”நட்புக்கும் உறவுக்கும் இலக்கணமாக அரசு பதவிகளை அள்ளிக் கொடுக்கும் முதல்வர் விஜய், நடிகை திரிஷாவை துணை முதலமைச்சராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு, “தமிழக அரசியல் வட்டாரத்தில் நேற்று மாலை முதல் ஒரு புதிய பரபரப்பு நிலவி வருகிறது. தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக வெற்றிக் கழக அரசு நியமித்துள்ளது.

இதற்கு முன்பாக, தனக்கு ஜாதகம் கணித்துக் கூறும் ராதன் பண்டிட் என்பவரை அரசியல் ஆலோசகராக த.வெ.க அரசு நியமித்தது. அதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டது. ஒருவேளை, எல்லோருக்கும் ஜாதகம் கணித்துக் கொடுக்கும் ராதன் பண்டிட், தனது சொந்த ஜாதகத்தை சரியாக கணிக்கத் தவறிவிட்டாரோ என்னவோ?

நண்பர்களின் ‘பவர் சென்டராக’ மாறும் அரசு?
அதற்குப் பிறகு, தனது மேனேஜர் ஜெகதீஷ் பழனிச்சாமி, வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரை அதிகாரப்பூர்வமான ‘பவர் சென்டராக’ முதல்வர் விஜய் மாற்றியுள்ளார். தற்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் முதல்வரின் நட்புக்கு இலக்கணமாக இருப்பவர்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே புரிகிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்துவிட்டால், இந்த மாநிலம் ஏதோ தன் அப்பன் வீட்டுச் சொத்தோ, தாத்தா வீட்டுச் சொத்தோ என்று முதல்வர் விஜய் நினைக்கிறாரோ என்னவோ? மக்கள் இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்குத்தான் ஆட்சியை வழங்கியுள்ளார்கள். அதுவும் பெரும்பான்மை இல்லாத ஒரு மைனாரிட்டி அரசாக இருந்து கொண்டு, தமிழகத்தின் 8 கோடி மக்களின் உரிமைகளைக் காக்கும் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பெருமை வாய்ந்த பதவியை, தன்னோடு பழகியவர் என்ற ஒரே காரணத்திற்காக வழங்கியுள்ளார். திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரம் கொடுப்பதைப் போல இப்பிரதிநிதி பதவி தூக்கித் தரப்பட்டுள்ளது. 8 கோடி தமிழர்களின் உரிமையை டெல்லியில் நிலைநாட்ட முதல்வர் விஜய்க்கு ஒரு தமிழர் கூட கிடைக்கவில்லையா?
”திரிஷா துணை முதல்வர் ஆனாலும் வியப்பில்லை”
தன்னோடு படம் எடுத்தவர்கள், தன் படத்தில் நடித்தவர்கள், மேனேஜராக இருந்தவர்கள் என ஜெகதீஷ் பழனிச்சாமி, ஜான் ஆரோக்கியசாமி, ராதன் பண்டிட், வெங்கட் நாராயணா என அனைவருக்கும் அரசுப் பதவிகளை வழங்கி வருகிறார் முதல்வர் விஜய்.

”நட்புக்கும் உறவுக்கும் இலக்கணமாகத் திகழும் முதல்வர் விஜய், அதே நட்புக்கும் உறவுக்கும் இலக்கணமாக இருக்கும் பிரபல திரைப்பட கதாநாயகி மேடம் திரிஷாவைக் கூட விரைவில் துணை முதலமைச்சராக அறிவிக்கலாம். ஏனென்றால் இந்த ஜனநாயகத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படி ஒரு அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்கிற அதிர்ச்சியில்தான் தற்போது தமிழகமே உறைந்து போயிருக்கிறது.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது பேட்டியில் சாடியுள்ளார்.
