இந்திய ரயில்வேயின் உட்கட்டமைப்பை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அம்ரித் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் ₹135 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், நாடு முழுவதும் சுமார் ₹1,570 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள 75 ரயில் நிலையங்களைப் பிரதமர் ஒரே நேரத்தில் திறந்து வைத்தார். இதன் மூலம் தெற்கு ரயில்வேயில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட அம்ரித் ரயில் நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் புதுப்பொலிவு பெற்ற 3 முக்கிய நிலையங்கள்
தெற்கு ரயில்வேயில் திறக்கப்பட்ட 9 நிலையங்களில், பாலக்காடு கோட்டத்தில் 4, திருவனந்தபுரம் கோட்டத்தில் 2, சேலம் கோட்டத்தில் 2 மற்றும் சென்னை கோட்டத்தில் 1 ரயில் நிலையங்கள் அடங்கும். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 முக்கிய ரயில் நிலையங்கள் முற்றிலும் புதுப்பொலிவு பெற்றுள்ளன.

சென்னை பூங்கா ரயில் நிலையம் (₹14.79 கோடி)
இந்த முக்கிய புறநகர் ரயில் நிலையம் அதிநவீன போக்குவரத்து சந்திப்பாக மாற்றப்பட்டுள்ளது. மிகப்பெரிய புதிய நுழைவாயில் முகப்பு மேற்கூரை, நவீன காத்திருப்புப் பகுதியுடன் கூடிய பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம், கூடுதல் மேற்கூரைகள் மற்றும் டிஜிட்டல் தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பறக்கும் ரயில் (MRTS), மெட்ரோ ரயில் மற்றும் சுரங்கப்பாதைகளைத் தடையின்றி இணைக்கும் வகையில் 2 புதிய மின்தூக்கிகள் (Lifts) மற்றும் பிரத்யேக நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் அருகில் உள்ள சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வருபவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

குன்னூர் ரயில் நிலையம் (₹12.18 கோடி)
யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயில் பாதையின் முக்கிய நிறுத்தமான குன்னூர் ரயில் நிலையம், அதன் பாரம்பரியப் பழமை மற்றும் கட்டிடக் கலை மாறாமல், அதேநேரம் பயணிகளுக்கான அனைத்து நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
சின்னசேலம் ரயில் நிலையம் (₹15.14 கோடி)
சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட இந்த ரயில் நிலையம் பயணிகள் பயன்பாட்டிற்காகப் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 6 ரயில் நிலையங்கள் திறப்பு
இதுதவிர, தெற்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் வரும் கேரள மாநிலத்தின் திரூர் (₹26.55 கோடி), தலச்சேரி (₹22.32 கோடி), நிலம்பூர் ரோடு (₹16.44 கோடி), பரப்பனங்காடி (₹14.21 கோடி), சாலாக்குடி (₹9.94 கோடி) மற்றும் அங்கமாலி ஆகிய 6 ரயில் நிலையங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுப் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. “வளர்ச்சியும், பாரம்பரியமும்” (Vikas Bhi, Virasat Bhi) என்ற தொலைநோக்கிக் கொள்கையின் அடிப்படையில், அந்தந்தப் பகுதியின் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியக் கலை நயங்களுடன் இந்த ரயில் நிலையங்கள் வடிவமைக்கப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்புடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு: 12 பேருக்கு தொற்று, 4 பேர் உயிரிழப்பு!
