திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, கேஸ் ஏற்றிச் செல்லும் லாரிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த தத்ரூப தீ தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமராஜபுரத்தில் ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (IOCL) எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் நிரப்பும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் சாலைகளிலோ அல்லது வெட்டவெளிப் பகுதிகளிலோ செல்லும்போது, எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசம்பாவிதம் அல்லது தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு உடனடியாகத் தடுத்துப் பொதுமக்களைக் காப்பது என்பது குறித்த விழிப்புணர்வு செயல் விளக்கப் பயிற்சி நடத்தப்பட்டது.
இந்த விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை பயிற்சிக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன முதன்மை மேலாளர் வரதராஜ் செட்டி தலைமை தாங்கினார். நிலக்கோட்டை வட்டாட்சியர் (தாசில்தார்) ஜெயப்ரகாஷ், விளாம்பட்டி காவல்துறை ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் – பள்ளபட்டி சாலையில் உள்ள ராமராஜபுரம் பிரிவு பகுதியில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கேஸ் நிரப்பப்பட்ட பெரிய கண்டெய்னர் லாரி ஒன்றில், திடீரென அதிக வெப்பத்தின் காரணமாகத் தீப்பிடித்துக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்ற விபத்துக் காட்சி செயற்கையாக உருவாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அதிவேகமாகச் செயல்பட்ட நிலக்கோட்டை தீயணைப்புப் படை வீரர்கள், இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர்கள், விளாம்பட்டி போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் அவசரக்கால ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் ஒருங்கிணைந்து தத்ரூபமாகத் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் அங்கே செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நெருக்கடியான அவசரக் காலங்களில் பல்வேறு அரசுத் துறைகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அமைந்த இந்த தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சியை, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.
