Homeசெய்திகள்இந்தியா30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர் பதவி காலி? நாடாளுமன்றத்தில் புதிய மசோதா வரவிருக்கிறது

30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர் பதவி காலி? நாடாளுமன்றத்தில் புதிய மசோதா வரவிருக்கிறது

-

- Advertisement -

பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் எவரேனும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு மேல் சிறையிலோ அல்லது போலீஸ் காவலோ வைக்கப்பட்டால், அவர்கள் உடனடியாகப் பதவியை இழக்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவை வரவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களால் “130-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா 2025” தாக்கல் செய்யப்பட்டது.
பிரதமர்

மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
​இந்த வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் பின்வருமாறு:
​பதவி நீக்கம்: பிரதமர், மாநில முதலமைச்சர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பதவியில் இருக்கும்போது, ஏதேனும் வழக்கில் கைது செய்யப்பட்டுத் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு மேல் காவலில் வைக்கப்பட்டால் அவர்கள் தானாகவே பதவி நீக்கம் செய்யப்படுவர்.
​குற்றச்சாட்டுகளின் தன்மை: 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது நடவடிக்கை பாயும் பட்சத்தில் மட்டுமே இந்த விதிகள் பொருந்தும்.

we-r-hiring

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு – கூட்டுக்குழு ஆய்வு:
​கடந்த ஆண்டு இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதே, “இது எதிர்க்கட்சித் தலைவர்களைப் பழிவாங்குவதற்காகவும், அவர்களைக் குறிவைத்தும் கொண்டு வரப்பட்ட சதித் திட்டம்” எனக் கூறி எதிர்க்கட்சிகள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டன.
​இதனையடுத்து, இந்த மசோதா விரிவான ஆய்விற்காக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் (Joint Parliamentary Committee – JPC) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. எதிர்க்கட்சிகள் தங்களது ஆட்சேபனைகளையும் ஆலோசனைகளையும் இக்குழுவிடம் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மழைக்காலக் கூட்டத்தொடரில் இறுதி வடிவம்:
இந்நிலையின், இம்மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளன்றே, இந்த மசோதா மீதான தனது இறுதி அறிக்கையை நாடாளுமன்றக் கூட்டுக்குழு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவைத் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு முறைப்படி சட்டமாக்க மத்திய அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.

​மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கட்டாயம்:
​இது சாதாரண மசோதா அல்லாமல், இந்திய அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளும் ‘அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா’ என்பதால், இதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) நிறைவேற்ற, வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயமாகும்.
​மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த மசோதா ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒரு பெரிய புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