அருணன்

சமூகச் சீர்திருத்தம் என்பது பல நூறு ஆண்டுகளாக இங்கே நிலை பெற்றிருக்கும் பார்ப்பனியச் சமுதாயக் கட்டமைப்பை எதிர்த்து நடக்கும் பணி. அந்தக் கட்டமைப்பு, ஆறு அ.தி.மு.க.கியமான கூறுகளைக் கொண்டது: 1. வருணாசிரமம் எனும் சாதியம் 2. பெண்ணடிமைத்தனம் 3. சமஸ்கிருதமயமாக்கல் 4. கொடூர மூடநம்பிக்கைகள் 5. பிறசமய வெறுப்பு 6. சுரண்டலை நியாயப்படுத்துவது.

இவற்றை நீடிக்கச் செய்ய அது, அரசு அதிகாரத்தையும் தன்வயமாக்கியது. மனுதர்ம சாஸ்திரம் போன்ற சாஸ்திரங்களைக் காலந்தோறும் உருவாக்கி, அவற்றையே புனித சட்டவிதிகளாக்கி, அரசனின் வேலை அவற்றை நடைமுறைப்படுத்துவதே என்றது. மிகச் சிறந்த அரசன் மனுநீதிப்படி ஆள்பவன் என ஆக்கியது.
இந்த அரசு, அதிகாரத்தை இயல்பானதாக சிவில் சமூகமும் அங்கீகரிக்கும்படி செய்தது. வெகுமக்களைச் சமயம், சாஸ்திரம், சம்பிரதாயம் என மூளைச் சலவை செய்து, அவர்களையும் ஏற்கும்படிச் செய்தது. வெகுகாலம் நீடித்த சமுதாயக் கட்டமைப்புகள் எல்லாம் அரசு அதிகாரத்தால் மட்டுமல்லாது, வெகுமக்களின் ஏமாளித்தனத்தாலுமே உருவாக்கப்பட்டன. அப்படித்தான் இந்த மண்ணில் மனுவாத சமுதாயக் கட்டமைப்பும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல்லவப் பேரரசு காலத்தில்தான் பார்ப்பனியம் இங்கே நிலைபேறு கொண்டது. இதற்கான ஆதாரங்களாகப் பல்லவர்களின் செப்பேடுகள், கல்வெட்டுகள் உள்ளன. அக்காலத்தில் எழுந்த ‘மத்தவிலாசப் பிரகசனம்’ எனும் சமஸ்கிருத நாடகமும் மூவர் தேவாரம் எனும் சைவ இலக்கியமும், நாலாயிர திவ்ய பிரபந்தம் எனும் வைணவ இலக்கியமும் சாட்சியங்களாக நிற்கின்றன.
அவற்றின்படி பார்ப்பனியக் குடியிருப்புகளும் சமஸ்கிருதமயமாக்கலும் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது தெரிகிறது. மறுபுறம், பார்ப்பனியத்தை எதிர்த்த சமண, புத்த சமயங்கள் சைவ, வைணவ சமயங்களால் வீழ்த்தப்பட்ட சகல உதவிகளையும் செய்தார்கள் பல்லவர்கள் என்பதும் புரிகிறது. இது பற்றி ‘பல்லவப் பேரரசு: தமிழர் வாழ்வு’ எனும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன்.
பல்லவப் பேரரசு காலம் சுமார் கி. பி. 600 முதல் கி.பி. 900 வரையிலான 300 ஆண்டுகள். அதாவது, இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு பார்ப்பனியச் சமுதாயம் கட்டமைக்கப்பட்டுவிட்டது. அது, அன்று எழுந்திருந்த நிலப்பிரபுத்துவ பொருளாதார அமைப்பிற்கு ஏற்றதாகவும் இருந்தது. காரணம், அது சூத்திரர்-பஞ்சமர்களைப் பொருளாதாரரீதியாகச் சுரண்டுவதை நியாயப்படுத்தியது மட்டுமல்லாது புனிதப்படுத்தியது. இதர வருணத்தவருக்குச் சேவை செய்வதற்காகவே அவர்கள் கடவுளால் பிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றது. அதனால் பெரிய சேதாரமின்றி சோழப் பேரரசு, பாண்டியப் பேரரசு, மராத்தியர் ஆட்சி, நாயக்கர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி என்று அத்தனை ஆட்சிகள் ஊடாகவும் அது விடாது பயணித்து வந்தது.
