தமிழக அரசியலில் நீட் தேர்வு, மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை, மேகதாது அணை போன்ற வழக்கமான அரசியல் விவாதங்களைப் பேசாமல், ‘அமைதிப்படை அம்மாவாசை’ பாணியில் நிதானமாக காய் நகர்த்தத் தொடங்கியுள்ளார் அண்ணாமலை.
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி தற்போது ‘We The Leaders’ (வீ த லீடர்ஸ்) என்ற புதிய அமைப்பைத் தொடங்கி, மது ஒழிப்பு, ஏரி தூர்வாருதல் போன்ற தன்னார்வப் பணிகளின் மூலம் தனது அமைதியான அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.


இவருக்கும் பாஜகவிற்கும் இடையேயான தற்போதைய உறவு என்ன என்பது குறித்து அவர் எவ்வித விளக்கமும் அளிக்காத நிலையில், தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் ‘We The Leaders’ அமைப்பின் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாட்டில் 30,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் அண்ணாமலை ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் இதோ:
50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்ததும் புதிய அரசியல் கட்சி!
”‘We The Leaders’ அமைப்பு என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல; இது ஒரு மக்கள் புரட்சி. சமூகப் பிரச்சினைகளுக்கு நாமே தீர்வாக மாற வேண்டும் என்ற நோக்கில் இது தொடங்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பில் 19 லட்சம் பேர் இணைந்துள்ளனர். உறுப்பினர் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டும்போது தமிழக மக்கள் நம்மை முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் என்று அர்த்தம்.
அப்போது இந்த அமைப்பு ஆரோக்கியமான அரசியல் இயக்கமாக (அரசியல் கட்சியாக) மாறும். நாம் அதிகார அரசியலுக்காக அல்ல, ஆரோக்கியமான அரசியலுக்காகவே களம் காண்கிறோம்.”
அடுத்த 6 மாத கால இலக்கு
இந்த அமைப்பின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், “வரும் ஜூலை 26-ஆம் தேதி திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல், செப்டம்பர் மாதம் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட 6 முக்கியப் பிரச்சினைகளை முதன்மையாக வைத்து மக்களை நேரில் சந்திக்கவுள்ளோம். இதன் முதற்கட்டமாக அடுத்த மாதம் 50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்” என்றார்.
இளைஞர்களும் பெண்களுமே பலம்
பொதுவாக அரசியல் கட்சிகளில் பெண்களின் பங்கு 5 சதவீதத்தைத் தாண்டாத நிலையில், இந்த அமைப்பில் உள்ள 19 லட்சம் உறுப்பினர்களில் 17 சதவீதம் பேர் பெண்கள் என்றும், 39 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் 54 சதவீதம் பேர் (18-25 வயது வரை 14%, 25-36 வயது வரை 40%) உள்ளனர் என்றும் அண்ணாமலை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மாநாட்டில் அண்ணாமலை வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்:
டாஸ்மாக் கடைகளை மக்களே மூடுவார்கள்: தமிழகத்தில் குற்றங்களுக்குப் பின்னணியில் மதுவும் கஞ்சாவும் இருக்கின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 500 மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை அரசு உடனடியாக மூட வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்களே நேரடியாகச் சென்று டாஸ்மாக் கடைகளை மூடுவார்கள்.
சாதி, மதமற்ற இயக்கம்:
இந்த அமைப்பிற்கு வெளியேதான் சாதியும் மதமும். வீட்டை விட்டு வெளியே வரும்போது அவற்றை வீட்டிலேயே வைத்துவிட்டு, ஒரு மனிதனாக, இந்தியனாக மட்டுமே பெருமிதத்துடன் வெளியே வருகிறேன்.
உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மையம்
நேர்மையானவர்களை அமைச்சர்களாக உருவாக்கும் நோக்கில், வரும் அக்டோபர் 15-ஆம் தேதி கோவையில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மையம் தொடங்கப்படும். இதன் மூலம் ஓராண்டில் 1.15 லட்சம் பேருக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
Z+ பாதுகாப்பு மறுப்பு:
பாஜகவிலிருந்து வெளியேறிய பிறகு எனக்கு வழங்கப்பட்ட Z+ பாதுகாப்பைத் திரும்பப் பெறக் கோரி அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். நாங்கள் அந்தப் பாதுகாப்பைப் பயன்படுத்தவில்லை.
தொழிற்சங்கப் பேரவை:
தொழிலாளர்களின் நலனுக்காக “என் மண், என் மக்கள்” தொழிற்சங்கப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.
உண்மையான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சி, பண்பாட்டு மீட்சி, ஆட்சியில் புரட்சி ஆகிய ஐந்து முக்கிய நோக்கங்களுடன் அண்ணாமலை தொடங்கியுள்ள இந்த புதிய அரசியல் நகர்வு தமிழக அரசியலில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
