திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலை அமைப்பதற்காக, முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

விக்ரம் சோலார் (Vikram Solar) நிறுவனத்தின் இந்த பிரம்மாண்ட முதலீட்டின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 2,670 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் பின்வருமாறு:

மின்கல ஆற்றல் சேமிப்பு ஆலை (BESS): சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (09.07.2026) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் (SIPCOT) கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் “மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்” (Battery Energy Storage Systems – BESS) உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ரூ.15,037 கோடி முதலீடு – 2670 பேருக்கு வேலை: விக்ரம் சோலார் நிறுவனம் மேற்கொள்ளும் இந்த ரூ.15,037 கோடி மதிப்பிலான புதிய திட்டத்தின் மூலம், தென் தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 2,670 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விக்ரம் சோலார் குழுமத்தின் தடம்: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் முன்னணியில் இருக்கும் விக்ரம் சோலார் குழுமம், ஏற்கனவே தமிழ்நாட்டின் ஒரகடம் மற்றும் வல்லம் ஆகிய இரண்டு இடங்களில் சூரியஒளி மின்னழுத்த தொகுதி (Solar PV Modules) உற்பத்தி ஆலைகளை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் சூரியஒளி மின்னழுத்த செல்கள் மற்றும் தொகுப்புகளுக்கான ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகத்தையும் இந்நிறுவனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, தற்போதைய நவீன தொழில்நுட்பத் தேவையான மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) உற்பத்தி ஆலையையும் கங்கைகொண்டானில் அமைக்க அரசுடன் ஒப்பந்தம் செய்திருப்பது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
