பேராசிரியர் தா.மீ.நா.தீபக்

எந்த ஒரு சமூகமும் அதன் நம்பிக்கைகளாலும் எண்ணங்களாலும் கருத்துகளாலும் உருவாக்கப்படுகிறது என்பதை அறிவோம். அவ்விழுமியங்களால் அறியப்படுகின்ற சமூகம், இயல்பிலேயே சமூகப் பங்கேற்பிலும், சமூக வளர்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, வாய்ப்புகளையும் வளங்களையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், தன் சமூகம் அங்கீகாரம் பெறும் அல்லது அடையாளப்படுத்தப்படும் என்பதை நாம் வரலாற்றில் காண்கிறோம்.

ஆனால், ஊனமுற்றோர் என்கின்ற ஒரு சமூகம் காலங்காலமாக வரலாற்றில் மிக மோசமான பார்வையைச் சுமந்துகொண்டு, அவர்களின் இயலாமையைப் பெரிதாக்கி, வலிகளுடன் இச்சமூகத்தில் பயணித்தவாறு நகர்கிறார்கள்.
குற்றவியல் Criminology பாடங்களில் ‘லேபிளிங் கோட்பாடு’ (Labelling theory) என்ற பாடமும் அடங்கும். இந்தக் கோட்பாட்டின்படி, ஒரு சமூகம், எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறதோ அந்தப் பெயரின் தாக்கம், அவர்களின் நடவடிக்கைகளில் மிக அதிகமாகப் பிரதிபலிப்பதாக ‘ஹோவர் பெக்கர்’ என்கின்ற சமூகவியல் நிபுணர் 1963ல் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
உளவியல் ஆராய்ச்சியாளர்களோ, “மனிதர்களின் ஆளுமையும் செயல்பாடும் அவர்களுடைய சுயமதிப்பீட்டைப் பொறுத்தது” என்று தெளிவு படுத்துகிறார்கள். இதை ஆங்கிலத்தில் Self Esteem என்று குறிப்பிடுகிறார்கள்.
உருவ கேலியைச் சற்று அதிகமாகவே எதார்த்த தமிழ்ச் சமூகம் தன் கொல் வழக்குகளில் பயன்படுத்திவருவது மறக்க முடியாத உண்மை. அது, மாற்றுத்திறனாளிகளை எவ்வளவு காயப்படுத்துகிறது; அவர்களின் மன வலிமையைக் குறைக்கிறது என்பதை உணராமல் நம் பொதுச்சமூகம், அவர்களை இழிவுபடுத்திக்கொண்டே இருப்பதை நாம் பார்க்கிறோம். இந்த நிலையில்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இந்த வார்த்தையை மாற்றி, ஊனத்தைப் பெரிதாகக் காட்டும் வார்த்தையை மாற்றுவது மட்டுமல்லாமல் அந்த வார்த்தையை வழக்கிலிருந்து ஒழிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில், ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற வார்த்தையைப் புழக்கத்தில் கொண்டுவந்தார். ‘ஊனமுற்றோர் நல ஆணையரகம்’ என்று அழைக்கப்படுவதை மாற்றி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்று இந்தியாவிலேயே முதல்முறையாக மாற்றியமைத்த மிகப்பெரிய அரும்பணி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையே சாரும்.
ஏதோ ஒரு சமயம், உடலின் அவயத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. என்றால் அதைப் பெரிதுபடுத்தாமல், மற்ற ஆற்றல் அவர்களுக்கு கைகூடும் என்ற கருத்தை (alternatively abled) மாற்றுத்திறனாளிகளிடமும் அதேபோன்று பொதுவெளி சமூகத்திற்கும் ஒரே சமயத்தில் புரிதலை உருவாக்கும் என்பதுதான் மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தையின் மிக நுட்பமான சாராம்சம்.