இதற்கு எதிரான வலுமிக்க சமூக சீர்திருத்த சவால் 19-20ஆம் நூற்றாண்டுகளில்தான் எழுந்தது. அதற்கு அடிப்படைக் காரணம், ஆங்கிலேயர் ஆட்சி மூலமாக ஐரோப்பாவிலிருந்து வந்திருந்த முதலாளிய ஜனநாயகச் சிந்தனைகள். அந்த ஆட்சி அறிமுகம் செய்திருந்த நவீன கல்வி மூலமாகத் தமிழர்கள் மத்தியிலும் அவை வேர்விட்டன.
கிறிஸ்தவ மிஷனரிகள் – அய்யா வைகுண்டர் வடலூர் வள்ளலார் என்று சமயம் சார்ந்தும், காங்கிரஸ் நீதிக்கட்சி கம்யூனிஸ்ட் என்று அரசியல் சார்ந்தும் சமூக சீர்திருத்தம் எழுந்தது. ஆச்சரியமான விஷயம், இந்த இரண்டிலிருந்து உத்வேகம் பெற்றும் இரண்டிலிருந்து வேறுபட்டும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றியது.
1925-லிருந்து அது நடத்திய பரப்புரை இதுவரை தமிழ்நாடு காணாதது.
பார்ப்பனியத்தைப் பெயர் சொல்லி விதவிதமான கோணங்களிலிருந்து தாக்கினார். 1930-40-களில் “சூனா மானாக்காரன், கருப்புச் சட்டைக்காரன்” எனும் பேச்சுகள் பரபரப்பாக எழுந்தன. களப்பிரர் காலத்திற்குப் பிறகு சிவில் சமூகத்தில் பார்ப்பனிய எதிர்ப்பு மிக வலுவாக எழுந்தது, இந்தக் காலத்தில்தான். அதனால்தான் பார்ப்பனிய ஜனதா கட்சியான பி.ஜே.பி. பெரியார் மீது இவ்வளவு வன்மம் கொண்டிருக்கிறது.
ஆனாலும், பெரியார் காலியாக விட்ட இடம் ஒன்று இருந்தது. அது தேர்தல் அரசியல், காங்கிரஸ் கட்சி, நீதிக் கட்சியின் நடவடிக்கைளால் பெரியாருக்குத் தேர்தல் அரசியல் மீதே ஒரு வெறுப்பு வந்திருந்தது. தான் எந்தவொரு அரசுப் பதவியும் வகிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தது மட்டுமல்லாது, ‘திராவிடர் கழகம்’ எனும் புதுப்பெயர் சூடியிருந்த தனது அமைப்பைத் தேர்தல் அரசியலில் நேரடியாக இறக்க மாட்டேன் என்பதிலும் உறுதியாக இருந்தார்.
நாடோ, சுதந்திரம் பெற்று புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை எனும் அடிப்படையில் தேர்தல் நடக்கும் சாத்தியம் பளிச்செனத் தெரிந்தது. ஆனாலும் தேர்தல் அரசியலில் இறங்க மாட்டேன் என்றார். பார்ப்பனியமானது சிவில் சமூகத்தில் மட்டுமல்லாது அரசு அமைப்பிலும் பிடிமானம் கொண்டிருந்தது; அரசர்களை ஆட்டிப் படைத்தது. இப்போது காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அது புகுந்துகொண்டு சுதந்திர இந்தியாவின் அரசமைப்பிலும் ஆதிக்கம் செலுத்தத் துடித்தது.எனவே, அதை சிவில் வாழ்வில் மட்டுமல்லாது அரசியல் வாழ்விலும் எதிர்க்கவேண்டிய கட்டாயம் இருந்தது.
