திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே தீபம் ஏற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதனை மீறும் விதமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்திருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தொடர்பான சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்திற்கு முரணானது என அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று மாலையே நீதிபதி தீர்ப்பு வழங்கி உடனடியாக தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என சங் பரிவார் அமைப்புகள் எதிர்பார்த்ததாக கூறிய அவர், தற்போது அந்த அவசரம் இல்லை என்றும், அடுத்த ஆண்டு தான் இந்த நடைமுறை குறித்து விவாதிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லத்தக்கது அல்ல எனக் கூறிய வாஞ்சிநாதன், கோவில் நிர்வாகம் தூண் குறித்து நிரூபிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியது விசித்திரமாக இருப்பதாக விமர்சித்தார். நீதிமன்றத்தை அணுகிய மனுதாரரே தன் கோரிக்கையை நிரூபிக்க வேண்டும் என்றும், மனுதாரர் ராமரவிக்குமார் இதுவரை அதனை நிரூபிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருப்பரங்குன்றத்தில் ஆடு, கோழி பலியிடுவது தொடர்பான வழக்கில், உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக அவர் நினைவுபடுத்தினார். அந்த மூன்று நீதிபதிகளின் தீர்ப்பே தற்போது அமலில் இருப்பதாகவும், அதனை மீறி இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
Article 25-ன் படி மத உரிமை அனைவருக்கும் பொதுவானது என்றும், இறைச்சி பலியிட உரிமையியல் நீதிமன்றம் செல்ல வேண்டும் என கூறினால், இதற்கும் அதே நடைமுறை பொருந்த வேண்டாமா என கேள்வி எழுப்பினார். மூன்று நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்க முடியுமா என்றும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.
1862 மற்றும் 1912 ஆண்டுகளில் தூணில் தீபம் ஏற்ற முயற்சிகள் அன்றைய ஆட்சியாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்பதை 1920 ஆம் ஆண்டின் தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டு, அதனை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார். அந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி தற்போதைய உத்தரவு எப்படி பிறப்பிக்கப்பட்டது என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
மேலும், 2014 ஆம் ஆண்டு நீதிபதி வேணுகோபால் வழங்கிய தீர்ப்பில் தூணில் தீபம் ஏற்ற தேவையில்லை என கூறப்பட்டதாகவும், அந்த தீர்ப்பை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் மற்றொரு இரு நீதிபதிகள் அமர்வுக்கு இல்லை என்றும், அது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மட்டுமே உண்டு என்றும் அவர் விளக்கினார்.
இந்த விவகாரத்தில் அரசு பிரச்சனையை பெரிதாக்கவில்லை என்றும், மாறாக மதுரையில் கலவரம் ஏற்படும் சூழலை தடுத்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.
தற்போதைய தீர்ப்பில் அந்த தூண் கோவிலுக்கு சொந்தமானது என கூறப்பட்டுள்ள நிலையில், அது தீப தூணா இல்லையா என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என கோவில் நிர்வாகமே தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். அந்த தூணுக்கும் இந்து மத வழிபாட்டு முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தொல்லியல் துறையை அணுகி முடிவெடுப்பது என்பது வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானது. தமிழ்ச் சமூகம் அறிவார்ந்தது என்றும், இந்த விவகாரம் இந்து–இஸ்லாமியர் உறவை பாதிக்காது; மக்கள் இதனை கடந்து செல்வார்கள் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்தார்.