கலைஞர் அவர்கள், இதுபோன்று பெயர் காரணங்களை மாற்றுவது என்பது மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில் மிக நுட்பமான பார்வையோடு வரலாற்றில் செயல்பட்டுவந்திருக்கிறார் என்பதை மேலும் ஒரு சம்பவத்தின்மூலம் அறியலாம். வெண்குஷ்டம் என்ற தோல் பிரச்சனைக்கான பெயரை, ‘வெண்புள்ளி நோய்’ என்று மாற்றியது ஒரு முக்கியமான தொடக்கம்.
தொழுநோய் என்கின்ற அந்த ஒற்றை வார்த்தையே அவர்களைப் பல நேரங்களில் சமூகத்தின் அவலப்பார்வைக்கு இட்டுச்செல்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக சமீபத்திய பங்கஜ்குமார் எதிர் இந்திய அரசு வழக்கின் தீர்ப்பில் (Pankaj kumar vs Union of India) 18-வது பத்தியில் குறிப்பிட்டிருக்கிறது.
தொழுநோய் பாதிப்பாளர்களுடைய மாண்பைப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை சமீப காலத்தில்தான் உச்ச நீதிமன்றமே உணர்ந்து தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், 1972ல் தர்மபுரியின் பர்கூர் நகரத்தில் பிச்சை எடுத்து வரும் தொழுநோயாளர்களின் மறுவாழ்விற்காக ஒரு மறுவாழ்வு இல்லத்தையே அமைத்தார்.
முன்பெல்லாம் தொழுநோயாளர்கள் ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொழுநோயாளர்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள இந்த இல்லங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற முனைப்பில், சேலத்தின் தலைவாசல் பகுதியில் ஒரு இல்லமும் திருவண்ணாமலையில் ஒரு இல்லமும் சென்னைக்கு அருகில் பரனூரில் ஒரு இல்லத்தையும் கலைஞர் அமைத்தார். இன்று, சுமார் 10 மறுவாழ்வு இல்லங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன. இந்த இல்லங்களிலே உண்டு உறைவிடம் மட்டுமல்லாமல் அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளும் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
கண்ணொளி திட்டம்
1972 ஆம் ஆண்டு, கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் கண்ணோலித் திட்டத்தைப் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டார். தமிழ்நாடு முழுவதும் மாலைக்கண் நோயின் பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன என்பதை சட்டமன்றத்தில் குறிப்பிட்ட கலைஞர், வைட்டமின் ஏ குறைபாட்டின் காரணமாக 50 வயது நிரம்பியவர்களைக் கண்புரை நோய் அதிகமாகத் தாக்குவதை உணர்ந்தும், இந்த பாதிப்பு அவர்களை பணி செய்யவிடாமல் மிகக் குறைந்த வயதிலேயே உயிரிழப்பை நோக்கி நகர்த்தும் என்ற கசப்பான உண்மையைப் புரிந்து, இத்திட்டத்தை முன்மொழிந்தார்.
இத்திட்டம் கண்புரை ஏற்பட்டிருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. கண்புரை போக்கும் விதமாக அறுவைசிகிச்சைமூலம் குணப்படுத்துவதற்கு, ஐந்து மாவட்டங்களைத் தேர்வுசெய்து, சென்னைக்கு இரண்டு, மதுரைக்கு ஒன்று, கோவைக்கு ஒன்று, தஞ்சாவூருக்கு ஒன்று என்கின்ற விதத்தில் இந்த நகரும் மொபைல் யூனிட்டை ஏற்படுத்தினார். அதில், பல்வேறு விதமான கண் மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கி இத்திட்டத்தைச் செயல்படுத்தினார்.
இந்தக் குழு ஒரு பகுதிக்கு வருவதற்கு முன்பே, கண் பார்வைக் குறைபாடு இருக்கக்கூடியவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை அளித்து, தேவைப்படுபவருக்கு கண்ணாடி கொடுக்கப்படும். மற்றவர்களுக்கு கண் நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பின் மருந்துகள் அளிக்கப்பட்டன.

