spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திருநர் நலனில் தி.மு.க!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திருநர் நலனில் தி.மு.க!

-

- Advertisement -

லிவிங் ஸ்மைல் வித்யா

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திருநர் நலனில் தி.மு.க!அடிப்படை அம்பேத்கர், பெரியார் வாசிப்பு இருந்தாலும் கலை-இலக்கியங்களில் ஆர்வம் இருந்த அளவிற்கு, நடப்பு அரசியல்மீது ஆர்வம் இல்லை. நான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்து, தெருவில் கையேந்தி பிச்சை எடுக்க நேர்ந்த அந்த நாள் வரும் வரை.

இளம் வயதிலிருந்தே அறிவுதான் அற்றம் காக்கும் கருவி என ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தை நான். ‘நம்ம தாத்தா-பாட்டி, அம்மா-அப்பா பட்ட கஷ்டம் படாம இருக்கணும்னா படிக்கணும், நல்ல வேலைக்குப் ‘போகணும்’ என்ற உறுதியோடு வளர்ந்த குழந்தை பெரியாரிய, அம்பேத்கரிய பார்வையோடும் திராவிட உணர்வோடும் முதுகலை முடித்த, முதல் தலைமுறை தலித் பட்டதாரி. பிறப்பால் ஆண் என்று சொல்லப்பட்டாலும், முழுக்க முழுக்க மனதால் நான் பெண் என்ற எதார்த்தம் முகத்தில் அறைந்த நாள் முதல், குடும்பம், கல்வி, அனைத்தும் துறந்து, தெருவில் கையேந்தி நின்றபோதிலிருந்துதான் சமூக, நடப்பு அரசியலைக் கவனிக்கத் துவங்கினேன்.

we-r-hiring

சமூக ஊடகத்தளங்கள் இன்னும் வராத அந்த நாட்களில், வலைப்பக்கங்களில் எழுதத் துவங்கியிருந்தேன். திருநர்கள் குறித்து மக்கள் அறியாத பக்கங்கள், எங்கள் தேவைகள் குறித்து எழுதிவந்தேன். குறிப்பாக, ஏன் எங்களை அலி, அரவாணி என்றெல்லாம் அழைக்காமல் திருநங்கைகள் என்று அழைக்கவேண்டுமெனத் தொடர்ச்சியாக எழுதிவந்தேன். எனது வலைப்பக்கத்தை வாசிக்கும் ஒரு சிலர் மத்தியில் என் குரல் எடுபட்டாலும் அந்தக்குரல் பொது ஊடகங்களைச் சென்றடையவில்லை.

சகதிருநங்கைகளும் தங்களை அரவாணி என்றுதான் அழைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தனர். செய்தி ஊடகங்களும் அப்போது அரவா என்ற சொல்லையே பெரும்பாலும் பயன்படுத்தி வந்தது. என் நினைவு சரியாக இருந்தால், 2010ஆம் ஆண்டு. பல கண்ணியமான மாற்றுச் சொல்லாடல்களை நடைமுறைக்குக் கொண்டுவந்த முத்தமிழர் கலைஞர் அவர்களால் ‘இன்று முதல் திருநங்கைகள்’ என்றே அழைக்கப்பட வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்தது. ஒரு பெயர் மாற்றம் என்ன செய்துவிடும்? எல்லாம் செய்யும், ஒவ்வொரு முறை திருநங்கை என்று சொல்லும்போதும், நாங்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதை நினைவுபடுத்தும், எங்கள் கண்ணியம் காக்கப்படும், பொதுப்புத்தியி திருநர்களைச் சகமனிதர்களாகப் பார்க்கவேண்டியதன் அவசியத்தை வேண்டு என்று உணர்த்தும்.பாலியல் சிறுபான்மையினரைக் குறிக்கும் சொல்லாடல்கள், அறிவியல் சமூக, சட்ட சொல்லாடல்கள் அனைத்தையும் மகுடேஸ்வரன் அவர்களில் தலைமையில், OCC (Queer Chennai Chronical) சேர்ந்து ஒரு முழுச் சொற்களஞ்சியத்தை உருவாக்கியுள்ளது தி.மு.க. அரசு. இந்தியா முழுவதிலும் நாகரிகமாகவும் அழகியலோடும் திருநர் மற்றும் பால்புதுமையினர் சார்ந்து சொற்களஞ்சியம் தமிழ்நாட்டில் நம் தாய்த்தமிழ் மொழியில் மட்டுமே உண்டு என்ற பெருமையைச் சேர்த்தது நம் கழக அரசு.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திருநர் நலனில் தி.மு.க!

