Homeசெய்திகள்சென்னை"ஏழைகள் இல்லாத சென்னை" அணுகுமுறையை அரசு கைவிட வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்...

“ஏழைகள் இல்லாத சென்னை” அணுகுமுறையை அரசு கைவிட வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆவேசம்

-

- Advertisement -

சிங்கார சென்னை, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஏழை எளிய உழைப்பாளி மக்களை நகரத்தை விட்டு அப்புறப்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்காது” என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
​சென்னை பாலவாக்கம் திருவள்ளுவர் நகர் குடியிருப்புப் பகுதியைப் பாதுகாக்கவும், அங்கு தலைமுறை தலைமுறையாக வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்கக் கோரியும் அனைத்துக் கட்சிகள் மற்றும் குடியிருப்போர் சங்கங்கள் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பெ. சண்முகம் ஆற்றிய ஆவேச உரை வருமாறு:

பெ. சண்முகம்
உழைப்பால் உருவான சென்னை ஏழைகளுக்கும் உரியதே!
​சென்னை மாநகரம் என்பது வெறும் வசதி படைத்தவர்களுக்கானது மட்டுமல்ல; சாதி, மதப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு உழைப்பாளி மக்களின் வியர்வையாலும் இரத்தத்தாலும் உருவாக்கப்பட்டதுதான் இந்த சென்னை. ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை என்ற பெயர்களில் ஏழைகளை இங்கிருந்து வெளியேற்ற நினைப்பதை அனுமதிக்க முடியாது. உழைக்கும் மக்களுக்கு இந்த மண்ணில் வாழ முழு உரிமை உள்ளது.
​திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பள்ளமும் மேடுமாக இருந்த நிலத்தை, இரண்டு ஆள் உயரத்திற்கு மண் கொட்டி, தங்களின் உழைப்பால் மக்கள் இந்த ஊரை உருவாக்கியுள்ளனர். ஆனால், தற்போது செயல்படாத ஏதோ ஒரு போலி சொசைட்டியின் பெயரைக் காட்டி, நில மாஃபியா கும்பல் அதிகாரிகளின் உடந்தையோடு ஏழை மக்களின் நிலங்களை அபகரிக்கச் சதி செய்கிறது. இந்த மோசடியை அரசு உடனடியாக ஆராய்ந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

we-r-hiring

4 நிறுவனங்களா? 400 ஏழைக் குடும்பங்களா?
​நான்கு பெரும் பணக்கார நிறுவனங்களுக்கு நிலத்தை வாரி வழங்குவதற்குப் பதிலாக, அதே நிலத்தில் 400 ஏழைக் குடும்பங்களை வாழ வைப்பதே உண்மையான மக்கள் அரசிடமிருந்து எதிர்பார்க்கும் நீதி. எனவே, தனியார் நிலமாக இருந்தாலும் அதனை அரசு சட்டப்படி கையகப்படுத்தி, அங்கு வாழும் ஏழை மக்களுக்கு நிரந்தரப் பட்டா வழங்கிட முன்வர வேண்டும்.
​நீதிமன்றத் தீர்ப்புகளைக் காரணம் காட்டி அதிகாரிகள் மக்களை அச்சுறுத்தக் கூடாது. மக்களின் உணர்வுகள் சார்ந்த பல விவகாரங்களில் நீதிமன்றத் தீர்ப்புகளையும் தாண்டி அரசு துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல, இந்த ஏழை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையிலும் தமிழக அரசு துணிச்சலான, மனிதநேயமிக்க முடிவை எடுக்க வேண்டும்.

​புல்டோசர்கள் வந்தால் தடுத்து நிறுத்துவோம்: முற்றுகைப் போராட்ட எச்சரிக்கை!
​எங்களுக்கு மாற்று இடம் ஏதும் கிடையாது. இந்த 8-க்கு 8 அடி இடம்தான் எங்கள் உலகம். நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் அதிகாரிகளோ அல்லது புல்டோசர்களோ ஏழை மக்களின் வீடுகளை இடிக்க வந்தால், அனைத்துக் கட்சித் தலைவர்களும் முன்னால் நின்று அதனைத் தடுத்து நிறுத்துவோம். ஒருவேளை மக்களை இங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றால், ஒட்டுமொத்த மக்களும் சோழிங்கநல்லூர் தாலுகா அலுவலகத்திற்குள்ளேயே குடியேறும் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம்.

அனைத்துக் கட்சிகள் ஆதரவு:
இம்மாபெரும் கவன ஈர்ப்புப் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), தேமுதிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

MUST READ