நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணமடைந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சாமானியர்களுக்கு ஒரு சட்டம், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு சட்டம் என காவல்துறை இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
“நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்திருப்பது அறிந்து பெரும் அதிர்ச்சியுற்றேன். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் கூறப்படும் விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.
சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் தற்போதைய போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் அரசு உடனே தலையிட்டு, உயிரிழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மனின் மரணத்துக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் சிறையில் மரணமடைந்த விவகாரமும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ள கண்டனமும் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
