திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற இரு நீதிபதிகள் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என இயற்கை வளங்கள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சட்டத்திற்கு மாறான தீர்ப்பை வழங்கியிருப்பதாக தெரிவித்தார். காமராஜர் தொடங்கி மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலம் வரை கடைபிடித்து வரும் நடைமுறைக்கு எதிராகவும், எந்தவித அடிப்படை ஆதாரங்களுமின்றியும் நீதிபதிகள் பிறப்பித்திருக்கும் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
மலை உச்சியின் மீதிருப்பது தீபத்தூண் என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை எனவும், இதுவரை இல்லாத வழக்கத்தை நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக உள்ளே நுழைப்பது உள்நோக்கம் கொண்டது எனவும் ரகுபதி பேசினார். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் புகாருக்குள்ளான அமைச்சர்கள் மீது நாங்கள் கொடுத்த புகார் கிடப்பில் இருக்கும் நிலையில், எங்கள் மீது ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்திருக்கும் புகார் வேடிக்கையானது எனவும் தெரிவித்தார்.



