குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் ராஜா என்பவருக்குச் சொந்தமான பழைய பொருட்கள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை சேகரித்து தரம் பிரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் வடமாநிலங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை திடீரென குடோனில் தீப்பிடித்து வேகமாக பரவியது. முதலில் ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றாலும், தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் கவர்கள், இரும்புப் பொருட்கள் உள்ளிட்டவை தீயில் கருகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடியும் தீ முழுமையாக அணையாத நிலையில், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
மேலும், சம்பவ இடத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வரவழைத்து தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருமுடிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாரேனும் தீ வைத்தார்களா அல்லது பொருட்களை எரிக்கும் போது தீ பரவியதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