இதைப் புரிந்துகொண்டிருந்த அறிஞர் அண்ணா, தேர்தல் அரசியலில் தி.க. இறங்க வேண்டும் என்றார். ஆனாலும் பெரியார் மறுத்தார். சரியான சமயம் பார்த்து, 1949ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை தனது குழுவினருடன் ஆரம்பித்துவிட்டார். அதாவது, பெரியார் காலியாக விட்ட இடத்தை நிரப்ப இவர் துணிந்தார்.
பார்ப்பனியத்தின்மீது தி.க. சிவில் வாழ்விலும் தி.மு.க. அரசியல் வாழ்விலும் தாக்குதல் தொடுத்தன. இரு முனைத் தாக்குதல் நடந்தது.
உதாரணமாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கான இடஒதுக்கீட்டிற்கு 1957ல் ஆபத்து வந்தபோது, சிவில் சமூகத்தில் அதற்கான ஆதரவு தளத்தை பெரியாரின் தி.க. திரட்டியது என்றால், அரசியல் களத்தில் அதைச் செய்தது, அண்ணாவின் தி.மு.க. இப்படியாக, ஆளுங்கட்சிக்கு எதிரான அரசியலை அது நடத்தத் துவங்கியது. முடிவில், 1957 தேர்தலில் நேரடியாகக் குதித்து, எடுத்த எடுப்பிலேயே 15 இடங்களைக் கைப்பற்றியது. அப்புறம் ஏறுமுகம்தான்; 1967ல் ஆட்சிக்கட்டிலிலும் அமர்ந்துவிட்டது.
சமூக சீர்திருத்தத்திற்கு அரசியல் அதிகாரம் எவ்வளவு முக்கியம் என்பதை சுயமரியாதைத் திருமணங்களுக்கு அண்ணாவின் ஆட்சி சட்ட அங்கீகாரம் பெற்றுத்தந்தது உணர்த்துகிறது. காமராஜர் தலைமை வகிக்கிறார் என்று 1954 முதல் 1967 வரை காங்கிரஸ் அரசை ஆதரித்துவந்தார் பெரியார். ஆனாலும் அந்த அரசு இந்தக் காரியத்தைக்கூட நடத்தித் தரவில்லை! இதற்கே திராவிட இயக்கத்திலிருந்து ஓர் அரசியல் கட்சி பிறக்கவேண்டியிருந்தது. அப்படித்தான் ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டலும், இருமொழிக் கொள்கை அறிவிப்பும். தேர்தல் அரசியல் களத்தில் தி.மு.க. இறங்காதிருந்திருந்தால் இந்தக் காரியங்கள் அந்தக் காலத்தில் நடந்திருக்குமா என்பது சந்தேகமே.
அண்ணாவின் ஆட்சிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவே. அடுத்து வந்த சுலைஞரும் தி.மு.க. தேரைத் திறமையாக ஓட்டினார். மனுவாதத்தை எதிர்க்கும் ஒரு கருவியான இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தினார் என்பது மட்டுமல்லாது, அதில் வருமான அளவைப் புகுத்திய எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு எதிராகச் சண்டமாருதம் செய்து, அதைத் திரும்பப் பெற வைத்து, இடஒதுக்கீட்டின் அளவை மேலும் உயர்த்த வைத்தார். இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் மிகவும் பிற்படுத்தப்பட்டவருக்கு, முஸ்லிம்களுக்கு, அருந்ததியருக்கு என்று வெற்றிகரமாக உள்ஒதுக்கீடுகள் வழங்கினார்.
