அரசியல் பொது வாழ்வில் தியாகத்தால் புடம் போட்டத் தங்கமாக சுடர் விட்டு ஒளிர்ந்த மாபெரும் தலைவர், மாமனிதர் அண்ணன் நல்லகண்ணு அவர்கள் இயற்கை எய்தி விட்டார்கள். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். நூற்றாண்டு கடந்து வாழ்ந்து அனைவருக்கும் பாடமாக விளங்கிய அண்ணன் நல்லகண்ணு அவர்கள் இன்று படமாகிவிட்டார் என வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டத்திற்கு அருகே பெரும்பத்து கிராமத்தில் ராமசாமி – கருப்பாயி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். 15 வயதிலேயே நெல்லை மாவட்டம், திருவைகுண்டம் தெருக்களிலே இந்திய விடுதலைக்கு முழக்கமிட்ட சின்னஞ்சிறு இளைஞர். அடிமைப்பட்டு கிடக்கும் இந்தியாவிற்கு என்று விடுதலை வரும் என்ற தாகம் நெஞ்சிலே தேங்கிக் கிடந்த நேரம், தன் வயதொத்த இளைஞர்களுடன் வீதிகளிலே மகாகவி பாரதியின் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்”கவிதையை பாடிக்கொண்டே செல்வாராம்.
நல்லகண்ணு 1944 இல் திருவைகுண்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கிளை தொடங்கப்பட்டபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். நாங்குநேரி, களக்காடு பகுதிகளில் கட்சியின் அமைப்பாளராகச் செயல்பட்டார். நெருக்கடியான தலைமறைவு வாழ்க்கையில் விவசாய சங்கத்தில் பணிபுரிந்தார். எண்ணற்ற போராட்டங்கள். 1946 ஆம் ஆண்டு ஜனசக்தியின் பணி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். தேச விடுதலைக்குப் பின் திரும்பி வந்து கட்சிப் பணிகளைத் தொடர்ந்தார். கட்சி மீண்டும் தடை செய்யப்பட்டது.தலைமறைவு வாழ்க்கையில் அவர் பட்ட இன்னல்கள் ஏராளம். நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.

கட்சி தடை செய்யப்பட்டபோது தலைமறைவு வாழ்க்கையில், காடுமேடுகளில் அலைந்து திரிந்த நிலையில், காவல் துறை இவரின் ரகசிய இடமறிந்து கைதுசெய்தது. காவல் அதிகாரி மற்ற தலைவர்களைப் பற்றி விசாரித்தபோது அதற்கு நல்லகண்ணு பதில் சொல்ல மறுத்தார். அதனால் அடித்து, உதைத்து, நையப்புடைத்து, தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்தும் வாய் திறக்கவே இல்லை. இனி என்ன செய்யலாம் என ஆழ்ந்து யோசித்த காவல் அதிகாரி, இவருடைய மீசை ரோமத்தை ஒவ்வொன்றாகப் பிடுங்கி மகிழ்ந்தார். இருப்பினும் நல்லகண்ணுவிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.
விவசாய தொழிலாளர் அமைப்பில் மாநில, தேசிய அளவில் பொறுப்பு வகித்த அவர், 1992-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 வரை 13 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராகவும் பணியாற்றிய பழுத்த அனுபவம் பெற்றிருந்தார்.
1990களின் நடுவில் சாதிக் கலவரம் தென் மாவட்டங்களில் தலைவிரித்து ஆடியது. அண்ணன் நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமித் தேவர் மருதன் வாழ்வு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டாா். இடியென விழுந்த செய்தியை கேள்விப்பட்டு இறுதி நிகழ்வுகளை கண்ணீரோடு மற்றவர்களை நடத்தச் சொல்லிவிட்டு நெல்லை நகருக்கு சாதி மோதல் எதிர்ப்புப் பேரணிக்கு தலைமை தாங்க சென்றவர் நல்லகண்ணு.
மணல் கொள்ளையர்களால் நெல்லையின் உயிர் நாடியான தாமிரபரணி நதி அழிந்து வருவதை கண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு அங்கு மணல் அள்ள தடை உத்தரவு பெற்றார். இதற்காக அரசியலை விட்டு ஓடு என்று அவருக்கு மிரட்டல் விடுத்து சுவரொட்டிகள் ஒட்டினார்கள். ஆனாலும் அஞ்சவில்லை. தூர் வாருதல் என்ற பெயரில் திருவைகுண்டம் அணையில் மணல் அள்ளப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் அடுத்த வழக்கை தொடர்ந்தார். மக்கள் பிரச்சினைகளில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் குரல் கொடுத்து போராடியதால் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு எதிரானவர்களிடமும் நன்மதிப்பை பெற்றவராக திகழ்ந்தார்.
தமிழ்நாட்டின் வாழ்வாதார அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டார். தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக் குரலை ஓங்கி முழங்கி போராட்டங்களின் தல நாயகராக நின்றவர். நல்ல படிப்பாளி அவர், ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்றால் கூட, அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்த பின்பே மேடையேறும் அவரது அர்ப்பணிப்பு, இன்றைய தலைமுறைக்கு ஒரு மிகப்பெரிய பாடம். சாதி மதம் எல்லைளுக்கு அப்பாற்ப்பட்டு மனித நேய உணர்வோடு பொதுவாழ்வில் சேவை செய்தவர். நேர்மை எளிமையை அணிகலனாக கொண்டு அனைவருக்கும் முன்உதாரணமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்தவர். சிறையில் இருந்த காலத்தில் புலவர் பட்டம் பெற்றார். இலக்கியத்தில் ஆழ்ந்த இரசனை உண்டு. கவிஞர் நல்லகண்ணுவாக கவிதைகளை எழுதி உள்ளார். பிறரின் கட்டுரைகள் சிறப்பாக இருந்தது என்றால் மனம் விட்டு பாராட்டத் தயங்க மாட்டார். அதே நேரம் தவறுகளைக் கண்டால் மென்மையாகச் சுட்டிக் காட்டுவார். நூல் திறனாய்வுக் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துக்களை எடுத்துச் சொல்லியுள்ளார்.
1948 ஆம் ஆண்டிலேயே இளைஞர் ஆர்.நல்லகண்ணு எதிர்காலத்தில் சிறந்த தலைவராக வருவார் என்று விவசாயிகள் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர் பி.சீனிவாசராவ் எழுதியுள்ளார். அதைப்போலவே பொதுவுடமை இயக்கத்தில் ஈடற்ற தலைவராக, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் போற்றும் மாமனிதராக திகழ்ந்தார். தன் வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்த தியாகச்சுடர் அண்ணன் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வீர வணக்கத்தை செலுத்துகிறேன்” என வைகோ இரங்கல் தெரிவித்துள்ளாா்.


