ஆண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு மத்தியிலும் குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது.
ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் அடித்தள வசதிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், உலகளவில் பொருளாதார தேக்கம் நிலவி வந்தாலும், இந்திய பொருளாதாரம் வலுவாகவும் நிலைத்ததாகவும் இருப்பதாக தெரிவித்தார். உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ ரயில் சேவை கொண்ட நாடாக இந்தியா திகழ்வதும், நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக கூறினார்.
தமிழகத்தில் புதிய பாம்பன் பாலம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பது முக்கிய சாதனையாகவும், உலகிலேயே அதிக அளவில் அரிசி உற்பத்தி நடைபெறும் நாடாக இந்தியா திகழ்வதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 150 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், குடியரசுத் தலைவர் உரை தொடங்கிய உடனேயே, காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தை விபிஜி ராம் ஜி என ஒன்றிய அரசு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100 நாள் வேலைத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவையில் பரபரப்பான சூழல் நிலவியது. எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு மத்தியிலும் உரை தொடர்ந்தது.
இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ள இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்கட்ட அமர்வு பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட அமர்வு மார்ச் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கின.
இதனிடையே, பொருளாதார ஆய்வறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து, பிப்ரவரி 1-ஆம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
காலியாக இருக்கும் நூலகர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்