பரம்பரைச் சொத்தில் பெண்ணுக்கு சமபங்கு என்பது பெரியார் 1929இல் வைத்த கோரிக்கை. 60 ஆண்டுகளாக நடக்காதிருந்த அந்தக் காரியத்தை 1989இல் நடத்திக் காட்டியவர் கலைஞர். அப்படியாக, பார்ப்பனியத்தின் பெண்ணடிமைத்தனத்திற்கு ஒரு சம்மட்டி அடி கொடுத்தார். அதற்கும் உச்சம் என அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு தந்தார். இது, பெண் கல்விக்கான உத்வேகமாகவும் உத்திரவாதமாகவும் அமைந்தது. ‘எவ்வளவு படித்தாலும் கடைசியில் சட்டி சுரண்டும் வேலைதானே’ எனும் கேலிப்பேச்சுக்கு இது முற்றுப்புள்ளி வைத்தது. பெண் படித்தால் தாசில்தார் ஆவார். காவல் துறை அதிகாரி ஆவார் எனும் மகத்தான மாற்றத்தைக் கொண்டுவந்தது.
ஆகமக் கோயில் நுழைவில் தீண்டாமை இல்லை என்றாலும் கருவறை நுழைவில் தீண்டாமை இருக்கிறது. அதைத் தனது இதயத்தில் தைத்த முள்ளாகக் கருதினார் பெரியார். அதை நீக்கும் வகையில் சட்டம் இயற்றியவர் கலைஞர். அது எவ்வளவு பெரிய சமூக சீர்திருத்த நடவடிக்கை என்பதை இன்றைக்கும் அது நடப்புக்கு வராமல் பார்த்துக் கொள்ளும் சங்கிகளின் சதிவேலைகளிலிருந்து உணரலாம்.
கலைஞருக்குப் பிறகு தி.மு.க. தேரை லாகவமாக ஓட்டிவருகிறவர். தளபதி ஸ்டாலின். அண்ணாவும் கலைஞரும் சந்திக்காத சூழலைச் சந்திப்பவர் இவர். அதாவது, அவர்கள் காலத்தில் மதச்சார்பற்ற கட்சியாம் காங்கிரசே அனேகமாக ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தது. இவர் காலத்திலோ, பக்கா மதவெறிக் கட்சியாம் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவாகிய பா.ஜ.க. பிறமத வெறுப்பு பேசி வந்தாலும் அதன் உள்நோக்கம் சூத்திர-பஞ்சம இந்துக்களை மீண்டும் அடிமைப்படுத்துவதே. இப்படியாக, அது மீண்டும் பிராமணிய ஆதிக்கத்தை அரசு அதிகாரத்தில் கொண்டுவருகிறது. சமூக சீர்திருத்தமானது அந்த நோக்கத்திற்கு நேர் எதிரானது என்பதை அது நன்கு அறியும். அதனால்தான் ஸ்டாலின் அரசை அகற்றக் கங்கணம் கட்டி அலைகிறது.
இந்த இக்கட்டான சூழலிலும் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், உரிமைத்தொகை, கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை என்று அவர்களைச் சொந்தக் காலில் நிற்கவைக்க முனைந்திருக்கிறார் அவர். பொருளாதார சுதந்திரமின்றி பெண்களால் சமூக சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது.
பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் என்பது வரலாற்றில் ஸ்டாலின் பெயரை நிலைக்கவைக்கும். கூலித்தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகள் காலையில் அனேகமாகச் சாப்பிடாமல்தான் பள்ளிக்கு வருவார்கள். வயிற்றில் பசி இருந்தால் மனதில் பாடம் எப்படி ஏறும்? வயிறு குளிர, மனசு குளிர, ஆர்வமாய்ப் பாடம் கேட்கும் ஒரு புதிய கல்விச் சூழலை உருவாக்கியிருக்கிறார்.