2011ஆம் ஆண்டு, இந்திய ஒன்றியம் நடத்திய 6ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு படிவத்தில் பாலினம் என்னும் பிரிவில், ஆண் என்றால் 1 என்றும், பெண் என்றால் 2 என்றும், மற்றவை என்றால் 9 என்றும் குறிப்பிடும்படி அமைந்திருந்ததை, திருநர்கள் பலரும் எதிர்த்து முறையீடு செய்தோம். அப்போது நம் முதல்வர் உடனடியாக அதைக் கண்டித்து அதனை மாற்றவும் செய்தார். எளிய மக்களின் வலிகளை உணர்ந்து, துணை நிற்கும் உண்மையான தலைவராக முத்தமிழறிஞர் இருந்தார்.

திருநர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு வேண்டுமென்று முதன்முதல் பேசியபோதும், எழுதியபோதும், ‘இடஒதுக்கீடா? இதெல்லாம் கொஞ்சம் ஓவரில்லையா?” என்றுதான் அன்று இருந்த பல மூத்த திருநங்கைகளே கேட்டனர். கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்க நமக்கு எந்த உரிமையும் இல்லை என்று திருநர்களே நம்பிய காலம் அது. நான் பத்திரிகை ஒன்றிற நேர்காணல் அளித்தபோது, திருநர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைய முன்வைத்தபோது, நேர்காணல் கண்ட பத்திரிகையாளர் என் முன்னே வெடித்து சிரித்தார். 15 வருடங்களுக்கு முன்பு நிலையை அப்படித்தான் இருந்தது.

2014ஆம் ஆண்டு, நம் முத்தமிழறிஞர் கலைஞரின் வழிகாட்டுதலில் மாநிலங்களவையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள், திருநங்கைகள் உரிமை மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். இன்று, தமிழ்நாட்டில் திருநர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 1 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது மட்டுமன்றி அறுவைசிகிச்சை செய்யும் திருநர்களுக்கும், ஏற்கெனவே அறுவைசிகிச்சை செய்துகொண்ட திருநர்களுக்கும் பொருளாதார உதவி, வீடு வாடகைக்குக் கிடைப்பதில் சிக்கலுள்ள திருநர் மற்றுமன்றி பால்புதுமையினருக்கும் வீடு வழங்குதல், பணியிடங்களில் பாலின அடையாளம் காரணமாக ஒடுக்கப்படுவதற்கு எதிரான பாதுகாப்பு திட்டங்கள் எனப் பலரும் பயனுறும்படி பல செயல்திட்டங்ளை வகுத்துள்ளது கழக அரசு.

குடும்பமும் ஆதிக்கச் சமூகமும் வெறுத்து ஒதுக்கிய திருநங்கைகளின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களுக்குத் திருநங்கை என்ற பெயரை மட்டும் அல்ல அவர்களுக்கான அரசியல் அங்கீகாரத்தையும் வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது கழக அரசு. 2008ஆம் ஆண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசு பல முன்மாதிரி நலத்திட்டங்களை உருவாக்கியது. 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி, திருநங்கைகள் நல வாரியத்தை உருவாக்கி, திருநர் நலனிலும் இந்தியாவிற்கே முன்மாதிரியாக வழிகாட்டியது கழக அரசு. முதற்கட்டமாக 2009ஆம் ஆண்டில் ரூ.50 லட்சமும், 2010ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்தார் கலைஞர்.

