தமிழர்களின் பாரம்பரிய இசை, கலை மற்றும் தொன்மையான வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டியது தற்காலத்தின் மிக முக்கியமானத் தேவை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சங்கத்தமிழ் இசை தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் உரையாற்றியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு,

பழம்பெருமை பேசுவது பீற்றிக்கொள்ள அல்ல!
நிகழ்ச்சியில் பேசிய சீமான், “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி” எனும் தொன்மை வரிகளைச் சுட்டிக்காட்டினார்.”நாம் நமது பழம்பெருமைகளைப் பேசுவது வெறும் பீற்றிக்கொள்வதற்காக அல்ல; கடந்தகால வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்று நம்மைக் கடந்துவந்த பாதையில் தேற்றிக்கொள்வதற்காகவே ஆகும்.” என தெரிவித்தாா். மேலும், நமது முன்னோர்கள் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்த நிலை மாறி, சமூகத்தில் சாதியை வளர்த்ததால் வீழ்ச்சி ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் கலை மற்றும் இசை மூலமாகச் சங்கத்தமிழை மீட்டெடுக்கும் இத்தகைய முயற்சிகள் வாழ்த்தத்தக்கவை என்றார்.
உயிர்களை மயக்கும் தமிழர் இசையின் ஆற்றல்
இசையின் மகத்துவம் குறித்துப் பேசிய சீமான் தெரிவித்ததாவது, 2,000 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் “குழலினிது யாழினிது” என இசைக்கருவிகளின் பயன்பாடு போற்றிப் பாடப்பட்டுள்ளது. ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரை அனைத்தையும் மயக்கும் ஆற்றல் இசைக்கு மட்டுமே உண்டு. உரத்த வெடிச் சத்தத்திற்கு அஞ்சி ஓடும் உயிரினங்கள் கூட, மெல்லிய புல்லாங்குழல் மற்றும் நாதஸ்வர இசைக்கு மயங்கும் என்பதைப் பண்டைய முல்லை நிலத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். தமிழர் இசையான நாதஸ்வரம், தவில், பறை போன்ற மரபுச் செவ்வியல் கருவிகளின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, பிற இசை வடிவங்கள் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய நிலை மாற்றப்பட வேண்டும்.
கலை வடிவங்களைப் பாதுகாக்க அழைப்பு
‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சிங்கார வேலனே தேவா” பாடலைக் குறிப்பிட்டுப் பேசிய சீமான், எந்தவித ஆடம்பரக் காட்சி அமைப்புகளும் இன்றி வெறும் நாதஸ்வர இசையாலும் குரலாலும் மட்டுமே காலத்தை வென்ற மாபெரும் கலைப் படைப்புகளைத் தமிழர்கள் உருவாக்கியுள்ளனர் என்பதை நினைவூட்டினார். தமிழ் வழிபாட்டு முறைகள், சங்க இலக்கியப் பாடல்கள் மற்றும் கலை வடிவங்கள் மூலமாக அடுத்த தலைமுறைக்குத் தமிழ் மரபைக் கடத்த வேண்டிய மாபெரும் பொறுப்பு ஒவ்வொரு தமிழருக்கும் உள்ளது என்று கூறித் தனது உரையை அவர் நிறைவு செய்தார்.
