கிருஷ்ணகிரி – ஓசூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்லபள்ளி பகுதியில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஓசூர் பத்லபள்ளியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதுடன், அப்பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிப்பதும் போக்குவரத்து அழுத்தத்தை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சுமார் ரூ.37.93 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளின் காரணமாக சில இடங்களில் வாகனங்கள் மெதுவாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் நெரிசல் அதிகமாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்லபள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், முன்பு சில நிமிடங்களில் கடந்து செல்லக்கூடிய தூரத்தைக் கடக்க தற்போது அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகக் கூறுகின்றனர். இதனால் வேலைக்குச் செல்லும்பேர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்துச் செல்லும் பெற்றோர் உள்ளிட்டோர் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, வெளியூரிலிருந்து வரும் வாகனங்களுக்கு மாற்று வழித்தடங்களை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. குறிப்பாக, ஓசூர் ரிங் ரோடு, தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் உத்தனப்பள்ளி வழித்தடங்களை பயன்படுத்தினால் நகர்ப்பகுதிக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து, பத்லபள்ளி பகுதியில் ஏற்படும் நெரிசலும் குறையக்கூடும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில், போக்குவரத்து மேலாண்மை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பள்ளிகளில் நல்லிணக்கத்தை காக்க நெல்லை ஆட்சியரின் புதிய நடவடிக்கை…
