பிரான்ஸ் நாடு அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியில் சேமித்து வைத்திருந்த 129 டன் தங்கத்தை அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ள செய்தி உலகப் பொருளாதார அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் “கோல்டன்” மூவ்
பிரான்ஸ் தனது தங்கத்தை நேரடியாகக் கப்பலில் ஏற்றி வரவில்லை. அதற்குப் பதில், அமெரிக்காவில் இருந்த பழைய தங்கக் கட்டிகளை (தரம் குறைந்தவை) அங்கேயே அதிக விலைக்கு விற்றுவிட்டு, அந்தப் பணத்தைக் கொண்டு ஐரோப்பியச் சந்தையில் நவீன தரத்திலான (99.5% தூய்மை) புதிய தங்கக் கட்டிகளை வாங்கியது. இந்தச் சமயோசிதமான நடவடிக்கையின் மூலம் தங்கம் விலை உச்சத்தில் இருந்ததைப் பயன்படுத்தி, பிரான்ஸ் சுமார் 12.8 பில்லியன் யூரோ (சுமார் ₹1.15 லட்சம் கோடி) லாபம் ஈட்டியுள்ளது.

தற்போது பிரான்ஸிடம் உள்ள மொத்தத் தங்கமான 2,437 டன்களும் அந்த நாட்டின் சொந்தக் கருவூலத்திலேயே (Paris) பாதுகாப்பாக உள்ளன.
அப்போ இந்தியா பிளான் என்ன?
பிரான்ஸை விட இந்தியா தங்கம் மீட்பு விவகாரத்தில் நீண்ட நாட்களாகவே மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த சில ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பிரமிக்கத்தக்கவை:
கடந்த 2023 முதல் செப்டம்பர் 2025 வரை மட்டும் இந்தியா சுமார் 274 டன் தங்கத்தை வெளிநாடுகளில் (முக்கியமாக லண்டன் வங்கியிலிருந்து) இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளது.
2026 ஏப்ரல் நிலவரப்படி, இந்தியாவின் மொத்தத் தங்க இருப்பில் சுமார் 65%-க்கும் அதிகமான தங்கம் இப்போது இந்தியாவிற்குள்ளேயே பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் தற்போது நிலவும் அமெரிக்கா-ஈரான் பதற்றங்கள் போன்ற புவிசார் அரசியல் சூழலில், நம்முடைய சொத்து நம் நாட்டிலேயே இருப்பதுதான் பாதுகாப்பானது என்று RBI கருதுகிறது. மேலும், வெளிநாட்டு வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய பாதுகாப்புக் கட்டணமும் (Custodial costs) இதன் மூலம் மிச்சமாகிறது.
உலக நாடுகள் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் (De-dollarization), பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் தங்கள் சொத்துக்கள் முடக்கப்படுவதைத் தவிர்க்கவும் இந்த தங்கம் மீட்புப் படலத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தங்களது பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய “தங்கமே நிலையானது” என்பதை உணர்ந்து செயல்படுகின்றன.
அமெரிக்காவின் பிடியில் இருந்த தங்கம் இப்போது அந்தந்த நாடுகளின் கருவூலங்களுக்குத் திரும்புவது, உலகப் பொருளாதாரத்தில் ஒரு புதிய மாற்றத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…
