மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் இல்லம் அமைந்துள்ள பகுதியில், ஏற்கனவே சீராக இயங்கி வரும் பாதாள சாக்கடையை நகராட்சி நிர்வாகம் மீண்டும் தோண்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. அதிகாரிகளின் தன்னிச்சையான இந்தச் செயல்பாட்டால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதோடு, சுற்றுலாப் பயணிகளும் வணிகர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சீரான திட்டத்தை சிதைக்கும் நகராட்சி
ராமேஸ்வரத்தின் முக்கியப் பகுதியான கலாம் இல்லம் வீதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடைத் திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு, தற்போது வரை பொதுமக்களின் பயன்பாட்டில் சீரான முறையில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் எந்தவித முறையான திட்டமிடலும் இன்றி, தங்களின் தற்பெருமைக்காகவும் சுயநல நோக்கத்திற்காகவும் ஏற்கனவே போடப்பட்ட பாதாள சாக்கடைப் பாதையை மீண்டும் தோண்டத் தொடங்கியுள்ளது. நல்ல நிலையில் இருக்கும் ஒரு திட்டத்தை உடைத்து, புதிய திட்டம் என்ற பெயரில் நிதி வீணடிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போர்க்களம் போல் காட்சியளிக்கும் சாலைகள்
இந்த தேவையற்ற மறுசீரமைப்புப் பணிகளுக்காக, அப்பகுதியில் போடப்பட்டிருந்த சாலைகளின் கற்கள் அனைத்தும் ஆங்காங்கே பெயர்த்து எறியப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்தப் பகுதியும் குண்டும் குழியுமாக, போர்க்களம் போல காட்சியளிக்கிறது.
சாலைகள் தோண்டப்பட்டு கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பாதையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் கலாம் இல்லத்திற்குச் செல்லும் வழி அடைக்கப்பட்டுள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு – பொதுமக்கள் சந்தேகம்
போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அல்லா பிச்சை என்பவர் கூறுகையில்,”மக்களின் உண்மையான தேவைகளைக் கண்டறிந்து நிதியைச் செலவிடாமல், ஏற்கனவே இருக்கும் நல்ல திட்டங்களையே மீண்டும் மீண்டும் உடைத்துச் செய்கிறார்கள். இதில் ஏதேனும் நிதி முறைகேடுகள் ஒளிந்திருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது” என்றார்.
சுய லாபத்திற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கிற்குச் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தேவையற்ற பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், பெயர்க்கப்பட்ட சாலைகளை உடனடியாகச் சீரமைத்துத் தர வேண்டும் என்றும் ராமேஸ்வரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை ஆவினில் அதிரடி மாற்றம்: ஜூலை 1 முதல் மொபைல் செயலி மூலம் மட்டுமே பால் ஆர்டர் மற்றும் கட்டணம்!
