். சௌகான் மற்றும் சுந்திரகுரு ஆகிய இருவர் அடங்கிய அமர்வு, வல்லுநர் குழு அமைக்க உத்தரவிட்டது. ஏற்கெனவே முதல் மற்றும் 6-ஆம் வகுப்பில் அமலுக்கு வந்துள்ள சமர்ச்சீர் கல்வி அப்படியே தொடர வேண்டும், பிற வகுப்புகளுக்கான கல்வி குறித்து முடிவுசெய்ய தமிழ்நாடு அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமிக்க வேண்டும், அந்த வல்லுநர் குழு இரண்டு வாரத்தில் ஆய்வு செய்து அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், அதன்பேரில் உயர் நீதிமன்றம் இது குறித்து ஆணையிடும் என அறிவித்ததன் அடிப்படையில் கலைஞர் கொண்டுவந்த சமச்சீர் கல்வித்திட்டம் இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது, மாணவர்களுக்கான கல்வி கற்றலும் ஏற்றத்தாழ்வில்லாமல் எளிதாக இருக்கிறது.

அருந்ததியர் வளர்ச்சிக்கு அடித்தளம்!

அனைத்து மக்களுக்கும் அதிகாரம் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே மக்களாட்சியின் முக்கியக் கூறாகும். அதன் அடிப்படையில் 2009-ஆம் ஆண்டு கலைஞர் கொண்டுவந்த தமிழ்நாடு அருந்ததியர் உள் இடஒதுக்கீடுச் சட்டம் 2009 மிக உன்னதமான ஒன்றாகும். இந்தியர்களுக்கு கல்வியில் இடஒதுக்கீடு வேண்டும் என்றே முதலில் ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர், தேர்தலில் இஸ்லாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் ஒதுக்கீடு வேண்டும். பிராமணர் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும், பட்டியல் இனத்தவருக்கு வேண்டும், பிற்படுத்தப்பட்டவர்க்கு வேண்டும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்க்கு வேண்டும், பெண்களுக்கு வேண்டும் என்று இடஒதுக்கீடு பரிணாம வளர்ச்சிபெற்று வருகிறது.

இதன் அடிப்படையிலேயே பட்டியல் இனத்தவர்களிலேயே சுல்வி சமூகரீதியாகப் பின்தங்கியுள்ள அருந்ததியினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கலைஞர் நிறைவேற்றினார். இதற்காகத் தனது கடந்தகால அனுபவங்களைக் கொண்டு, 2008-ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் ஆணையம் அமைத்து, அந்த ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் 2009-ஆம் ஆண்டு மேற்படி சட்டத்தை கொண்டுவந்தார் கலைஞர். இந்த சட்டத்தின்படி 3சதவிகித உள் இடஒதுக்கீடு அருந்ததியர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்கப்பட்டது. இந்தத் தொகுப்பில் அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, மாதிகா, பகடை, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரர்கள் உள்ளிட்டவர்கள் அடங்குவர்.

இதுபோன்ற உள் ஒதுக்கீட்டு கோரிக்கைகள் ஆந்திராவிலும், பஞ்சாபிலும் அளிக்கப்பட்டு, அது நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டது. கலைஞர் கொண்டுவந்த சட்டமும் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் தடை செய்யப்படவில்லை என்பது வரலாறு. 2005-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தினால் E.P. சின்னையா Vs ஆந்திரப் பிரதேச அரசு வழக்கில் இதுபோன்ற உள் ஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பின் அடிப்படையில், அருந்ததியர்களுக்கான இந்த உள் இடஒதுக்கீடு சட்டத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், என இச்சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கு சென்றனர். பின்னர் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!

2020-ஆம் ஆண்டு, அய்ந்து நீதிபதிகள் அமர்வுக்குச் சென்ற இந்த வழக்கு, வழக்கின் முக்கியத்துவம் கருதி ஏழு நீதிபதிகள் அமர்வுக்குக் கொண்டு செல்லப்பட்டது. 01.08.2024 அன்று நீதிபதி சந்திரசூட் அவர்கள் தலைமையிலான அமர்வு 6:1 என்ற தீர்ப்பின் அடிப்படையில் மாநிலங்கள் இயற்றிய உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்து. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்குச் சென்றுகொண்டிருந்த அருந்ததியர் சமூக மாணவர்கள், உள் இடஒதுக்கீட்டிற்கு பல்லாயிரக்கணக்கில் பட்டதாரிகளாக, பொறியாளர்களாக, மருத்துவர்களாக உருவாகியிருக்கிறார்கள். ஒரு ஆட்சியாளராக கலைஞர் சட்டமியற்றியதால் மட்டும் இந்தச் சாதனை நடந்துவிடவில்லை. அந்த சட்டத்தை எதைக்கொண்டும் தகர்க்க முடியாது என்ற அளவுக்கு ஆழமாகவும் நுணுக்கமாகவும் சிந்தித்து, நமக்கு கையளித்திருக்கிறார் கலைஞர். அதுதான் முக்கியமானது.

