வாஷிங்டன்: ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் இன்னும் தணியாத நிலையில் ஈரான் தற்போது பாகிஸ்தான் மூலமாக போரை நிறுத்துவதற்கான செய்தியை அனுப்பியுள்ளது. இந்நிலையில் 3 நாட்களுக்குள் ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் வெடித்துச் சிதறும் என புதிய அச்சுறுத்தலை விடுத்துள்ளார் டிரம்ப். இதனால் தடைப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை தொடருமா என கேள்வி எழுந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய போர் முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் தற்காலிகமாக நின்றாலும் போர் பதற்றம் தணியவில்லை. லெபனான் நாட்டின் மேல் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் ஹோர்மோஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. ஹோர்மோஸ் நீரிணையில் கட்டுப்பாடுகள் இன்றி போக்குவரத்து நடக்க வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்தி வருகிறது.
ஹோர்மோஸ் நீரிணையை திறக்கும் வரை கடற்பகுதி முற்றுகை தொடரும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. ஈரான் துறைமுகங்களில் நீடிக்கும் இந்த முற்றுகையை நீக்க வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. இதனால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தடைபட்டு வருகிறது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுவதாக இருந்த நிலையில், அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று பாகிஸ்தான் செல்ல இருந்த பயணத்தை ரத்துசெய்தார் டிரம்ப். ஈரானின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று இதற்கு அவர் விளக்கம் அளித்தார். ஈரான் நிபந்தனைகளை ஏற்காத வரை 18 மணி நேரம் பயணம் செய்து பேச்சுவார்த்தை நடத்துவது அனாவசியமானது, நேரம் விரயம் என டிரம்ப் கூறினார்.
இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ளதால் வளைகுடா பகுதிகளில் போக்குவரத்து நடக்கவில்லை இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் மூலம் ஈரான் புதிய பரிந்துரைகளை அளித்துள்ளது, ஹோர்மோஸ் நீரிணையை திறப்பு மற்றும் அமெரிக்க கடற்படை முற்றுகையை முன்வைத்து இரண்டு நிலைகளிலான திட்டத்தை ஈரான் பரிந்துரைத்துள்ளது. கடற்படை முற்றுகையை நீக்கிவிட்டு அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்பது ஈரானின் முக்கிய நிபந்தனையாக இருக்கிறது.
அதற்கு டிரம்ப், ஈரான் பேச வேண்டும் என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் பேசட்டும் தொலைபேசியில் கூட பேசலாம் அதற்கான பாதுகாப்பான தொலை பேசி இணைப்புகள் தங்களிடம் உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க கூடாது என்பதே தங்களின் நிபந்தனை என்றும் இந்த நிபந்தனைக்கு உட்படாமல் பேச்சு வார்த்தை நடத்துவதில் பயன் இல்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் மூன்று நாட்களுக்குள் வெடித்து சிதற கூடும் என்று எச்சரித்துள்ளார். ஈரானில் எண்ணெய் குழாய்கள் ஏதேனும் காரணத்தினால் மூடப்பட்டால் அந்த குழாய் வெடித்துவிடும் என்றும் எண்ணெய் குழாய்களில் இருந்து கொள்கலன்களிலோ அல்லது கப்பல்களிலோ எண்ணையை நிரப்ப முடியாது என்று டிரம்ப் கூறியுள்ளார். அவ்வாறு வெடித்து சிதறினால் அதனை முன்பு இருந்தது போல கட்டி எழுப்ப முடியாது என்று அவர் தெரித்துள்ளார்.
அமெரிக்க-ஈரான் போர்: அமெரிக்கா போரிலிருந்து கௌரவமாக வெளியேறுவதற்கு முயற்சி செய்கிறது – ஈரான் கருத்து
