Homeசெய்திகள்கட்டுரைமிருகக் குணமும் மனித ஒழுக்கமும் - ஒரு மரபணுப் போராட்டம்

மிருகக் குணமும் மனித ஒழுக்கமும் – ஒரு மரபணுப் போராட்டம்

-

- Advertisement -

மனிதர்களின் மனம் என்பது எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும், ஒழுக்கத்திற்கும் ஒழுக்கமின்மைக்கும் இடையே நடக்கின்ற ஒரு மாபெரும் போர்க்களம். “நான் நல்லவனாக இருக்க வேண்டும்” என்ற ஏக்கம் ஒருபுறம், “எனக்குள் இருக்கும் இருண்ட பக்கங்கள் என்னை வீழ்த்திவிடுமோ” என்ற பயம் மறுபுறம் என இரட்டை தன்மையில் மனிதர்கள் காலங்காலமாகப் போராடி வருகிறார்கள்.மிருகக் குணமும் மனித ஒழுக்கமும் - ஒரு மரபணுப் போராட்டம்

இதை பல லட்சம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று நமது​பரிணாம வளர்ச்சியில் இருந்து பார்க்க வேண்டும். ​நம்முடைய மூளையில் சுயநலம் வேரூன்றி இருக்கிறது. அதற்கு அடிப்படையான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்?

we-r-hiring

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், மனிதன் காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்தபோது, உயிர் பிழைப்பதே அவனது ஒரே குறிக்கோளாக இருந்தது. உணவைச் சேமிப்பது, பேராசை கொள்வது, ஆக்ரோஷமாக  மாறுவது, ஆபத்து வந்தால் சுயநலமாகத் தப்பிப்பது போன்ற குணங்கள் அன்று அவன் உயிர்வாழத் தேவைப்பட்டன. இந்த ‘விலங்குத்தன்மை’ இன்னும் நம் மரபணுக்களில்  மறைந்திருக்கிறது. கோபம், பொறாமை, பேராசை போன்ற குணங்கள் இதன் எச்சங்கள் தான்.

​அதற்கு அடுத்து மனிதன் வேட்டையாடுவதை விட்டுவிட்டு, சமூகமாக வாழத் தொடங்கியபோது, அவனுக்கு ‘ஒழுக்கம்’ தேவைப்பட்டது. சுயநலமாக இருந்தால் சமூகம் நம்மை ஒதுக்கிவிடும், தனியாகக் காட்டில் வாழ முடியாது என்பதை உணர்ந்தான். அதனால் பிறருக்கு உதவுவது, அவர்களோடு ஒன்றி வாழ்வது, நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற நற்குணங்களை வளர்த்துக் கொண்டான்.

​சுருக்கமாகச் சொன்னால், உயிர்வாழத் தேவையான சுயநலமும், சமூகமாக வாழத் தேவையான பொதுநலமும் நமக்குள்ளேயே ஒன்றோடொன்று மோதிக்கொள்வதை நம்மால் உணரமுடியும்.மிருகக் குணமும் மனித ஒழுக்கமும் - ஒரு மரபணுப் போராட்டம்

​பிரபல உளவியலாளர் சிக்மண்ட் பிராய்ட் மனித மனதை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கிறார். இந்த மூன்றுக்குள்ளும் நடக்கும் சமரசம் தான் நம் குணங்களைத் தீர்மானிக்கிறது.

​“இத்“ (மிருக மனம்): இது நம் அடிமனதில் இருக்கும் ஆசைகளின் குவியல். இதற்கு ஒழுக்கம், சட்டம், நியாயம் எதுவுமே தெரியாது. “எனக்கு இது வேண்டும், அதுவும் இப்போதே வேண்டும்” என்று அடம் பிடிக்கும் குணம். பேராசை, காமம், கோபம் போன்ற ‘இருண்ட குணங்கள்’ இங்கிருந்துதான் உருவாகின்றன.

​சூப்பர் ஈகோ (ஒழுக்க மனம்): இது நம் பெற்றோர், சமூகம், மதம், கலாச்சாரம் மற்றும் நமக்குக் கற்றுக்கொடுத்த ஒழுக்க விழுமியங்கள். “இது தவறு, இதைச் செய்யாதே, நீ நல்லவனாக இருக்க வேண்டும்” என்று நம்மை எப்போதும் கண்காணிக்கும் மனசாட்சி இது.

