தணிக்கை குழுவினர், சினிமாவை கலை, கலாச்சாரம் விழுமியங்களாக பார்க்க வேண்டுமே தவிர, அரசியலாக பார்க்கக்கூடாது என கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.


திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள டைகர் வரதாச்சாரி ரோடு பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் தமிழறிஞர்கள், கல்வியாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது:- உலகத் தமிழர் அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நாள் நல்வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட்ட தமிழ்நாட்டு அரசுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல நாளில் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். இந்தியாவின் தேசிய இனங்களின் தாய் மொழிகள் எல்லாம் மதிக்கப்பட வேண்டும். தமிழ் மட்டும் மதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. எங்கள் தாய்மொழியை நாங்கள் பேணுவது மாதிரியே இந்தியாவின் எல்லா தேசிய இனங்களும், தாய் மொழியை பேண வேண்டும். மதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
சாகித்திய அகாடமி விருது அதிகாரபூர்வமாக இந்த ஆண்டு இன்னும் அறிவிக்கப்படவில்லை? அதில் ஒரு சிக்கல் இருப்பதாக அறிவுலகம் அஞ்சுகிறது. இதுவரைக்கும் கலாச்சாரத்துறை என்று சொல்லக்கூடிய மத்திய அரசின் பண்பாட்டுத் துறையின் கீழே சாகித்திய அகாடமி இயங்கி வருகிறது. கடந்த 72 ஆண்டுகளாக சாகித்ய அகாடமி ஒரு தன்னாட்சி அமைப்பாக திகழ வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்து ஆணை இடப்பட்டு இயங்கி வந்தது. ஆனால் இப்பொழுது அதை மத்திய அரசின் பண்பாட்டுத்துறை தன் கீழ் கொண்டுவர வேண்டும் என்று கருதுவதாக எங்களுக்கு தோன்றுகிறது. அதனால் சாகித்திய அகாடமியின் தன்னாட்சி என்ற உரிமை பறிக்கப்படுவதாக இந்தியாவின் எல்லா மொழிகளும் கருதுகின்றன. இது படைப்பாளிகளுக்கு, படைப்பாளிகளின் சுதந்திரத்திற்கு எதிரானது என்று அறிவுலகம் கருதுகிறது, அதேபோல இலக்கியவாதிகள் கருதுகிறார்கள்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பும் படியும் கேள்வி எழுப்பும்படியும் நான் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, தமிழச்சி தங்கபாண்டியன், ரவிக்குமார், சு.வெங்கடேசன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் நான் என் கவலையை எங்கள் கவலையை தெரிவித்திருக்கிறேன். நாடாளுமன்றம் கூடும்போது இது குறித்து வினா எழுப்பி, இந்திய தேசிய மொழிகளின் உரிமைகளை மீட்டுத்தருமாறு நான் அவர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். அவர்களும் கனிவோடு இந்த கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த திருவள்ளுவர் திருநாள் தமிழுக்கு மட்டும் அதிகாரம் பெற்று தராமல் இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் அதிகாரம் பெற்று தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது.
திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் அரசியல் தலையீடு உள்ளதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கவிப்பேரரசு வைரமுத்து, சினிமாவை கலை, கலாச்சாரம் விழுமியங்களை பார்க்க வேண்டுமே தவிர அரசியலை கலையில் பார்க்கக்கூடாது என்பது என்னுடைய எண்ணம். அரசியலைக் கடந்து சமூகத்தின் கலையாக திரைப்படம் கருதப்பட வேண்டும். திரைப்பட விதிகள் அவ்வப்போது தளர்த்தப்படுவதாகவும், மாற்றப்படுவதாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப புதிய புதிய விதிகள் வகுக்கப்படுவதாகவும் அறிகிறேன். அதை மாற்றி நிரந்தரமான விதி என்று வகுக்கப்பட்டால் எல்லா படங்களுக்கும் நிச்சயமாக தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான தருணம் இது. முழு திரைப்படத் துறையும் ஒன்றிணைந்து அரசாங்க தணிக்கைத் துறையுடன் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபட வேண்டும். சினிமா என்பது ஒரு சூழல் அமைப்பின் கூட்டு முயற்சியாகும் என்ற கமல்ஹாசனின் கருத்தை நான் வரவேற்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.


