இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்பில் திமுக 45 சதவீத இடங்களை பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இது திமுக அரசின் திட்டங்களுக்கு கிடைத்த பலன் என்றும் மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.


சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியான கருத்துக்கணிப்புகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் நாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஒரே நாளில் சாணக்யா, நியூஸ் 7, இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதேபோல் டெக்கான் கிரானிக்கல் இதழில் ஆய்வுக்கட்டுரை ஒன்றும் வெளியாகி உள்ளது. பாண்டே – தினமலர் கருத்துக்கணிப்பின் பின்னணி குறித்து அனைவருக்கும் தெரியும். ஒரு அஜெண்டாவுக்காக வேலை பார்ப்பவர்கள் அவர்கள். அவர்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பை ஒரு செய்தி நிறுவனத்திற்கான நடுநிலையான கருத்துக்கணிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. ரங்கராஜ் பாண்டே தன்னுடைய கருத்துக்கணிப்பின் மூலமாக ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்க முயற்சிக்கிறார். எந்த அரசாக இருந்தாலும் மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிருப்தி இருக்கவே செய்யும். இதை எப்படி மேனுபுலேட் செய்ய முடியும் என்று தான் பாண்டே, நியூஸ் 7 போன்றவர்கள் செய்கிறார்கள். அதை பார்க்கிற பார்வையாளர்கள் மத்தியில் கண்ணோட்டத்தை ஏற்படுத்துகிறார்கள். நியூஸ் 7 நிறுவன உரிமையாளர் அதிமுக – பாஜக ஆதரவாளராகவே அறியப்படுகிறார். அவருடைய செய்தி நிறுவனமும் அப்படியாக தான் அறியப்படுகிறது. எனவே பாண்டே தினமலர் சர்வே மற்றும் நியூஸ் 7 சர்வேக்களில் நம்பகத்தன்மை கிடையாது.

இந்தியா டுடே சி-ஓட்டர் நிறுவனத்தின் மூட் ஆப் தி நேஷன் கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்றால், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 45 சதவீதம் வாக்குகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக – பாஜகவின் என்டிஏ கூட்டணி 33 சதவீதம். மற்ற கட்சிகள் 22 சதவீதம். அதில் விஜய் 15 சதவீதம் வாக்குகளை பெறுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியா கூட்டணி மற்றும் என்டிஏ கூட்டணிக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 12 சதவீதம் ஆகும். இந்தியா கூட்டணிக்கு 38 இடங்களும், என்டிஏ கூட்டணிக்கு ஓரிடமும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட்டில் வெளியான மூட் ஆப் தி நேஷன் கருத்துக்கணிப்பில் என்டிஏ கூட்டணி 41 சதவீதம் வாக்குகளும், 3 இடங்கள் வரை வெல்லும் என சொல்லப்பட்டிருந்தது. தற்போது அது ஓரிடமாக சரிந்துள்ளது. 2024 மக்களவை தேர்தலில் பிரிந்து போட்டியிட்ட நிலையில், தற்போது அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துள்ளன. அப்படி இருந்த போதும் அந்த கூட்டணியின் வாக்கு சதவீதம் உயரவில்லை.

ரங்கராஜ் பாண்டே அறிவியல்பூர்வமாக கருத்துக்கணிப்பை நடத்தியதாக கூறியுள்ளார். ஒரு தொகுதிக்கு 2 லட்சம் பேர் இருப்பதாக வைத்துககொண்டால், தலா 16 பேரிடம் மட்டுமே கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளார். திமுக அரசின் மீது எதிர்ப்பு கணிசமாக உள்ளது. அதேவேளையில் ஆட்சியை மாற்றக்கூடிய அளவுக்கான எதிர்ப்பு அலையாக அது இல்லை. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் உற்பத்தித் துறையில் தமிழ்நாடு 15.3 பங்கு வகிக்கிறது. உற்பத்தி சார்ந்த வேலை செய்பவர்களில் 7 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். தமிழ்நாட்டில் 43 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். அப்படி இருக்கையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. ஊழல் குற்றச்சாட்டு, வாரிசு அரசியல் என்று போன்றவை மக்கள் மத்தியில் எடுபடவில்லை. எதிர்க்கட்சிகள் செட் செய்கிற நேரட்டிவ் பொதுமக்கள் மத்தியில் எடுபடவில்லை.

