பெற்றோர் ஆன்லைனில் அனுப்பிய பணத்தை வாங்கச் சென்ற 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பெட்டிக்கடை உரிமையாளரை, பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள குடுமியான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ். இவர் அதே பகுதியில் சொந்தமாகப் பெட்டிக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவரின் பெற்றோர், வெளியூரிலிருந்து ஆன்லைன் மூலமாக அருள்தாஸின் கணக்கிற்குப் பணம் அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, அந்தப் பணத்தை அருள்தாஸிடம் இருந்து பெற்றுக்கொண்டு, வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்குமாறு தங்களது மகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் கொடுத்த தகவலின் பேரில், மாணவி பெட்டிக்கடைக்குச் சென்று அருள்தாஸிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது, தனியாக வந்த மாணவியைக் கண்ட அருள்தாஸ், அவருக்குப் கடுமையான பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பணத்தை தருவது போல நடித்து, பள்ளி மாணவியிடம் அருள்தாஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்த மாணவி, உடனடியாக இச்சம்பவம் குறித்துத் தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகாரளித்தனர்.
பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பெட்டிக்கடை உரிமையாளர் அருள்தாஸை போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பணம் வாங்கச் சென்ற பள்ளி மாணவிக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