இப்படியான முன்னெடுப்புகளைப் பார்வையிட்ட அன்றைய குடியரசுத்தலைவர் வி.வி.கிரி, “சமூக நலத் துறையில் இம்மாதிரி இந்தியாவில் எங்குமே நடந்ததில்லை” என்று பாராட்டினார். மேற்கு ஜெர்மனியில் இருந்து வந்த community expert டாக்டர் செர்ச்ல் பெர்க் “இப்படி ஒரு திட்டம் உலகில் எங்குமே நடைபெறவில்லை. டாக்டர் கலைஞர் அதை நடத்தியிருக்கிறார்” என்று பாராட்டினார்.
ஒன்றுக்கு மேற்பட்ட ஊனம் ஏற்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்தைத் தெற்காசியாவிலேயே தமிழ்நாட்டில், முட்டுக்காட்டில் அமைத்தது முத்தமிழறிஞர் கலைஞர்தான்.
காக்ளியர் இம்பிளான்ட் கருவி சிகிச்சை
காது கேட்க முடியாதோருக்கு, நவீன அறிவியல் உலகம் அளித்திருக்கும் அறிவியல் கருவி, காக்கிலியர் இம்பிளான்ட் (Cochlear implant). இந்த சிகிச்சை முறையில், மூளைக்குள் பொருத்தப்படும் ஒரு சிறிய கருவி, காது கேட்கப் பயன்படும் நரம்புகளைத் (auditory nerves)த் தூண்டி, தீவிரமாகக் காது கேட்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்குக்கூட ஒலியைக் கேட்க, உணர முடிகின்ற ஆற்றலைத் தரும்.
இது, சற்று அதிக்செலவுகளை ஏற்படுத்தும் சிகிச்சை முறையாக மருத்துவ உலகில் கருதப்பட்டாலும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், தமிழகக் குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையை முற்றிலும் இலவசமாகத் தருவதற்கு முயற்சிசெய்து, முதல்வர் காப்பீட்டுத் தீட்டத்திலேயே இந்த சிகிச்சை முறையை 2010-லேயே உள்ளடக்கினார்.
சமீபத்தில், பின்லாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டபோது, பின்லாந்து நாட்டில்கூட 2020ல் தான் இந்த காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சையை அரசே ஏற்றது என்ற தகவலை அறிந்தேன். ஆனால், முத்தமிழறிஞர் கலைஞர் முன்னோடியாக இந்த திட்டத்தைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து சிரமங்களைப் புரிந்துகொண்ட கலைஞர்!
மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்கள், மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது, போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலில் பேருந்தில் பயணம்செய்து இல்லத்திற்குச் செல்வதற்கு அல்லல்படுவதால், மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்கள் மாலையில் முன்னதாகவே 15 நிமிடங்கள் செல்ல அனுமதி அளித்து, டாக்டர் கலைஞர் உத்தரவிட்டார். 15 நிமிடம் முன்னதாகவே அலுவலகத்தை விட்டு கிளம்பலாம் என்பது மட்டுமல்லாமல், காலையில் கூட்ட நெரிசலிலே அலுவலகம் வந்து சேருவதற்கு 15 நிமிடம் காலதாமதமாகவும் வரலாம் என்கின்ற சலுகையையும் மாற்றுத்திறனாளிகளுக்காக அறிவித்தார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்திற்கு சிறப்பு தற்செயல் விடுப்பு!
டிசம்பர் 3ஆம் தேதியை ஐநா மன்றம் மாற்றுத்திறனாளிகள் உரிமை தினமாக அனுசரித்துவருகிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், டிசம்பர் மூன்றாம் தேதி, அரசுப்பணியில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தற்செயல் விடுப்பாக எடுத்துக்கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் கருத்தரங்கங்கள், முகாம்கள், மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ரயில் பெட்டியை மீட்டுத்தந்த கலைஞர்!
மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பயணம் என்பது எட்டாக்கனியாகவே பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ரயில் பெட்டி 1995-களின் தொடக்கத்திலே இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகக் கழிவறையைக் கொண்டிருக்கக்கூடிய பெட்டியாக இருந்தது. முன்பதிவின்றி சுமார் 12 முதல் 18 மாற்றுத்திறனாளிகள் வரை இந்தப் பெட்டியில் பயணிக்கலாம்.
இந்த ரயில் பெட்டியை மத்திய அரசு திடீரென்று முன்பதிவுப் பெட்டியாக மாற்றியது மாற்றுத்திறனாளிகளுக்குப் பேரிடியாக இருந்தது. இதை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்த உடனேயே, ஆட்சிப் பொறுப்பிலிருந்த மாண்புமிகு முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், இந்திய மாற்றுத்திறனாளிகளின் ஒட்டுமொத்த குரலாகவும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதியாகவும். ஒன்றிய அரசுக்கு அழுத்தம்கொடுத்துக் கடிதம் எழுதினார். அதன் விளைவாக மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டியாக அது மாறியது.
மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியம்!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 1995 வரையறுத்துக் கொடுத்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் அலுவலகங்கள் நடைமுறைக்கு வராமல் இருந்த நிலையில், தமிழகம் வேறு ஒரு திசையை நோக்கிப் பயணித்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு பிரத்தியேக நல வாரியத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஏற்படுத்தித் தந்தார். அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களைத் தாண்டி, நல வாரியத்தால் இன்னும் பல திட்டங்களை குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் விபத்தில் சிக்கினால், அவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை கொடுக்கவும்; மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் படிக்கும்போது, அவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை; அவர்கள் கல்வி பயில்வதற்கான உதவித்தொகையை வழங்குவதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த இவ்வாரியம் அமைக்கப்பட்டது.
‘இளைஞன்’ திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியதால் கிடைத்த ஊதியத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இவ்வாரியத்திற்கு வழங்கினார். பல்வேறு நல வாரியங்கள் அமைத்தாலும் கூட மாற்றுத்திறனாளிகளுக்கான நல வாரியத்தை அமைத்து, தன் ஊதியத்தையே கொடுக்கும் அளவிற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளை மிகவும் நேசித்தார் என்பது எங்களை நெகிழவைக்கும் செய்தி.
ஒரே நாளில் 9 அரசு உத்தரவுகளை அளித்த கலைஞர்
முதலமைச்சர் கலைஞர் அவர்களை மாற்றுத்திறனாளிகள் சார்பில் தலைமைச் செயலகத்தில் 19.8.2008 அன்று சந்தித்து கோரிக்கைகளை அளித்தோம். அதில் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டதுடன், ஒன்பது அரசாணைகளை உடனே வெளியிட்டார்.
உயர்கல்வி மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு, கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி அளிக்கும் திட்டத்தினை அமல்படுத்தியும்; அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் சிறப்புப் பயிலகங்களில் (Government Polytechnic Colleges and Special Institutions) பயிலும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும்; அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிலையங்களான மருத்துவக் கல்லூரிகள் மற்றும் வேளாண்மைக் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு, கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்களித்தும்; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு, கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்களித்தும் அரசாணைகளை வெளியிட்டார்.
பல்வேறு துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றிவரும் மாற்றுத்திறனாளிகளுக்குக் காலமுறை ஊதியம், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 19.8.2008 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றிவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, காலமுறை ஊதிய முறையில் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்ற அரசாணை வெளியிட்டு, அவர்கள் வாழ்க்கையில் வெளிச்சமேற்றினார்.

தொழில் தொடங்கும் மாற்றுத்திறனாளிகளின் பங்கையும் அரசே செலுத்த ஆவணம் செய்தார்,கலைஞர்!
மாற்றுத்திறனாளிகள் மாண்புடன் வாழ வேண்டும் என்ற கருத்தியலைப் பேசுவது ஒருபுறம் இருக்க, உரிமை பேசுவதற்கு முன்னால் பசித்த வயிற்றுக்கு சோறிட வேண்டும் என்கின்ற கருத்தில் கலைஞர் எப்போதுமே உறுதியுடன் இருந்தார்.
மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஒரு தொழில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றால், வங்கிக் கடன் பெறுவதற்குப் பல்வேறு சிரமங்களை மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்க நேர்ந்தது. மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கடன் பெறுகின்றபோது, கடனுக்கு ஈடாக சொத்து காட்ட வேண்டும்; அரசு ஊழியர்கள் இருவர் அல்லது அதற்கு மேல் கையொப்பமிட்டுத் தர வேண்டும் என்பது போன்ற பல்வேறு நெருக்கடிகளை மாற்றுத்திறனாளிகள் சந்தித்துவந்தார்கள்.
இதோடு நில்லாமல், தங்கள் பங்காகச் செலுத்தவேண்டிய தொகையையும் மாற்றுத்திறனாளிகள் கட்ட பெரும் சிரமத்தைக் கடக்கவேண்டியதிருந்தது. இந்த நெருக்கடியைப் புரிந்துகொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் செலுத்தவேண்டிய தொகையை அரசே செலுத்தும் என்ற அரசாணையை 19.8.2008 அன்று வெளியிட்டார்.
மேலும், மாவட்டம்தோறும் மாற்றுத்திறனாளிகள் தங்கி, தொழிற் பயிற்சிகளைப் பெறுவதற்கான முனைப்பைத் தொண்டு நிறுவனங்கள் மூலம் தமிழக அரசு செய்ய வேண்டும் என்ற முக்கிய அறிவிப்பினை ஓர் அரசாணையாகத் தந்து, அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பயிற்சிக் கூடங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்பை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார் கலைஞர்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் குளிர்சாதனப் பேருந்தைத் தவிர அனைத்து பேருந்துகளிலும்நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பயணம்செய்ய சலுகை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளின் இடஒதுக்கீட்டைக் கண்காணிக்கத் தனி உயர்நிலைக் குழு அமைத்து, கலைஞர் உத்தரவு மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இடஒதுக்கீடு, மாநில அரசினுடைய துறைகள் மற்றும், நிறுவனங்களில் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அன்றைய சமூகநலத் துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவர்கள் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தார், கலைஞர்.
இதன் விளைவாகப் பல்வேறு சீர்திருத்தங்கள் மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் கொண்டுவரப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் மட்டும் கலந்துகொள்ளும் சிறப்புத் தேர்வுகள் வேலை வாய்ப்புக்காக உருவாக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்தன.
மேலும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவித்தொகையையும் கலைஞர் அறிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளின் உடல்நிலையையும் மனநிலையையும் அறிந்து கொண்ட கலைஞர் அவர்கள், A, B, C மற்றும் D நிலைகளில் உள்ள மாற்றுத்திறனாளி பணியாளர்களைத் தங்கள் சொந்த ஊர்களுக்கோ அல்லது அருகில் எங்கு முடியுமோ அங்கெல்லாம் பணி வாய்ப்பை ஏற்படுத்திட வழிவகை செய்யலாம் என 22.07.2009 அன்று தலைமைச்செயலர் மூலம் கடிதமாகவும் வெளியிட்டார்.
தனியார் நிறுவனங்களில் 5 சதவிகித இடஒதுக்கீட்டுக்காகக் கடிதம் எழுதினார் கலைஞர்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 1995 மிகத் தெளிவாக 5 சதவிகித இடஒதுக்கீட்டை மாற்றுத்திறனாளிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளைப் பணியில் அமர்த்துவதற்குத் தயக்கம் காட்டி வந்த நிலையில், தமிழக அரசு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளும் அனைத்து நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தங்கள் பணியிடங்களில் 5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கி, சமூக நீதிக்காகப் பங்காற்றிட வேண்டும் என்று தொழில்துறை மூலம் கடிதம் எழுதச்செய்தார்.
