Homeசெய்திகள்அரசியல்"இபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தாலே பீடை ஒழியும்" – அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி...

“இபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தாலே பீடை ஒழியும்” – அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கடும் சாடல்!

-

- Advertisement -

இபிஎஸ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; கே.சி.பழனிசாமி கடும் சாடல்!

இபிஎஸ் பதவியை ராஜினாமா செய்யதாலே அதிமுகவை பிடித்துள்ள சனியன், பீடை ஒழியும் என அக்கட்சியின்  முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கடும் சாடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் அடுத்தடுத்த ராஜினாமாக்கள் குறித்து, அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) கே.சி.பழனிசாமி எடப்பாடி பழனிசாமியைச் சாடி காரசாரமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

“கட்சியைப் பலப்படுத்த வேண்டாம்; பலவீனப்படுத்தாமல் இருந்திருக்கலாம்”

​”அதிமுகவை எடப்பாடி பழனிசாமி புதுசாகப் பலப்படுத்தி இருக்க வேண்டிய அவசியமே இல்லை; அதனைப் பலவீனப்படுத்தாமல் இருந்திருந்தாலே இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்தக் கட்சி வலிமையாக இருந்திருக்கும். இபிஎஸ்ஸால் கட்சியில் இணைந்தவர்களை விட, அவராலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடைய பட்டியல் தான் மிகவும் நீளமானது.”

2026 தேர்தல் தோல்வியும், சுயநல அரசியலும்:
“அதிமுக வரலாற்றிலேயே எப்போதுமே மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதே கிடையாது. ஆனால், இபிஎஸ் தன்னைத்தானே அழித்துக் கொண்டது மட்டுமில்லாமல், கட்சியையும் முற்றிலுமாக அழித்துவிட்டார். சட்டமன்றப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட வேண்டியவர், கட்சிக்கு உள்ளேயே ஒரு எதிர்க்கட்சித் தலைவர் போலச் செயல்பட்டு வருகிறார்.

நடந்த முடிந்த தேர்தலில் அதிமுக 30 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் சற்றும் குற்ற உணர்வே இல்லாமல், மீண்டும் எப்படி முதலமைச்சராவது, தனக்கு என்ன ஆதாயத்தைப் பெறுவது என்பதில் மட்டுமே இபிஎஸ் குறிக்கோளாக உள்ளார்.”

​”எம்ஜிஆர், ஜெயலலிதாவை விடப் பெரிய ஆளுமையா?”

“எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை விடவும் ஒரு மிகப் பெரிய ஆளுமையாக நினைத்துக் கொள்கிறார். ஒரு தலைவராகத் தன்னைத் தேர்தலில் நிரூபித்திருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால், இவருக்குத் தேர்தல் என்றாலே தோல்விதான் மிஞ்சுகிறது. கட்சியை நடத்துவதில் எல்லோரையும் புறக்கணிப்பது, அடாவடித்தனம் செய்வது, யாரையும் அனுசரித்துப் போகாமல் இருப்பது எனத் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

இபிஎஸ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்;  கே.சி.பழனிசாமி கடும் சாடல்!
எம்.எல்.ஏ-க்கள் விலகலுக்கான காரணம் மற்றும் எச்சரிக்கை:

​”விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு மீண்டும் தாய்க்கழகத்திற்குத் திரும்பியவர்களை இபிஎஸ் விரோதிகளாகவே பார்த்தார். அவர்களுக்கு மீண்டும் அதே பதவிகளை வழங்கியிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாததால்தான் அவர்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு விலகி ஓடக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைவராக இருக்கும் வரை இனி எந்தத் தேர்தலிலும் கட்சி வெற்றி பெற முடியாது என்ற முடிவுக்கு நிர்வாகிகள் வந்துவிட்டனர். இன்னும் நிறையப் பேர் கட்சியை விட்டுப் போவார்கள்.”

கே.சி.பழனிசாமியின் இறுதித் தீர்வு:

​”அதிமுக மீண்டும் உயிர்பெற வேண்டுமானால், எடப்பாடி பழனிசாமி உடனடியாகத் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்பின் தொண்டர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு தலைமை உருவானால் போதும். இபிஎஸ் இந்தத் தலைமையிலிருந்து விலகினாலே கட்சியைப் பிடித்துள்ள சனியன், பீடை போன்ற அனைத்துத் துன்பங்களும் விலகிவிடும்” என்று கே.சி.பழனிசாமி தனது பேட்டியில் மிக ஆவேசமாகத்  தெரிவித்துள்ளார்.

MUST READ