ஓமன்புடி அருகே ஈரான் நாட்டு கொடியுடன் சென்ற ‘டூஸ்கா’ (TOUSKA) என்ற சரக்குக் கப்பல், கடற்படை முற்றுகையை மீற முயன்றபோது அமெரிக்கப் படைகளால் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்தத் தகவலை மறுத்த ஈரான், அமெரிக்கப் படைகள் பின்வாங்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறியது. இருப்பினும், பின்னர் கப்பல் கைப்பற்றப்பட்டதை உறுதி செய்த இஸ்லாமியக் குடியரசு (ஈரான்), இதற்கு “பதிலடி கொடுத்து பழிவாங்குவோம்” என்று எச்சரித்துள்ளது. வரும் புதன்கிழமையுடன் ஒரு தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், இந்தச் சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரானின் அரசு செய்தி நிறுவனத்தின்படி, “அமெரிக்கப் படைகள் கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றியது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என்றும், இது ஒரு “கடற்கொள்ளை” என்றும் ஈரானிய ராணுவத் தலைமையகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டதாவது,”இன்று, ஈரானியக் கொடியுடன் வந்த ‘டூஸ்கா’ என்ற சரக்குக் கப்பல்… நமது கடற்படை முற்றுகையைத் தாண்டிச் செல்ல முயன்றது. ஆனால் அது அவர்களுக்குச் சாதகமாக அமையவில்லை.” ஓமன் வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படையின் ஏவுகணை அழிப்புக் கப்பல் விடுத்த எச்சரிக்கையை டூஸ்கா கப்பல் மதிக்கவில்லை என்று ட்ரம்ப் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்கக் கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான USS SPRUANCE, ஓமன் வளைகுடாவில் டூஸ்கா கப்பலை வழிமறித்து, நிறுத்துமாறு முறையான எச்சரிக்கை விடுத்தது. ஈரானிய மாலுமிகள் செவிசாய்க்க மறுத்ததால், நமது கடற்படைக் கப்பல் அந்தப் பெரிய கப்பலின் எஞ்சின் அறையில் துளையிட்டு, அவர்கள் இருந்த இடத்திலேயே அவர்களை முடக்கியது. தற்போது அமெரிக்கக் கடற்படையினர் கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். டூஸ்கா கப்பல் ஏற்கனவே சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்டிருப்பதால், அமெரிக்க நிதித்துறையின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளான கப்பலாகும்.
கப்பல் தற்போது முழுமையாக நமது கட்டுப்பாட்டில் உள்ளது, அதில் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்!” எனப் பதிவிட்டுள்ளார்.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடரும் – ட்ரம்ப் திட்டவட்டம்