அன்றைய தேதிவரை திருநங்கைகளின் பால்மாற்று அறுவைசிகிச்சை என்பது சட்டத்திற்குப் புறம்பானதுபோன்று நடத்தப்பட்டுவந்த காலம் அது, அப்போது, சமூக நல வாரியத் தலைவியாக இருந்த மதிப்பிற்குரிய கவிஞர் சல்மா அவர்களை நேரில் சந்தித்து எங்களுக்கு பால்மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவி வேண்டும் என்று நானும் எனது அறைத்தோழியும் மனு குடுத்திருந்தோம். அதன் பலனாக, அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகள் தங்களது பாலின மாற்று அறுவை சிகிச்சையினை இலவசமாகச் செய்துகொள்ள அன்றைய கழக அரசு ஆணை பிறப்பித்தது.  இதன்மூலம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக சட்டபூர்வமாகவே, மார்பக அறுவைசிகிச்சை செய்துகொண்ட முதல் திருநங்கையானேன். தொடர்ந்து வந்த ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் அது முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டது.

ஆனால், அரசு மருத்துவனையில், இலவச அறுவைசிகிச்சை செய்யலாம் என்ற அறிக்கையின் மூலம் அதுநாள் வரை சட்டத்திற்குப் புறம்பானது என்ற பார்வையை மாற்றி, திருநர்களுக்கு அறுவைசிகிச்சை மற்ற மருத்துவத் தேவைகளைப்போலவே அத்தியாவசியமானது. இது குற்றமற்றது என்ற கருத்தாக்கம் மருத்துவத் துறையில் பரவலாக்கப்பட்டது. அதனால், முன்பு போல் பாதுகாப்பற்ற, முறையற்ற அறுவைசிகிச்சையைப் போலன்றி பாதுகாப்பான முறையான அறுவைசிகிச்சை செய்வது பொது மருத்துவமனைகளில் நடைமுறைக்கு வந்தது.

இன்று, பல திருநர்கள் அறுவை சிகிச்சையை முறையான, அங்கீகாரம் பெற்ற மருத்துவர்கள்மூலம் சிகிச்சை பெறுவதற்கான வழிமுறையை உருவாக்கித்தந்தது நம் கழக அரசு என்பதை மறுக்க முடியாது.

திருநங்கைகள் நல வாரியத்தின் மூலமாக 3,878 பேர் கணக்கெடுக்கப் பட்டு, அவர்களில் 2,328 பேருக்கு அடையாள அட்டைகளும் 1,238 பேருக்குத் குடும்ப அட்டைகளும், 133 பேருக்குத் தொகுப்பு வீடுகளும் 100 பேருக்குத் தையல் இயந்திரங்களும், 482 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களும் 585 பேருக்குக் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ அட்டைகளும் கலைஞர் ஆட்சிக் காலத்திலேயே வழங்கப்பட்டன.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திருநர் நலனில் தி.மு.க!

40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழைத் திருநங்கைகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கவும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டங்களை மாவட்ட ஆட்சியாளர்கள் நடத்த வேண்டும் என்றும் அறிவித்தவர் கலைஞர். அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அதி.மு.க அரசு, பத்தாண்டுகளாகத் திருநங்கைகள் நலவாரியத்தைச் செயல்படுத்தவில்லை. 2021ல் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றபோதும் முத்தமிழறிஞர் கலைஞரின் வழியே ஆட்சி செய்துவரும் திராவிட மாடல் அரசு மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததும், 12 திருநங்கைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 13 அலுவல் சாரா உறுப்பினர்களை நியமித்து புத்துயிர் ஊட்டியது.

