தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வாடிக்கையாளர்கள் நம்பி அடகு வைத்த சுமார் 139 பவுன் தங்க நகைகளைத் திருப்பிக் கொடுக்காமல், கடையைப் பூட்டிவிட்டு உரிமையாளர் உட்பட மூன்று பேர் தலைமறைவாகியுள்ள அடுக்கடிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பூட்டப்பட்ட அடகுக்கடை
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்ற துரைமுருகன் (38). இவர் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அருகில் ‘ஸ்ரீமுருகன் கோல்டு லோன்’ என்ற பெயரில் தனியார் நகை அடகுக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்தச் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்களின் அவசரத் தேவைகளுக்காக இந்த அடகுக்கடையில் நகைகளை அடகு வைத்து கடன் பெற்று வந்தனர். இந்நிலையில், ரோசனபட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (39) என்பவர், தனது 6 பவுன் தங்க நகையை இந்த அடகுக்கடையில் அடகு வைத்து 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் கடனைத் திருப்பிச் செலுத்தி, தனது நகையை மீட்பதற்காகக் கடைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு கடை நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பொதுமக்கள் அதிர்ச்சி
அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, கடந்த சில நாட்களாகவே அந்த அடகுக்கடை திறக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த ரமேஷ் மற்றும் அந்த அடகுக்கடையில் நகைகளை வைத்திருந்த மற்ற பொதுமக்களும் தீவிரமாக விசாரித்தபோது, கடையின் உரிமையாளரும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களும் பொதுமக்களின் நகைகளுடன் தலைமறைவாகிவிட்டது உறுதியானது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் திரண்டு சென்று தங்களின் நகைகளை மீட்டுத்தரக் கோரி முறைப்படி புகார் அளித்தனர்.
64 வாடிக்கையாளர்கள் பாதிப்பு
இந்த மோசடிப் புகார்கள் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த தனியார் அடகுக்கடையில் மொத்தம் 64 வாடிக்கையாளர்கள் நம்பி அடகு வைத்திருந்த சுமார் 139 பவுன் தங்க நகைகளைத் திருப்பிக் கொடுக்காமல் உரிமையாளர் துரைமுருகன் மோசடி செய்தது அம்பலமானது. இதனையடுத்து, இந்த இமாலய நகை மோசடி தொடர்பாகக் கடையின் உரிமையாளர் முருகன் என்ற துரைமுருகன், அவருடைய தந்தை முருகேசன் மற்றும் கடை ஊழியரான ஸ்ரீமதி ஆகிய 3 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இந்த மூன்று பேரையும் பிடிப்பதற்காகப் போலீசார் தனிப்படைகள் அமைத்து வலைவீசித் தேடி வருகின்றனர். நம்பிக்கையின் அடிப்படையில் நகைகளை அடகு வைத்த ஏழை மற்றும் நடுத்தர மக்கள், தங்களின் நகைகள் மோசடி செய்யப்பட்டதை அறிந்து கவலையில் ஆழ்ந்துள்ளனர். இச்சம்பவம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
