Homeசெய்திகள்தமிழ்நாடுகொள்கை ரீதியான கூட்டணி என்பதால் வெற்றி தோல்வியை பற்றி கவலை இல்லை - தமிமுன் அன்சாரி

கொள்கை ரீதியான கூட்டணி என்பதால் வெற்றி தோல்வியை பற்றி கவலை இல்லை – தமிமுன் அன்சாரி

-

- Advertisement -

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வெற்றி பெற்றுள்ளாா். கொள்கை ரீதியான கூட்டணி என்பதால் வெற்றி தோல்வியை பற்றி கவலை இல்லை என பேட்டியளித்துள்ளாா்.கொள்கை ரீதியான கூட்டணி என்பதால் வெற்றி தோல்வியை பற்றி கவலை இல்லை - தமிமுன் அன்சாரிமனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார். அவர் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி 69,739 வாக்குகள் பெற்றார். இவர் 5747 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான கே.ஏ.பாண்டியனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இதையடுத்து சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிஷான்குமார், தமிமுன் அன்சாரி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்து, “ சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் வெளி வந்திருக்கின்ற முடிவுகள் ஒரு புரியாத புதிராக இருக்கின்றது. குறிப்பாக 1995க்கும் 2015க்கும் இடையில் பிறந்த தலைமுறையினர் இந்த தேர்தலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் மீது மக்கள் நம்பிக்கை வைத்து அவருக்கு வாக்களித்துள்ளதாக தெரிகிறது. விஜய் மக்களுடைய நம்பிக்கையை புரிந்து ஆட்சி அமைப்பார் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

we-r-hiring

புதிய ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அவருக்குத்தான் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் நடிகர் விஜய்க்கு எங்களது கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் திமுக தலைமையிலான அணி வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. நாங்கள் கொள்கை ரீதியான ஒரு கூட்டணி அமைத்திருக்கின்றோம். வெற்றி தோல்வி பற்றி நாங்கள் எப்போதுமே கவலைப்படுவதில்லை. இதே லட்சியங்களை மீண்டும் ஒன்றிணைக்க நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

இந்த நேரத்தில் ஒரு சிறந்த எதிர்க்கட்சி உறுப்பினராக நான் செயல்படுவதற்கான வாய்ப்பை பெற்றிருப்பதாக உணர்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும், எனது தொகுதி மக்களின் நலன்களை முன்னெடுத்து சட்டமன்றத்தில் எனது பணிகள் இருக்கும். திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் தான் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நான்தான் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலே அவர்களுக்கான பணிகளை செய்வேன்.

எந்த ஒரு அதிருப்தியும், பெரிய குற்றச்சாட்டு எதுவும் இல்லாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் தோல்வியை சந்தித்து இருப்பது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. காமராஜர் சிறந்த ஆட்சியை வழங்கிய நேரத்திலும் அவர் தொகுதியில் அவர் தோல்வியடைந்தாரோ அதே மனநிலையில்தான் இப்போது ஸ்டாலின் தோற்றதையும் நாங்கள் நினைக்கிறோம்.

மக்களின் மனநிலையும் அப்படித்தான் இருக்கிறது. இது ஒரு அதிர்ச்சிகரமான தோல்விதான். ஜனநாயக அரசியலில் வெற்றி, தோல்விகளை கடந்து நாங்கள் செயல்பட கூடியவர்களாக இருக்கிறோம். தொடர்ந்து அவரது லட்சியத்திலே பயணிப்பார். நாங்களும் அவருடன் இருப்போம். சிறந்த ஒரு ஆட்சி மாற்றத்தை அவரது தலைமையில் நாங்கள் மீண்டும் ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

சிதம்பரம் தொகுதியில் இளைய தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தினோம். அதுவும் எங்கள் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

2026 தேர்தல்: முன்னாள் சபாநாயகரை டெபாசிட் இழக்க வைத்த ஆட்டோ டிரைவர்!!

MUST READ