தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தனது பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே இந்த முடிவை எடுத்திருந்ததாகவும், அதற்கான காரணமாக கட்சிக்குள் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவியதாக கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் மாநிலத் தலைமையை விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, வேட்பாளர் தேர்வு தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையை நேரடியாக குறிவைத்து பேசப்பட்டதாக கருதப்பட்டது. இதன் பின்னணியில், தேர்தலுக்குப் பிறகு மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பெங்களூருவில் சந்தித்தது தொடர்பாக விளக்கம் அளித்த செல்வப்பெருந்தகை, அது வழக்கமான சந்திப்புதான் என்றும், தனது ராஜினாமா முடிவு குறித்து தலைமையிடம் ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும் கூறினார். மேலும், மாநிலத் தலைவர் பதவியில் இன்னும் சில மாதங்கள் பதவிக்காலம் இருந்தாலும், தேர்தலுக்கு முன்பே விலகும் முடிவை எடுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சில நண்பர்கள் புரிதல் இல்லாமல் பேசியது மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், தலைவராக இருந்தால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசும் சூழல் உருவாகும் என்பதால் பதவியில் தொடர விருப்பம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது கோரிக்கையை கட்சித் தலைமை ஏற்று, தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கும் என நம்பிக்கை தெரிவித்த செல்வப்பெருந்தகை, கட்சிக்குள் தன்னை விமர்சித்த சில தலைவர்கள் குறித்து பின்னர் விரிவாக பேசுவேன் என்றும் கூறியுள்ளார். இதன்மூலம், தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் செல்வப்பெருந்தகை உறுதியாக இருப்பது தெளிவாகியுள்ள நிலையில், அடுத்த மாநிலத் தலைவர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண்’ படை உதவி எண் 1091 அறிவிப்பு
