பூங்கா(பார்க்) இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது ஒருவர் ரயிலில் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மே 17 இயக்கத்தை சேர்ந்த சுமார் 25 நபர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தலைமையில் பூங்கா(பார்க்) இரயில் நிலையத்தில் முன்னறிவிப்பு இன்றி மதியம் 2.00 மணியளவில் திரண்டனர். பின்னர் நிலையத்தின் பெயர் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் வகையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் சென்னை புறநகர் ரயில்வே பாதையில் தாம்பரம் பகுதியில் இருந்து கடற்கரை நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது போராட்டத்தில் இருந்த சுமார் 55 வயதுடைய ஒருவர் திடீரென ரயிலின் முன் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தலையில் பலத்த காயமடைந்தார்.
படுகாயமடைந்த அந்த நபரை அவசர உதவி சேவையான 108 ஆம்புலன்ஸ் மூலம் ( RGGGH) ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு வார்டு எண் 203-ல் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில், காயமடைந்தவர் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (55) என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு குறைபாடு: வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை ஒத்திவைப்பு