கருவறைத் தீண்டாமை ஒழிப்பு!

பிறவி இழிவில் இருந்து தமிழர்கள் வெளியே வர வேண்டுமென்ற நோக்கத்தில், பெரியார் தன் வாழ்நாளின் கடைசி காலகட்டத்தில் மிகத்தீவிரமாக இருந்தார். அதற்காக, கருவறை நுழைவுப் போராட்டத்தை முன்னெடுப்பது என்ற முடிவுக்கு பெரியார் வந்தார்.

“தமிழர்களின் பிறவி இழிவு நீக்கக் கிளர்ச்சிக்கு அதாவது, கோயில்களில் ‘சூத்திரர் செல்லக்கூடாத இடம்’, ‘கர்ப்பக்கிரகம்’, ‘மூலஸ்தானம்’ என்று பார்ப்பனர் அல்லாத இந்து மக்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்குள் செல்லும் கிளர்ச்சியில் கலந்துகொள்ள இஷ்டமுள்ள ஆண், பெண் ஆகியோர் தயவுசெய்து உடனே தங்கள் பெயரை கையொப்பத்துடன் எனக்கு அனுப்பிக் கொடுக்க வேண்டுகிறேன்.”

என்று 10.10.1969 தேதியிட்ட விடுதலை இதழில் வேண்டுகோள் விடுத்தார். அதன்பிறகு, 16.11.1969ல் திருச்சியில் நடைபெற்ற தி.க. மத்தியக் குழுக் கூட்டத்தில், 26.1.1970 அன்று கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் மறுநாளே, அதாவது 17.01.1970 அன்று, ‘அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கிட இந்த அரசு முயற்சி செய்யும். எனவே பெரியார் அவர்கள் போராட்டம் நடத்த வேண்டாம்’ என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி கலைஞரின் வேண்டுகோளினை ஏற்று, போராட்டத் திட்டத்தை ஒத்திவைத்தார் பெரியார்.

பெரியாருக்கு உறுதி அளித்ததைப் போலவே, சட்டமன்றத்தில் 30.11.1970 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக ஏற்ற வகையில் சட்ட முன்வடிவு முன்மொழியப்பட்டு, 02.12.1970 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அடுத்த ஆண்டில் சட்டமானது. ஆனால் நெருப்புக்கொள்ளியை வாயில் திணித்ததைப் போல பதறி அடித்துக்கொண்டு, இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து 12 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

‘பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை வரவேற்றபோதிலும், ‘ஆகம விதிகளை மீறக் கூடாது; அப்படி மீறுவது இந்திய அரசியல் சட்டம் 25(1)ல் அளிக்கப்பட்டுள்ள மத உரிமைகளுக்கு எதிரானது; எனவே, இந்தச் சட்டம் செல்லாது’ என்று எம்.எஸ்.சிக்ரி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 14.3.1972 அன்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை கடுமையாகக் கண்டித்த பெரியார், அதன்பிறகு, தான் மறையும் வரை இதுகுறித்து பேசிக்கொண்டே இருந்தார்.

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டுமென்று திராவிடர் கழகம் தொடர்ந்த போராட்டத்தின் காரணமாக, 1979-ல் ஓய்வுபெற்ற நீதிபதி மகாராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து அறிக்கை பெற்றது எம்.ஜி.ஆர். அரசு. ஆனால், அந்த அறிக்கையின்படி அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக எம்.ஜி.ஆர். காலத்திலோ அல்லது பின்னர் வந்த ஜெயலலிதா காலத்திலோ எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மகாராஜன் குழு பரிந்துரையின்படி, தமிழ்நாட்டு அரசுக்கு வழிகாட்டுவதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை 2006ல் அமைத்தார், கலைஞர்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!

அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 23.5.2006 அன்று சட்டம் இயற்றினார். இந்தக் குழு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத் திட்டம், பயிற்சிக் காலம், கோயில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து சில பரிந்துரைகளை அளித்தது. அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி நிறுவி, மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2006-ஆம் ஆண்டு அரசாணையை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோவில் பரிபாலன் சபை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம். தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு 2006-ஆம் ஆண்டிலேயே இடைக்கால தடை விதித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்குரைஞர்கள் பி.பி.ராவ் கோலின், கொன்சால்விஸ் மற்றும் யோகேஷ் ஆகியோர், “அனைத்துத் துறைகளிலும் சமூக நீதியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. இப்படி நியமனம் செய்வதற்கு அரசியல் சாசனத்தில் எந்தத் தடையுமில்லை. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு எந்த வகையிலும் ஊறு விளைவிக்காமல், அனைத்துத் தரப்பினரும் எவ்வித வேறுபாடும் இன்றி ஆலயங்களில் பூஜைகளைச் செய்ய வழிவகுத்து, அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை ஆகம விதிகளைக் காட்டி எதிர்ப்பது தவறானது” என்று கூறினார்கள். 207 பேரை அர்ச்சகர்களாக நியமிக்கும் வகையில் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நியமனங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இதனால் அவர்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.’ என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என். வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது. ‘இந்துவாகப் பிறந்து தகுந்த பயிற்சியும் தேர்ச்சியும் இருக்குமானால் ஒருவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனைப் புறக்கணிக்க முடியாது. அதே நேரத்தில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிப்பதை தடுக்கவும் முடியாது. மத நம்பிக்கைக்கு வழங்கப்படும் சுதந்திரம் போன்று மத நடைமுறைகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். நீண்ட காலமாக இருந்துவரும் நடைமுறைகளுக்கு எதிரான நம்பிக்கை மத சுதந்திரத்தை மீறும் செயலாகும்.

ஒவ்வொரு கோயிலின் நடைமுறைகளைக் கருத்தில் கொண்டே இந்த அரசாணையைப் பார்க்க வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு கோயிலிலும் எழக்கூடிய பிரச்சனைகளை நீதிமன்றம் புரிந்துகொண்டுள்ளது. அதனைத் தவிர்க்ச முடியாது. அர்ச்சகர்கள் நியமன பிரச்சனை ஏற்படும்போது ஒவ்வொரு தனிப்பட்ட கோயிலிலும் நீதிமன்றத்தை அணுகி தீர்த்துக்கொள்ள வேண்டும். அர்ச்சகர்களை ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும் இதை அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறும் செயலாகக் கருத முடியாது. அதே நேரத்தில் அரசியல் சட்டம் வகுத்துள்ள அடிப்படை உரிமைகளையும் கருத்தில் கொண்டு, இந்த நியமனங்கள் அமைய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கலாமா கூடாதா? என்பதை நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தெளிவுபடுத்தவில்லை இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பணி நியமனங்கள் செய்யவும் அ.தி.மு.க. அரசு முனையவில்லை. இந்த நிலையில்தான், 2021-ல் புதிதாக பதவியேற்ற தி.மு.க. அரசு, அதே ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி 2 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கியது. “பெரியார் நெஞ்சில் தைத்த முள் நீக்கப்படாமலே அவரை அடக்கம் செய்கின்றோம்” என்று 1973-ல் பெரியா மறைவுற்றபோது, கலைஞர் அடைந்த வருத்தத்தை 2023-ல் நீக்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால், இந்த நியமனங்களை எதிர்த்து மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். புதிய நியமனங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

2022-ஆம் ஆண்டில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும் என்றும், ஆகம விதிப்படி நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் எந்தெந்த இயங்கும் கோயில்களில் அந்தந்த ஆகம விதிப்படி அர்ச்சகர்களை கோயில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன, எந்தெந்தக் கோயில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்துக் கண்டறிய ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.”

கருவறைத் தீண்டாமையை ஒழிக்க 1972-ஆம் ஆண்டு கலைஞரால் தொடங்கப்பட்ட இந்த சமூக நீதி சட்டப் போராட்டம் இன்றுவரை முடிவே இல்லாமல் தொடர்கிறது. வருணாசிரமக் கட்டமைப்பை அடியோடு தகர்த்தெறிந்து மானுடத்தை மலரச் செய்கிற நமது நீண்டகால இலக்கில் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் தமிழ்நாடு ஒரு நூற்றாண்டில் கண்டிருக்கும் பெரும் மாற்றத்தைப் போல, ‘ஆகமம் ஒரு ஆரியப் புரட்டு’ என்பதை தோலுரித்து கருவறைத் தீண்டாமையை முழுமையாக அகற்றிடும் பாதையில் நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கலாம். உறுதி குலையாமல் அந்தப் பாதையைத் தொடர்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

கலைஞரால் உருவாக்கப்பட்ட தமிழ் வழிக்கல்வி, கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண், முதல் தலைமுறை பட்டம் படித்தவருக்கு முன்னுரிமை போன்ற எண்ணற்ற பல சமூக நீதித் திட்டங்களும் பல சட்ட போராட்டங்களை சந்தித்தே வெற்றி கண்டன. சோர்வடையாமல் உழைத்த சமத்துவ நாயகர் கலைஞரும் அவரால் கட்டிக்காப்பாற்றப்பட்ட திராவிட முன்னேற்றக்கழகமும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக சீர்திருத்த வரலாற்றின் தொடர்ச்சி!

MUST READ