அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்து மீண்டும் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு இஸ்ரேல் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. “தேவைப்பட்டால் ஈரானுக்குள் நுழைந்து மூன்றாவது முறையாகவும் தாக்குதல் நடத்த எங்களது ராணுவம் தயாராக உள்ளது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தி வருமாறு: அதிதீவிர பலத்துடன் திரும்புவோம்: இஸ்ரேலிய ராணுவ விழாவில் நேற்று உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், வளைகுடா பகுதியில் எழுந்துள்ள புதிய பதற்றத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:
”ஈரானில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக, வான்வெளியில் மீண்டும் எங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், அங்கு தாக்குதல் நடத்தவும் இஸ்ரேலிய ராணுவம் முழு விழிப்புடனும் தயார் நிலையிலும் உள்ளது. தேவைப்பட்டால் மூன்றாவது முறையாகவும் ஈரான் மீது தாக்குதல் நடத்த நாங்கள் தயங்க மாட்டோம். நாங்கள் மீண்டும் போருக்குத் திரும்ப நேர்ந்தால், அது முன்னெப்போதையும் விட இன்னும் அசுரத்தனமான பேரழிவு பலத்துடன் இருக்கும்.”
ஈரான் பலவீனமடைந்துள்ளது – நெதன்யாகு:
அதே விழாவில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இதற்கு முன் இஸ்ரேல் நடத்திய இரண்டு ராணுவ நடவடிக்கைகளால் ஈரானிய கூட்டணி முன்னெப்போதையும் விட மிகவும் பலவீனமடைந்துள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் முன்னெப்போதையும் விட வலிமையடைந்துள்ளது. யேமன் முதல் ஈரான் வரை எங்கு வேண்டுமானாலும் இஸ்ரேலிய விமானப்படையின் நீண்ட கரங்கள் நீளும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். ஆனால், இந்த யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
மேலும், ஒப்பந்தங்கள் எட்டப்பட்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஈரானை அணு ஆயுதம் தயாரிக்க இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் நெதன்யாகு உறுதியளித்தார்.
முந்தைய தாக்குதல்களின் பின்னணி:
2025 ஜூன் மாதத்தில் 12 நாட்கள் நடந்த போருக்குப் பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை வான்வழித் தாக்குதலில் கொன்றன. இது ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய இரண்டாவது பெரிய தாக்குதலாகும். தற்போது அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் ஏவுகணை மோதல்கள் வெடித்துள்ள சூழலில், இஸ்ரேல் தனது 3-வது கட்டத் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக எச்சரித்துள்ளது.
தற்போதைய கள நிலவரம்:
தற்போது ஈரானின் புஷெர் அணுமின் நிலையப் பகுதி மற்றும் முக்கிய சிவிலியன் உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத், கட்டார் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பகுதியும் மீண்டும் ஒரு பெரும் போர்முனையாக மாறியுள்ளது.