மாற்றுத்திறனாளிகள் போராட்டமும் கலைஞர் தலையீடும்
ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகள், 29.5.2010 அன்று சென்னையில் உண்ணாவிரதம் இருந்து, பின்னர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தனர். இதைக் கேள்விப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், மருத்துவமனைக்கு ஓடோடிச்சென்று, அவர்களை நலம் விசாரித்து, கோரிக்கைகளைக் கேட்டு அறிந்து, உடனடியாக அனைத்து விதிகளையும் தளர்த்தி, 90 பேருக்கும் கருணை அடிப்படையில் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கி பெரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
இன்னும் எத்தனையோ தலையீடுகளின்மூலம் கலைஞர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் உருவாக்கினார் என்கிற பொழுதும் ‘நானும் உங்களைப் போன்று மாற்றுத்திறனாளிதான்’ என்று தன்னுடைய 94 வது வயதில் அண்ணா அறிவாலயத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் பேசும்பொழுது கண்ணீர் மல்க தெரிவித்ததை இன்றளவும் மாற்றுத்திறனாளிகள் மறக்கவில்லை.

திராவிட மாடல் ஆட்சியில்…
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நல்லாட்சி நடத்தும் நம் திராவிட மாடல் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியிலும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவை கல்வி, வேலைவாய்ப்பு, நிதியுதவி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, உரிமைகள் போன்ற பல துறைகளை உள்ளடக்கியவை.
கல்வி தொடர்பான நலத்திட்டங்கள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டது.
பார்வை மற்றும் கேள்வித் திறனில் குறைபாடுள்ள மாணவர்களுக்கு Braille Kit மற்றும் Tactile Books வழங்கும் திட்டங்கள்.
சிறந்த, சிறப்பு ஆசிரியர்களுக்கு மாநில விருது அறிவிப்பு
மாற்றுத்திறன் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ‘முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்’ மூலம் ரூ.1,00,000 அளவில் நிதிஉதவி வழங்கப்படுகிறது. அதேபோல், பார்வைக் குறைபாடு உடைய பள்ளி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில், ‘யுனிவர்சல் பிரெய்ல் கிட்’ மற்றும் தொடு உணர்வு கொண்ட டாக்டைல் புத்தகங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளில், மூன்று முறை எழுதியும் தேர்ச்சிபெறாத 50 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு, மீண்டும் துணைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உதவி உபகரணங்கள் பெறுவதில் மாற்றம் தந்தவர்:
மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் பெறுவதற்கான வயது வரம்பினை உயர்த்தி ஆணையிட்டது திராவிட மாடல் அரசு. மாற்றுத்திறனாளிகளின் உதவிப் பொருட்கள் பழுதடைந்தால், அவற்றைப் புதிதாகப் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக
மூன்று ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட கேட்கும் கருவிகள் (Hearing Aids) பழுதடைந்தால், புதிய கருவிகள் பெறும் முறை.
மூன்று ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட பிரெய்ல் கடிகாரங்கள் பழுதடைந்தால், புதியவை பெறும் முறை.
பத்து வருடங்களுக்கு முன்பு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் (Motorized Sewing Machine) பெற்று, அந்தக் கருவிகள் பழுதடைந்திருப்பின் அதற்காக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மீண்டும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்குதல், பத்து ஆண்டுகளுக்கு முன் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் பழுதடைந்தால், புதிய இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் பெறும் வாய்ப்பு.
வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 4 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தல்.
வணிக வளாகங்கள் மற்றும் உள்ளூராட்சி கட்டிடங்களில் 5 சதவிகித இடஒதுக்கீடு.
A & B பிரிவு வேலை வாய்ப்புகளைக் கண்டறிந்து வழங்கும் நடவடிக்கைகள், அரசுத் தேர்வுகளில் 50 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு சிறப்பு விலக்கு.