‘எல்லாரும் படித்தால் கூலி வேலைக்கு யார் கிடைப்பார்கள்?” எனும் மனுவாதிகளின் ஏளனமான கேள்விக்கு, கல்வி என்பது முதலில் அறிவுக்கு, வேலை என்பது அடுத்தது என்று இது பதிலடி தருகிறது. மிருக ராசியிலிருந்து மனித ராசியைப் பிரிப்பது பகுத்தறிவே. அதைத் தரும் கல்வியை அனைவருக்கும் வழங்குவது நாகரிக சமுதாயத்தின் அடையாளம், அத்தகைய சமுதாயம் வந்துவிடக் கூடாது என்கிறார்கள் மனுவாதிகள். சூத்திரரும் பஞ்சமரும், அனைத்து வருணத்துப் பெண்களும் படிக்கக் கூடாது என்று மனுதர்ம சாஸ்திரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தடை போட்டிருந்ததை நினைத்துக்கொண்டால்தான் இதன் மகத்துவம் புரியும்.
பார்ப்பனியத்தின் ஒரு முக்கியமான தன்மை பிறமத வெறுப்பு. பல்லவர் காலத்தில் சமண, புத்த மதங்கள்மீது வெறுப்பைக் கக்கினார்கள் பார்ப்பனியவாதிகள். இதற்கான ஆதாரத்தை மூவர் தேவாரத்திலும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திலும் காணலாம். சம்பந்தர் தேவாரத்தின் ஒவ்வொரு பதிகத்திலும் ஒரு பாடல் சமண, புத்தரைத் திட்டுவதற்கு என்றே ஒதுக்கப்பட்டிருந்தது. அப்படித்தான் சைவம், வைணவத்தில் புகுந்திருந்த வேத மதம்-பார்ப்பனிய மதம்-அவற்றைத் தமிழ்நாட்டில் ஒழித்துக்கட்டியது. இப்போது, இஸ்லாம்-கிறிஸ்தவத்தை அப்படி எதிரிகளாகச் சித்திரித்து, அவற்றின்மீது தீவிரமான வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்திவருகிறது.
அண்ணா காலத்திலிருந்தே மத நல்லிணக்கத்தையும் சிறுபான்மையோர் உரிமை பாதுகாப்பையும் தி.மு.க. பேசிவந்தது. இன்று, அதற்கெல்லாம், நேரடியான ஆபத்து பா.ஜ.க. மூலம் வந்துள்ளது. ஒன்றியத்தில் தான் ஆட்சியில் இருப்பதை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டிலும் தனது வெறியாட்டத்தைக் காட்டத் துடிக்கிறது.
அண்மையில் மதுரையில், ‘முருக பக்தர்கள் மாநாடு’ என்ற பெயரில் அது முஸ்லிம்கள் எதிர்ப்பு மாநாடு நடத்தியது. அங்கே பேசப்பட்ட பேச்சுகளும் எடுத்த உறுதிமொழியும் வஞ்சகத்தனமானவை. தங்களின் சதி வேலைகளுக்கு எதிரானவர்கள் என்பதைத் தெளிவாக உணர்ந்து அங்கே பெரியார், அண்ணா, கலைஞரை அவதூறு செய்யும் காணொளி ஒளிபரப்பப்பட்டது. இதற்கெல்லாம் தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது இன்றைய காலத்தின் தேவையான ஒரு சமூக சீர்திருத்தமே.
பிற மதத்தவரை எதிரிகளாகச் செயற்கையாகக் கட்டமைத்து, அடித்தட்டு இந்துக்களின் கோபம் தங்கள்மீது திரும்பாதவாறு பார்த்துக்கொள்கிறார்கள் மனுவாதிகள். மனுவாதமே தமது எதிரி என்பதை உணரவில்லை என்றால், சமூக சீர்திருத்தத்தை ரசிக்க மாட்டார்கள் அன்றோ இந்து வெகுமக்கள்? அதுதான் அவர்கள் விரும்புவது.
அரசியல் களத்திலும் சிவில் சமூகத்திலும் மனுவாத மதவெறியர்களை எதிர்த்துப் போராடுவது, சமூக சீர்திருத்தத்தை மேலும் எடுத்துச் செல்வதற்கான முன்நிபந்தனை. அந்தப் பணியைச் செய்வதன்மூலம் ஸ்டாலின் தலைமையிலான இன்றைய தி.மு.க. தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிவருகிறது.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அறிவகம் முதல் அறிவாலயம் வரை!