​ஈகோ (சமரச மனம்): இது “இத்“ மற்றும் சூப்பர் ஈகோ ஆகிய இரண்டு குணங்களுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நம்முடைய விழிப்புணர்வு மனம்.

​“இத்“ என்னும் மிருக மனதைக் கண்டு சூப்பர் ஈகோ என்னும் ஒழுக்க மனம் அஞ்சுவதுதான், “எனக்குள் இருக்கும் தவறான குணங்களைக் கண்டு நான் பயப்படுகிறேன்” என்று மனிதர்கள் சொல்வதன் உளவியல் பின்னணி இதுதான்.மிருகக் குணமும் மனித ஒழுக்கமும் - ஒரு மரபணுப் போராட்டம்

​ஒரு குழந்தை பிறக்கும்போது அதற்கு நல்ல குணம், கெட்ட குணம் என்று எதுவும் தெரிவதில்லை. அந்த குழந்தை செய்யும் நல்ல காரியங்களுக்குப் பெற்றோரும் சமூகமும் தரும் பாராட்டுகள், பரிசுகள் அவர்களை நல்லவர்களாக இருக்கத் தூண்டுகின்றன. “நல்ல பிள்ளை” என்ற அங்கீகாரத்தைப் பெற நம் மனம் விரும்புகிறது.

அதே சமயம், கோபம், ஏமாற்றம், பொறாமை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை நாம் வெளிப்படுத்தும்போது சமூகம் நம்மைக் கண்டிக்கிறது. இதனால், அந்த உணர்வுகள் அழிந்துவிடுவதில்லை; மாறாக, நம் அடிமனதிற்குள்  தள்ளப்பட்டு ‘ரகசியமாக’ சேமிக்கப்படுகின்றன. இதை உளவியலாளர் கார்ல் யுங் ‘நிழல் மனிதன்’ என்கிறார். இந்த நிழல் எப்போது வெளியே வருமோ என்ற அச்சம் மனிதர்களுக்கு எப்போதும் இருக்கிறது.

​ஆன்மீக மற்றும் தத்துவக் கண்ணோட்டத்தில் மனிதன் என்பவன் வெறும் சதைப்பிண்டம் அல்ல. அவனுக்குள் இரண்டு சக்திகள் வேலை செய்கின்றன.

நம்முடைய ஐம்புலன்களும் (கண், காது, மூக்கு, நாக்கு, மெய்) எப்போதும் தற்காலிக இன்பங்களை நோக்கியே இழுக்கும். காமம், மது,சோம்பல், தடம் மாறுதல், ஒழுக்கமின்மை ஆகியவை புலன்களின் வழி நடப்பவை.

நமது அறிவு அல்லது ஆன்மா எப்போதும் நிலையான நற்பெயரையும், ஆத்ம திருப்தியையும் தேடும்.

​”நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
 என்றும் இடும்பை தரும்” (குறள்: 137)

​என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குப்படி, நல்லொழுக்கம் நன்மை தரும் என்று அறிவு சொன்னாலும், தீயொழுக்கம் தரும் தற்காலிக இன்பத்திற்கு மனம் ஏங்குவதுதான் மனிதப் போராட்டத்தின் மையப்புள்ளி.

மிருகக் குணமும் மனித ஒழுக்கமும் - ஒரு மரபணுப் போராட்டம்

​மனிதர்கள் நூறு சதவீதம் நல்லவர்களாகவோ அல்லது நூறு சதவீதம் கெட்டவர்களாகவோ இருப்பதில்லை. நாம் அனைவரும் “சாம்பல் நிற மனிதர்கள்” ​நமக்குள்ளே இருக்கும் இருண்ட பக்கங்களை முழுமையாக அழிக்க முடியாது, ஆனால் அவற்றை நாம் அடையாளம் கண்டு, நம்முடைய விழிப்புணர்வினாலும், சுயக்கட்டுப்பாட்டினாலும், மற்றும் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டது போல “நம்மைத் தட்டிக்கேட்கும் ஒரு நல்ல வழிகாட்டியின்” துணையோடும் நற்குணங்களின் ஆதிக்கத்தை ஓங்கச் செய்ய முடியும். தவறான குணங்களைக் கண்டு அஞ்சுவதை விட, அவற்றை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே மனித வாழ்வின் உண்மையான வெற்றி!

உங்களை எச்சரிக்க ஆள் இல்லையா? வேலியில்லாத பயிர் பாழாய் போய்விடும்

MUST READ