ஆவின் மையங்களை மாநில அரசு வளாகத்தில் அமைக்கத் தேவையான வாடகை மற்றும் வாடகை முன் பணம் செலுத்துவதில் இருந்து முழுவதுமாக விலக்கு அளித்தல். மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பயனாளிகள் செலுத்தவேண்டிய முன்வைப்பு நிதி ரூ. 25,000 மற்றும் ஆவின் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு மானியமாக ரூ.25,000 என மொத்தம் ஒரு பயனாளிக்கு மானியமாக 50,000 நிதி.

பராமரிப்பு உதவி
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்குப் பராமரிப்பு உதவிதொகை ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டது.
வருவாய்த் துறை மூலமாக வழங்கப்பட்டுவரும் உதவித்தொகை ஆயிரத்தில் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்பட்டது.
பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 ரூபாய் பெற்றுவரும் மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கும் மகளிர் உரிமைத்தொகை.
திருமண நிதியுதவியாக பாதித் தொகை ரொக்கமாகவும் மீதியை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்குவதை மாற்றி, முழுத் தொகையையும் ரொக்கமாக வழங்குவது.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர்களின் மகன், மகள் திருமண உதவித்தொகை தற்போது வழங்கப்படும் 2,000 ரூபாயை 2025-2026 நிதியாண்டு முதல் 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம்
அனைவரின் உயிரையும் அச்சுறுத்திய கொரோனாவிலிருந்து, மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தி. அவர்களின் உயிரைக் காத்ததோடு, நவீன இயல் மருத்துவ உபகரணங்கள் (Standing Frame போன்றவை) வழங்குதல்.
மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர்களின் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்காக வழங்கப்பட்டுவரும் உதவித்தொகைரூ.17,000-த்தினை 2025-2026-ஆம் நிதியாண்டு முதல் ரூ.30,000-ஆக உயர்த்தி ஆணையிட்டு இருக்கின்றது, திராவிட மாடல் அரசு.
போக்குவரத்து மற்றும் அணுகல் வசதிகள்
மகளிருக்காக வழங்கப்பட்ட கட்டணமில்லா இலவச பயண வசதியை, மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவாக்கி, அவர்களும் ‘கட்டணமில்லா விடியல் பயணம்’ மேற்கொள்ள இவ்வரசு வழிவகை செய்தது.
சாலை ஓரங்களில் சிறு கடைகள் நடத்த இட ஒதுக்கீடு.
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அமைத்துத் தருவதற்கு ஏதுவாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுவருகின்றது.
திருக்கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளி தம்பதிகளின் திருமணங்களில், திருமண நிகழ்ச்சி இலவசமாக நடத்தப்படுவதோடு, புதிதாக புத்தாடையும் திருக்கோயில் சார்பாக வழங்கப்படுகிறது.
மேலும், இதுவரை இல்லாத வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கென தனிப்பட்ட சிறப்பு ஆணையமும் மற்றும் சர்க்யூட் கோர்ட்டும் நிறுவப்பட்டுள்ளன.
சமூக வாழ்க்கையில் அவர்களும் சுதந்திரமாகப் பங்கேற்கும் வகையில், சென்னையில் இதுவரை இரண்டு அணுகல் வசதி கொண்ட கடற்கரைகள் அமைக்கப்பட்டுள்ளன; விரைவில் பிற மாவட்டங்களிலும் மேலும் இரண்டு கடற்கரைகள் உருவாக்கப்படுகின்றன.
மேலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காகப் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அரங்குகளில், தேவையான உதவிப் பொருட்கள் வழங்கப்படுவதுடன், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கான நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் முதலமைச்சரின் ‘தாயுமானவர் திட்டம் ‘ 2025 ஆகஸ்ட் 12 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் சாய்வுதள பேருந்துகளும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறக்கூடிய சாய்வுதள (ramp) வசதியுடன்கூடிய ஏ.சி மின்சாரப் பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எல்லாவற்றுக்கும் உச்சமாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையிலான பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ”
மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கியது மட்டுமல்லாது, அரசியல் அதிகாரத்தையும் வழங்கிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக்கழகம்தான்.