40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2023 மார்ச் முதல் ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ரூ.236 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1482 திருநங்கைகள் பயனடைந்துவருகின்றனர். திருநங்கைகளுக்குச் சொந்தமாகத் தொழில் தொடங்கிட மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் மூன்றாண்டுகளில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 518 திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்று பயனடைந்துள்ளனர்.

சமூக நலத்துறை சார்பில் எந்த விதமான கல்விக் கட்டணமும் இன்றித் திருநங்கைகள் உயர்கல்வி பயில உதவும் வகையில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என 2024ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி, அரசாணை வெளியிட்டது திராவிட மாடல் அரசு. மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தின்மூலம் திருநர்களும் பயணிக்க முடியும், கல்லூரிக் கல்வியின் கட்டணச்சுமையும் இல்லை என்னும்போது, குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டாலும், தன் லட்சியத்தில் உறுதியாக இருக்கும் திருநர்கள் தங்கள் இலக்கை அடைவதற்குப் பேருதவியாகும்.

தமிழ்நாட்டில் திருநங்கைகள் நலவாரியம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகுதான் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், திருநங்கைகள் உரிமை பாதுகாப்புச் சட்டம் 2020 பிரிவு 10 உட்பிரிவு 1-ன் படி திருநங்கைகள் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் அரசால் உருவாக்கப்படும் திட்டங்கள் அவர்களைச் சென்று சேரும் வகையிலும் மாநில அரசுகளே திருநங்கைகள் நல வாரியத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தது.

2018ஆம் ஆண்டு திருநங்கைகள் உரிமைப் பாதுகாப்பு மசோதாவை அன்றைய ஒன்றிய அரசு கொண்டுவந்தது. அதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தோம். காரணம், அந்த மசோதாவில் இருந்த அம்சங்கள் அப்படி.

சில மாநிலங்களில் மாட்டிறைச்சியைக் கடத்தினால் பத்தாண்டுகள் வரை தண்டனை என்று சட்டங்கள் இயற்றிய காலத்தில், திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை ஏழு ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாகக் குறைத்தனர். குறிப்பாக, அந்த நீண்ட மசோதாவில், கல்வி வேலைவாய்ப்பு குறித்த எந்தவொரு குறிப்பும் இடம்பெறவில்லை. ஆனால், எங்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, சில கண்துடைப்பு மாற்றங்கள் செய்து, அந்த மசோதாவை மீண்டும் 2019ல் நிறைவேற்றியது, ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திருநர் நலனில் தி.மு.க!

மாறாகத் திருநர் நலன்களின்மீது நேர்மையான அக்கறை கொண்ட நம் கழக அரசு 2025-2026 பட்ஜெட்டில் திருநர்களுக்காகப் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. திருநர் சமூகத்தில் கல்லூரி பயிலும் மாணவர்கள் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் சேர்க்கப்படுவார்கள் என்றும் ஊர்க்காவல் படையில் 50 திருநங்கைகளுக்கு முதற்கட்டமாகப் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள 1,000 பெண்கள், திருநங்கையர் சொந்தமாக புதிய ஆட்டோ வாங்க, தலா, 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்து, ஆதரவற்ற திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கலைஞர் வழியில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற முழக்கத்துடன் திராவிட மாடல் அரசும் அயராது பணிகளைத் தொடர்கிறது.

மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற பார்வையும், திருநர் சமூகம் போன்ற விளிம்புநிலைச் சமூகங்கள் மீதான அக்கறையும் மிகவும் வரவேற்கத்தக்கது. திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, திருநர்கள் சார்பாக இதயபூர்வமான நன்றிகள். இந்திய ஒன்றியம் முழுமைக்கும், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நலத்திட்டங்கள், செயல்திட்டங்களை வடிவமைப்பதில் உதாரணமாக உள்ள ஒரே அரசு, நம் திராவிட மாடல் அரசு.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய இயக்கம்!

MUST READ