தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு நெல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து, ஏதேனும் திட்டமிட்ட சதியா அல்லது இயற்கை காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள அரசு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் கடந்த 7-ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் மற்றும் பணியாளர்கள் இரண்டு நாட்களாகப் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்நிலையில், விபத்து நடந்த கிடங்கு மையத்திற்கு நேரில் சென்ற உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் சேத விவரங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ப. வெங்கடரமணன், “இந்த தீ விபத்தில் ஒரு மூட்டைக்கு 40 கிலோ வீதம் தோராயமாக 450 முதல் 500 நெல் மூட்டைகள் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. வழக்கமாக தீ விபத்து ஏற்பட்டால் மேல் பகுதியில் இருந்துதான் தீ பரவும். ஆனால், இங்கு கீழிருந்து தீ பரவியது போல் தெரிவதால், இது மனித தவறுகளால் ஏற்பட்டதா, இயற்கையான காரணமா அல்லது ஏதேனும் அரசியல் சதி உள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்குப் பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்” என்றார்.

மேலும், தனியார் அரிசி ஆலைகளுக்கு முறைகேடாக நெல் மூட்டைகளை அனுப்பிவிட்டு, அதை மறைக்க திட்டமிட்டு தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரை மறுத்த அமைச்சர், “தமிழகம் முழுவதும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அனைத்தும் கணினி முறைப்படியே துல்லியமாகக் கண்காணிக்கப்படுவதால் அத்தகைய முறைகேடுகளுக்கு இங்கு வாய்ப்பில்லை. பாதிக்கப்பட்ட மூட்டைகளில் இருந்து மீட்கக்கூடிய நெல்லைத் தனியாகப் பிரித்தெடுத்து, அரிசி ஆலைகளுக்கு அனுப்பி, தூய்மைப்படுத்திப் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெளிவுபடுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் சென்னை தலைமைச் செயலகத்தில் மண்டல மேலாளர்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை அழைத்து நெல் மற்றும் அரிசியைப் பாதுகாப்பாகச் சேமிப்பது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதாகக் குறிப்பிட்டார். மேலும், ஐந்தாங்கட்டளை கிராமத்தில் மூடிய நெல் கிடங்கு கட்டுவதற்கான திட்ட முன்மொழிவு ஏற்கனவே பெறப்பட்டுள்ளதால், வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்து விவாதித்து, விரைவில் இங்கு முழுமையான அல்லது பகுதி அளவிலான மூடிய கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் குறித்துப் பேசிய அமைச்சர், “கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. புதிய அரசு அமைந்த பிறகு விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது சுமார் 50,000 புதிய ரேஷன் கார்டுகள் தயாராக உள்ள நிலையில், இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் அவை தகுதியான பயனாளிகளுக்கு முழுமையாக விநியோகிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
