Homeசெய்திகள்தமிழ்நாடுதட்டித் தூக்கிய தவெக.. தோல்வியை தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்..

தட்டித் தூக்கிய தவெக.. தோல்வியை தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்..

-

- Advertisement -

தவெக - நட்சத்திர வேட்பாளர்கள்

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 108, திமுக 70, அதிமுக 56 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. காலை தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தவெக முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக, திமுக இருக்கட்சிகளும் மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக 2-ம் இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதுமே மண்டலங்கள் கடந்து பரவலாக தவெக அதிக வெற்றிகளை பெற்றுள்ளதோடு, தொடர் முன்னிலையிலும் இருந்து வருகிறது.

we-r-hiring

குறிப்பாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தீர்ப்பு விசித்திரமானதாகவும், இதுவரை வரலாற்றில் நிகழாத புதிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக 1967ம் ஆண்டுக்கு பிறகு திமுக, அதிமுக அல்லாத மூன்றாவது கட்சி அதிக சதவீத வாக்குகளை பெற்றுள்ளது இம்முறையே ஆகும். அதோடு கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து வெற்றிகளையும், தோல்விகளையும் திமுக சமமாக சந்தித்த போதிலும் கட்சியின் தலைவரும், பொருளாளரும் ஒருசேர ஒரு தேர்தலில் தோற்பது இதுவே முதல்முறையாகும். ஆளும் திமுகவின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் , தனது கொளத்தூர் தொகுதியில் தோல்வி கண்டது அக்கட்சிக்கும், தனிப்பட்ட முறையில் ஸ்டாலினுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

திமுகவை பொறுத்தவரை பல முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியிருக்கின்றனர். குறிப்பாக திமுக பொருளாளர் துரைமுருகன், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கீதா ஜீவன் , அமைச்சர் மா. சுப்பிரமணியம் , பிடிஆர் உள்ளிட்ட பலர் தோல்வியை சந்தித்துள்ளனர். அதேநேரம் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளும் உள்ளன. திருச்சி மேற்கு தொகுதி கே.என்.நேரு, கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் , திருமயம் தொகுதியில் அமைச்சர் ரகுபதி, ராமநாதபுரம் தொகுதியில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கூட்டணிக் கட்சியாக போட்டியிட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா 2,195 வாக்குகள் வித்தியாசத்தில் விருதாச்சலம் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டப்பேரவை செல்ல இருக்கிறார்.2026 தேர்தல்: தவெக ஆட்சியமைக்க இன்னும் 5 இடங்கள் மட்டுமே தேவை வெற்றி

அதேநேரம் 2026 தேர்தலில் புதிதாக களம் கண்ட தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. இதுவரை எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் 30% அதிகமான வாக்குகளை தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ளது. சுமார் 1 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை அக்கட்சிகள் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளார். பெரம்பூர் தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிழக்கு தொகுதியில் சுமார் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளார். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்ட செங்கோட்டையன், தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட ஆதவ் அர்ஜுனா, எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜ்மோகன் , தூத்துக்குடியில் போட்டியிட்ட நடிகரும், விஜய்யின் நண்பருமான ஸ்ரீநாத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேபோல் ராயபுரம் தொகுதி தவெக வேட்பாளர் விஜய் தாமு, மதுரை மத்திய தொகுதியில் தவெக வேட்பாளர் முஸ்தபா , அண்ணாநகர் தொகுதி தவெக வேட்பாளர் வி.கே.ராம்குமார், மயிலாப்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வெங்கட்ரமணன், சேந்தமங்கலம் தொகுதி தவெக வேட்பாளர் சந்திரசேகர், தஞ்சாவூர் தொகுதி தவெக வேட்பாளர் விஜய சரவணன் , அறந்தாங்கி தொகுதி தவெக வேட்பாளர் பர்வேஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க வெற்றியாக கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார். 9192 வாக்கு வித்தியாசத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோற்கடித்து அவர் வெற்றி வாகை சூடியுள்ளார்.

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெக தனது கணக்கை தொடங்கியுள்ளது. தவெகவும், அக்கட்சியின் கூட்டணியான நேயம் மக்கள் கழக வேட்பாளர்களும் தலா ஒரு தொகுதிகளில் வென்றுள்ளனர்.

இதேபோல் சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி ஆகியோரும் வெற்று பெற்றுள்ளனர்.

அதேநேரம் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான், அவிநாசி தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன், மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட செல்லூர் ராஜு, மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட நடிகர் சுந்தர்.சி ஆகியோரும் தோல்வியை சந்தித்துள்ளனர்.

 

MUST READ