டெக்கான் கிரானிக்கலில் வெளியான கட்டுரையின் தலைப்பு, பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில் முன்னணி வகிக்கிறது திமுக என்பதாகும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் பலம் என்பது பெண்களின் வாக்குகளை அதிகம் கவர்ந்ததாகும். ஜெயலலிதாவோ, எம்ஜிஆரோ, விஜயோ திரைக் கவர்ச்சியை வைத்தும், இலவசங்களை வைத்தும் உரையாடினார்களே தவிர, கொள்கையை முன்வைத்து உரையாடியது கிடையாது. திமுக, இடதுசாரிகள் போன்ற கட்சிகள் கொள்கையை அடிப்படையாக வைத்து அரசியல் உரையாடலை நடத்தினர். இதை ஒழிக்கும் முயற்சியை எம்ஜிஆர் காலத்தில் இருந்து தொடங்கினார்கள். தற்போது விஜயும் அதை செய்கிறார். விஜய் அரசியல் அற்ற உரையாடலுக்கு வாரிசு ஆக திகழ்கிறார். பெண்கள் வாக்கு இவ்வளவு காலமாக திமுகவுக்கு வரவில்லை. அதற்கு காரணமாக ஒரு மூட நம்பிக்கை போல திமுக மீது ஒரு கருத்து கட்டமைப்பை உருவாக்குகிறார்கள். 1970களில் துக்ளக் சோ ஆரம்பித்தது. அதை பார்ப்பனர்கள், பார்ப்பன ஊடகங்கள் அப்படியான கட்டமைப்பை உருவாக்கினார்கள். அரசியல் படுத்தப்படாத பிரிவினரான பெண்களை, ஜெயலலிதா காலம் அவரை அதிமுக எளிதாக வளைத்து வாக்குகளை வாங்கியது. அந்த டிரெண்ட் திமுக பதவிக்கு வந்த பிறகு மாறியுள்ளது.

திமுக சமூக நலத்திட்டங்கள் பெண்கள் வாழ்க்கையில் உண்மையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 3.2 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 41 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கிறது. 1.3 கோடி உழைக்கும் மக்களுக்கு, பெண்களுக்கு மாதம் ரூ.1000 தருவது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி மாதம் ரூ.2000 தருவதாக சொல்லியுள்ளார். இலவச பேருந்து பயணத் திட்டத்தை 80 சதவீதம் பெண் வாக்காளர்கள் பயன்படுத்துகிறார்கள். இது பெண்களின் மனதை வெல்லுகிற போட்டியில் திமுகவை முன்னணிக்கு கொண்டு வந்துள்ளது. அடுத்தபடியாக காலை சிற்றுண்டி திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். இதன் மூலம் 20 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுகிறார்கள். இது தவிர்த்து புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000, 6 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிற பல திட்டங்களை திமுக செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களால் பயனடைந்தவர்கள் எல்லாம் உழைக்கும் சமுதாய மக்கள். இவர்கள் தான் அதிகமாக வாக்களிப்பார்கள்.

அதேவேளையில் கார் வைத்துள்ளவர்கள், மேட்டுக்குடியினர், நகர்புறத்தில் வாக்கு சதவீதம் குறைவு. இங்குதான் விஜய்க்கு அதிகளவு ஆதரவு உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்லும் ஒரு பெண்ணுக்கு விடியல் பயணத்தின் அவசியம் தெரியாது. கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுகவுக்கு பெண்கள் அளிக்கும் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது என்றும், வரும் தேர்தலில் 70 முதல் 80 சதவீதமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது பெண் வாக்காளர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பது உறுதி. தமிழ்நாட்டில் உள்ள உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மக்களோ, பெண்களோ மாற்றத்தை நோக்கி நோக்கி நகருவதற்கு, இந்த திட்டங்கள் உதவிபுரிகின்றன. அது கண்டிப்பாக தேர்தலில் மாற்றத்தை காண்பிக்கும் என்று நினைக்கிறேன். அதை சி ஓட்டர் பிரதிபலிக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


