புதுச்சேரிக்கு வருகை தந்த பாஜக செயல்தலைவர் நிதின் நபினுடன் வாகனத்தில் ஏறிய பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை ஏற்ற மறந்ததால் அவர் சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்துசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


பாஜக தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபின் 2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். பூத் கமிட்டி, கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் நிதின் நபின் உடன் கலந்து கொள்வதற்காக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியாவும் புதுச்சேரி வந்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து கார் மூலம் புதுச்சேரிக்கு வந்த பாஜக செயல் தலைவர் நிதின் நபினை வரவேற்பதற்காக தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் மற்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் காத்திருந்தனர்.

நிதின் நபின் கோரிமேடு வந்த உடன் அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சாலைவலம் மேற்கொள்வதற்காக, தனது வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்தில் ஏறினார். அவருடன் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், ராமலிங்கம் உள்ளிட்ட உள்ளூர் தலைவர்கள் ஏறிக்கொண்டனர். ஆனால் அனைவரும் மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா ஏறாததை மறந்துவிட்டனர். நிதின் நபின் நகர்வலம் செல்லத் தொடங்கியதும் பொதுமக்கள் கூட்டம் வாகனத்தை சூழ்ந்துகொண்டது. இதனால், மத்திய அமைச்சரின் வாகனம் முன்னே வர முடியவில்லை.

இதனால் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கோரிமேடு சந்திப்பில் இருந்து ஜிப்மர் மருத்துவமனை வரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் 10 நிமிடங்கள் நடந்தே வந்தார். தான் முன்னே செல்ல வேண்டும். தன்னுடைய வாகனங்கள் எங்கே? என தனது உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் மத்திய அமைச்சர் மண்சுக் மாண்டவியா கடிந்து கொண்டார். சிறிது நேரத்திற்கு பின்னர் கான்வாயில் பாதுகாவலர்கள் வரும் வாகனத்தில் ஏறிக்கொண்ட மன்சுக் மாண்டவியா கடிந்து கொண்ட படி வாகனத்தில் சென்றார். இந்த சம்பவம் பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


