கோடை வெய்யிலின் தாக்கத்தினால் தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை போக்கும் விதமாக வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு குளு குளு அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது.


சுட்டெரிக்கும் கோடை வெயிலால் தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகரித்த வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் மட்டுமல்லாமல், குழந்தைகள் மற்றும் முதியவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்காத நிலையில் கூட இவ்வளவு வெப்பம் நிலவுவதால், அடுத்த நாட்களில் நிலைமை எப்படி இருக்கும் என்ற கவலை மக்களிடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மக்களுக்கு ஓரளவு நிம்மதி தரும் வகையில் வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 30ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மே 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த மழை, கடும் கோடை வெப்பத்திலிருந்து மக்களுக்கு ஓரளவு தணிவை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
